மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

குற்றம் புரிந்தவர்

சமையலறையா, சவக்குழியா..?

குற்றம் புரிந்தவர்

மார்ச் 24, 1953. லண்டனில் வசதியற்றவர்கள் வசிக்கும் நாட்டிங் ஹில் பகுதி. பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து பெரஸ்ஃபோர்ட் ப்ரௌன் என்பவன் காவல் துறையைத் தொடர்பு கொண்டான்.

'கொலை... கொலை... நம்பர் 10, ரில்லிங்டன் ப்ளேஸ்' என்றான் பதற்றத்துடன்.

காவல் துறையினர் வந்தனர். 10-ம் எண் வீட்டில் கீழ்த்தளத்தில் இருந்த சமையல் அறைக்கு அழைத்துச் சென்றான் ப்ரௌன்.

அங்கு சுவரில் பதிக்கப்பட்டிருந்த மர அலமாரி உடைந்திருந்தது. உள்ளேயிருந்து கடுமையான துர்நாற்றம். உற்று நோக்கிய போலீஸார் அங்கே பிணம் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.

அலமாரியை உடைத்தனர். அதிர்ச்சி கூடியது. அங்கே ஒன்றல்ல, மூன்று பெண்களின் அழுகிய உடல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

வீடு முழுவதையும் போலீஸ் ஆராய்ந்தது. வீட்டின் பின்புறத்திலிருந்த காலியிடத்தில் மேலும் இரு பெண்களின் பிணங்கள் புதைக்கப்பட்டிருந்தன. வீட்டுக்குள் மேலும் ஒரு பெண்ணின் பிணம் கிடைத்தது.

ஆறு பிணங்களையும் பரிசோதனை​க்கு அனுப்பினர். தகவல் அளித்த ப்ரௌன், கட்டடத்தின் உரிமையாளர் மற்று​ம் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஆகியோரிடம் விசாரணையைத் தொடங்கினர்.

'இது ஜான் கிரிஸ்டியின் வேலை​யாகத்தான் இருக்கும்'' என்று அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

யார் இந்த ஜான் கிரிஸ்டி?

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம், இங்கிலாந்தின் யார்க் ஷையர் பகுதியில் ஜான் ரெஜினால்ட் கிரிஸ்டி பிறந்தான்.

மாணவனான கிரிஸ்டி படிப்பில் கெட்டிக்காரன். ஆனால், சின்ன வயதில் இருந்தே வக்கிர புத்தி. பெண்களைக் கண்ட இடங்களில் தொட்டு, விஷமத்துடன் சீண்டினான். 

குற்றம் புரிந்தவர்

முதலாம் உலகப்போர் நிகழ்ந்தபோது, கிறிஸ்டி போர் தொடர்பான பல சிறு வேலைகள் செய்து பணம் சம்பாதித்தான். போருக்குப் பின்னர் வேலை இல்லாமல் போய், வருமானம் நின்றது.

திருட்டு, ஆள் மாறாட்டம், பொய்க் கையெழுத்து, பணத்துக்காக அடிதடி எனப் பல பித்தலாட்டங்களை செய்து, பலமுறை சிறைக்கும் அனுப்பப்பட்டான். இவற்றுடன் இன்னுமொரு திரைமறைவுத் தொழிலிலும் ஈடுபட்டிருந்தான் கிரிஸ்டி.

'எனக்கு மருத்துவம் தெரியும்’ என்று சொல்லிக் கொண்ட அவன், 'கருக்கலைப்பு ஸ்பெஷலிஸ்ட்’ என்ற செய்தியையும் பரப்பி வந்தான்.

'ரகசியக் கருக்கலைப்புக்காக’ விலைமாதர்கள் பலர் அவனை நாடி வந்தார்கள்.

இதற்கிடையில், 1920-ம் வருடம் ஈதல் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். அவனது மோசமான நடவடிக்கைகளைத் தாங்கமுடியாமல் நான்கே வருடங்களில் ஈதல் அவனைப் பிரிந்து சென்றாள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்டி அவளைச் சந்தித்து சமாதானப்படுத்தி, மீண்டும் அவனுடன் வாழத் தொடங்கினாள்.

