என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

''அ.தி.மு.க-விலேயே அடக்கமான அமைச்சர் யார்?''

நானே கேள்வி... நானே பதில்!

''அ.தி.மு.க-வில் எல்லோருமே ஜெயலலிதா வுக்கு அடக்கமான அமைச்சர்கள்தான். ஆனால், யோசித்துப் பாருங்கள், 5 வருஷங்கள் கவுன்சிலராக இருந்தவர்கள்கூட முன்னாள் எம்.சி. என்று பெயருக்குப் பின்னால் போட்டு அலப்பறையைக் கொடுப்பார்கள். ஆனால், தமிழக முதல்வராகச் சில காலங்கள் இருந்தாலும், தன் பெயருக்குப் பின்னாலோ, முன்னாலோ 'முன்னாள் முதல்வர்’ என்று போட்டுக்கொள்ளாத ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க-வில் மட்டும் அல்ல, அகில இந்திய அளவிலும் அடக்க மான அரசியல்வாதி!''

- எஸ்.கருணையானந்தம், உசிலம்பட்டி.

##~##

''நெகட்டிவ் எண்ணங்களே தேவை இல்லையா?''

''கட்டாயம் தேவை. பாசிட்டிவ் திங்கிங் இருப்பதால்தான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், யாரோ ஒருவருக்கு நெகட்டிவ் திங்கிங் இருந்ததால்தான் பாராசூட் கண்டுபிடிக்கப்பட்டது!''

- ஜெ.கண்ணன், சென்னை-101.

''தி.மு.க-வை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்துபோவார்கள்’ என்று ஆவேசப்படுகிறாரே ஸ்டாலின்?''

''இப்படித்தான் தேர்தலுக்கு முன்பு அழகிரி, 'தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது’ என்றார். ஆனால், அ.தி.மு.க-வோ ஆளும் கட்சியாகிவிட்டது. இப்போது தி.மு.க-வுக்குத் தேவை பரிசுத்தமானவர்கள் என்று நிரூபிக்கும் முயற்சிகளே தவிர, பஞ்ச் டயலாக்குகள் அல்ல!''

- ஆர்.ஆர்.பூபதி, கன்னிவாடி.

''எந்த மாற்றத்திலும் மாறாதது?''

''ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும், 'இந்த குண்டுவெடிப்பு கோழைத்தனமானது, இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சவாலைச் சந்திக்க வேண்டும்’ என்ற மன்மோகனின் வழக்கமான அறிக்கை. சமயங்களில் குண்டு வெடிப்பைவிடக் கொடுமையாக இருக்கிறது, மன்மோகனின் தேய்ந்துபோன ரெக்கார்ட் அறிக்கை!''

- மதிமலர், கோயம்புத்தூர்.

'' 'திருச்சி இடைத்தேர்தலில் நாங்களும் போட்டியிட மாட்டோம், யாரையும் ஆதரிக்கவும் மாட்டோம்’ என்று சொல்லி இருக்கிறாரே ராமதாஸ்?''

''அவர்கள் போட்டியிடாதது அந்தக் கட்சிக்கு நல்லது, யாரையும் ஆதரிக்காமல் இருப்பது சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கும் நல்லது!''

- தீபா, ஊட்டி.

''விரக்தி... விரக்தி என்கிறார்களே, அப்படின்னா என்னங்க?'

''கலிஃபோர்னியாவில் வாங்கிய எங்கள் காரின் டிரான்ஸ்மிஷனுக்கு 90 நாட்கள் வாரன்டி. சரியாக 89-வது நாளில்டிரான்ஸ் மிஷன் அவுட். அதைச் சரிசெய்ய பில்லில் இருந்த டோல் ஃப்ரீ எண்ணுக்குக் கூப்பிட்டேன். அதற்குப் பிறகு நடந்த உரையாடல்...

கம்ப்யூட்டர் குரல்: உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றால், எண் ஒன்றை அழுத்தவும். ஸ்பானிஷ் என்றால், எண் இரண்டை அழுத்தவும்.

நான் 1-ஐ அழுத்துகிறேன்.

கம்ப்யூட்டர் குரல்: உங்கள் கார் புதியது என்றால், எண் ஒன்றை அழுத்தவும். பழையது என்றால், எண் இரண்டை அழுத்தவும்.

நான் 1 - ஐ அழுத்துகிறேன்.

கம்ப்யூட்டர் குரல்: காலர் ஐ.டி-யில் தெரியும் எண் உங்களுடையது என்றால், எண் ஒன்றை அழுத்தவும். இல்லாவிட்டால், இரண்டை அழுத்தவும்.

------------------------------------------------------

------------------------------------------------------

------------------------------------------------------

இப்படியே 20 நிமிடங்கள் ஓட, இறுதியாக...

கம்ப்யூட்டர் குரல்: உங்கள் உதவிக்கு நன்றி. சிறிது பொறுத்திருங்கள். கஸ்டமர் சர்வீஸில் இருந்து உங்களைத் தொடர்புகொள்வார்.

அர்த்தம் இல்லாத டெக்னோ இசை பரவ, நான் பல்லைக் கடித்தபடியே தொலைபேசியைக் காதில் வைத்திருக்கிறேன். ஓரிரு நிமிடங்கள் கழிகின்றன. திடீர் என்று தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. நான் பல்லைக் கடித்த படியே மறுபடி டயல் செய்கிறேன்.

கம்ப்யூட்டர் குரல்: உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றால், எண் ஒன்றை அழுத்தவும். ஸ்பானிஷ் என்றால், எண் இரண்டை அழுத்தவும்.

இது உங்களுக்கும் நிகழ்ந்தால் வரும் பாருங்கள் ஒரு கொலை வெறி, அதுதான் விரக்தி!

- கீதாபென்னட், கலிஃபோர்னியா.

நானே கேள்வி... நானே பதில்!