இந்த நிலையில்தான், 1937-ம் ஆண்டில், கிரிஸ்டியும், ஈதலும், நாட்டிங்ஹில்லில், 10, ரில்லிங்டன் ப்ளேஸ் என்ற விலாசத்தில் இருந்த மூன்று மாடிக் கட்டடத்தில் குடியேறினர். கீழ்த்தளத்தில் இரு அறைகளும் ஒரு கிச்சனும் கொண்ட சிறிய பகுதி அவர்களுடையது.

உலகம் அமைதியாக இருக்கப் பிடிக்காமல், இரண்டாவது உலகப் போர் வெடித்தது. போர்க்கால காவல் துறை வேலையில் சேர விண்ணப்பித்தான் கிரிஸ்டி. அவசரத்தில் அவனது குற்றப் பின்னணியைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே வேலை கொடுக்கப்பட்டது.

திருட்டு, பித்தலாட்டம் போன்றவற்றையே தொழிலாகக் கொண்டிருந்த கிரிஸ்டி, அதிகாரங்கள் நிரம்பிய போலீஸ்காரனாகவும் ஆனான்.  

அவனது திரைமறைவு வேலைகள் தீவிரமாயின. விலைமாதர்களுடனான நெருக்கம் அதிகரித்தது. தன் நடவடிக்கைகள் எதுவும் ஈதலுக்குத் தெரியாதவண்ணம், சாமர்த்தியமாக நடந்து​ கொண்டான்.

போர் முடிவுக்கு வந்தது. வேலை போனது. பணம் சம்பாதிப்பதற்காக அவன் ஈடுபட்ட ரகசியக் குற்றங்கள் வளர்ந்தன. கௌரவமான குடிமகன் என்ற போர்வையில் அனைத்து மோசமான வழிகளிலும் பணம் சம்பாதித்த கிரிஸ்டி, தன் கறுப்பு வாழ்க்கையைப் பல வருடங்கள் வெற்றிகரமாக ஓட்டினான்.

இந்தப் பின்னணியில், 1952-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் கிரிஸ்டியின் மனைவி ஈதல் திடீரென்று காணாமல் போனாள்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும், தெரிந்தவர்களும் ஈதலைப் பற்றி விசாரித்தனர்.

அக்கம்பக்கத்தவரிடம், 'உறவினர்களைப் பார்க்க ஊருக்குப் போயிருக்கிறாள்’ என்றான். தொலைவில் இருந்தவர்களிடம், 'முடக்குவாதம் வந்து படுத்த படுக்கையாக இருக்கிறாள்’ என்றான். இப்படி ஒவ்வொருவரிடமும் கிறிஸ்டி ஒவ்வொரு காரணம் சொன்னான்.  

தர்மசங்கடமான கேள்விகளைத் தவிர்ப்பதற்காக, தான் குடியிருந்த வீட்டை, வீட்டுச் சொந்தக்​காரருக்குத் தெரியாமல், வேறு ஒருவருக்கு அதிக வாடகைக்கு விட்டு விட்டு, வேறு பகுதிக்குச் சென்று வசிக்கலாம் என்று தீர்​மானித்தான்.  

மனைவி ஈதலின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவளைப் போலவே கையெழுத் திட்டு சுருட்டினான்.

சமையல் அறையைப் பூட்டி, சாவியைத் தன்னிடமே வைத்துக்கொண்டு, கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் இருந்த இரண்டு அறைகளை மட்டும் வாடகைக்கு விட்டான். வேறு வீட்டுக்குக் குடி போனான்.  

கிரிஸ்டி இடம்பெயர்ந்து சில நாட்களே ஆகியிருக்கும். 10, ரில்லிங்டன் ப்ளேஸ் கட்டடத்தின் உரிமையாளர், குடியிருப்பைப் பார்வையிடுவதற்காக வந்தார். கீழ்ப்பகுதியை கிரிஸ்டி வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கோபம் கொண்டார். அங்கே குடியிருந்தவர்களை உடனடியாகக் காலி செய்ய உத்தரவிட்டார்.

அந்தக் கட்டடத்தின் மேல்தளத்தில் சமையல் அறை இல்லாமல் இருந்தது. அதில் குடியிருந்த பெரஸ்ஃபோர்ட் ப்ரௌன், கீழ்ப்பகுதி வீட்டின் சமையல் அறையை வாடகைக்குத் தருமாறு உரிமையாளரை வேண்டினான். அவரும் ஒப்புக்கொண்டார்.

மார்ச் 24, காலை. கீழ்ப்பகுதி வீடு காலியானதும், அதன் சமையல் அறைப் பூட்டை உடைத்துத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் ப்ரௌன். துர்நாற்றம் தாக்கியது. துர்நாற்றம் சுவரிலிருந்த அலமாரியிலிருந்து வருவதாகத் தோன்றியது.

எலி செத்திருக்கும் என்றெண்ணி, ஒரு பக்கம் உடைந்துபோயிருந்த அலமாரியை நெருங்கி ஆராய்ந்தான்.

உடைந்திருந்த பகுதிக்குப் பின்னால் இருந்த இடைவெளியில் ஒரு மனித உடல் தென்பட்டது.  பயந்துபோய் உடனே காவல் துறைக்குத் தகவல் கொடுத்தான்.

காவல் துறையினர் கிரிஸ்டியைத் தேடத் தொடங்கினர்.  

இதற்கிடையே பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது.

ஆறு பெண்களும் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஐந்து பேர் இளம் வயதினர்.

ஆறாவது பிணம் சற்றே வயதான பெண்ணுடையதாக இருந்தது. அது கிரிஸ்டியின் மனைவி ஈதல் என்று பிரேதப் பரிசோதனை அறிவித்தது.

மேலும் ஒவ்வொருவரும் எப்போது கொலையாகி இருக்க வேண்டும் என்று பரிசோதனைகள் முடிவுசெய்தன.

குற்றம் புரிந்தவர்

அந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு காவல் துறை, கொலையான பெண்கள் யார் என்று கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியது.  

10, ரில்லிங்டன் ப்ளேஸ் குடியிருப்புப் பகுதியின் பயங்கரங்களைப் பற்றி பத்திரிகைகள் விவரமாக எழுதின.

போலீஸ் தன்னைத் தேடுவதை அறிந்ததும், கிரிஸ்டி தலைமறைவானான். மாறுவேடங்களில் சுற்றித் திரிந்தான்.

அதிர்ஷ்டம் அவன் பக்கம் இல்லை. மார்ச் 31-ம் தேதி, ஒரு படகுத் துறையில் அவன் போலீஸிடம் பிடிபட்டான்.

விலைமாதர்களின் பிணங்கள், மனைவியின் உடல் ஆகியவை பற்றிய பரிசோதனை அறிக்கைகளுடன் போலீஸ் அவனைக் கேள்வி​களால் துளைத்தெடுத்தது.

'ஐயோ, எனக்கும், இவற்றுக்கும் தொடர்பே இல்லை’ என்று சமாளிக்க முயன்ற கிரிஸ்டி, 'தக்க’ விசாரணைக்குப் பிறகு எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான்.

'ருத் யூரெஸ்ட், மூரியல் ஏடி, ரீட்டா நெல்ஸன், கத்லீன் மலோனி, ஹெக்டோரினா மெக்லினன் ஆகிய விலைமாதர்களைக் கொன்று, வீட்டுக்குள்ளேயே புதைத்தேன். இதைப் பற்றித் தெரிந்துகொண்ட என் மனைவி ஈதலையும் வேறுவழியின்றி, தீர்த்துக் கட்டினேன்' என்று வாக்குமூலம் கொடுத்தான்.

கொலைகளை எவ்வாறு செய்தான் என்று அவன் கூறியதைக் கேட்டு காவல் துறை அதிர்ந்தது.    

ரகசியக் கருக்கலைப்புக்காக அவனை அணுகிய விலைமாதர்களை, மனைவி இல்லாத நேரங்களில் வீட்டுக்கு வரவழைப்பான்.

அவர்களிடமிருக்கும் பணத்தைக் கவர்ந்துகொண்டு, அவர்களைக் கட்டாயப்படுத்தி விஷவாயுவை முகரச் செய்வான்.

மயக்கமடைந்தவுடன் அவர்கள் கழுத்தை நெரித்துக் கொன்று, பிணங்களுடன் உடலுறவு கொள்வான்.  

'பெண்களின் பிணங்களுடன் உடலுறவு கொள்வதைப்போல் நிறைவு அளிக்கும் வேறு செயல் இருக்கவே முடியாது' என்று விசாரணையில் அந்தக் காமக் கொடூரன் கூறியபோது காவல் துறையினரே நடுங்கிப் போனார்கள்.

உடல்களிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க, சில ரசாயனப் பொடிகளைத் தூவி, அவற்றை வீட்டுக்குள்ளேயே அவன் புதைத்து வந்தான்.

1953 ஜூன் 22-ம் தேதி கிரிஸ்டி மீது கொலைக் குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

'மனோவியாதியால் பாதிக்கப்பட்டுள்ள கிரிஸ்டி அரைப்பைத்தியமான நிலையில்தான் இந்தக் கொலைகளைச் செய்தான். அவன் மீது கருணை காட்டவேண்டும்' என்று அவனது வழக்கறிஞர் வாதாடினார். அந்த வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை. அவன் செய்த கொலைகளுக்காக, மரண தண்டனை விதித்தார்.

கிரிஸ்டியின் கதை சாதாரணமாக முடிந்திருந்தால், இங்கிலாந்தின் நீதித்துறை அவமானத்தில் தலைகுனிய நேர்ந்திருக்காது. தூக்குமேடையை எதிர்பார்த்து, கிரிஸ்டி சிறையில் இருந்தபோது, காவல் அதிகாரிகளிடம் பேச விரும்புவதாகச் சொன்னான்.

'எப்படியும் மரண தண்டனை விதித்துவிட்டீர்கள். நான் செய்த இன்னொரு கொலை பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்...'

'யார் அது..?'

'அப்பாவிப் பெண் பெரில் ஈவன்ஸைக் கொன்றதும் நான்தான். அந்த வழக்கின் தீர்ப்பை இனி எப்படித் திருத்துவீர்கள்' என்று அவர்களிடம் நக்கலாகக் கேட்டான்.  

பெரில் ஈவன்ஸ் (Beryl Evans) என்ற பெயரைக் கேட்டதும், இங்கிலாந்தின் காவல் துறை மாபெரும் அதிர்ச்சிக்குள்ளானது.  

காவல் துறை அதிர்ச்சியுறும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்தது?

அடுத்த இதழில்...

- குற்றம் தொடரும்

மரத்துப் போனதா மனங்கள்?

கடிதங்கள்

அமைச்சர்கள் மக்களுக்காக சேவை செய்கிறார்களோ இல்லையோ, ஜெயலலிதாவுக்காகப் பரிகார பூஜை செய்யத் தவறுவதே இல்லை. ஒருவர் செய்த பரிகாரத்துக்கு போட்டியாக மற்றவர் வேறொரு பரிகாரம் என்ற போட்டியும் நடக்கிறது. நிறைய ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைத்தும் பரிகாரம் தேடிக்கொள்கிறார்கள். திருமணம் செய்து வைப்பது நல்ல விஷயம்தான். ஆனால், திருமணமானவருக்கே மறுபடியும் செய்து வைக்காமல் இருந்தால் சரி!

- செல்வராஜ் சித்தப்பா, பூம்புகார் மேலையூர்.

'அரசிடம் அறிக்கை கேட்பேன்’ என்று கவர்னர் சொல்வது நல்ல வேடிக்கையாக இருக்கிறது. இது, 'நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுவது மாதிரி நடி’ என்பதுபோல் இருக்கிறது. எல்லாமே வெறும் நடிப்புதான் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிகிறது.

- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்).

வனக் கல்லூரி, ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் தீனதயாள் மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் என அனைத்துமே உணர்த்துவது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பின்மையையே. மாணவர்களின் எதிர்காலம் பாழ்படுவதை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு மரத்துப் போனதா மனங்கள்?

சிவமைந்தன், சென்னை-78