மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

குற்றம் புரிந்தவர்

காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி..!

குற்றம் புரிந்தவர்

1949. கிரிஸ்டி குடியிருந்த அதே 10, ரில்லிங்டன் ப்ளேஸ் கட்டடத்தின் மேல்தளத்தில் திமோதி ஈவன்ஸ் தன் மனைவி பெரில் ஈவன்ஸுடன் வசித்துக் கொண்டிருந்தான். ஜெரால்டைன் என்ற பெண் குழந்தையும் இருந்தது.

திமோதி ஈவன்ஸ் லாரி டிரைவர். எழுதப்படிக்கத் தெரியாதவன். கள்ளம் கபடமற்றவன். சொற்ப வருமானத்தைக்கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். பெரில் மீண்டும் கருவுற்றாள். கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அந்தத் தம்பதியர் இன்னும் ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது? கீழ்வீட்டில் குடியிருந்த, 'கருக்கலைப்பு நிபுணன்’ கிரிஸ்டி நினைவுக்கு வந்தான்.

'கவலையை விடு. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சவடால் அடித்தான் கிரிஸ்டி. மனைவியையும் குழந்தையையும் கிரிஸ்டியின் வீட்டுக்கு அனுப்பினான்.

1949, நவம்பர் 30. இங்கிலாந்தின் சௌத்வேல்ஸ் பகுதியில் இருந்த காவல் நிலையத்துக்குள் பைத்தியக்காரனைப்போல் நுழைந்தான் திமோதி.

'என் மனைவியை நானே கொன்றுவிட்டேன்' என்று கத்தினான்.  

திமோதியைக் காவல் துறை கைதுசெய்தது. அவன் குடியிருந்த வீட்டையும் கட்டடத்தையும் அக்கம் பக்கத்தையும் அலசியது. கட்டடத்தின் பின்னால், ஒரு மூலையில், சிறியதொரு குளியலறை தென்பட்டது. அதில் ஒரு துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பெரில் ஈவன்ஸின் உடலைக் காவலர்கள் கண்டுபிடித்தனர். அதனுடன் மற்றொரு பிணமும் இருந்தது. அது குழந்தை ஜெரால்டைனின் உடல்.

அருமை மகளின் உடலைக் கண்டு திமோதி உடைந்துபோனான். 'ஐயோ, மனைவியையும், மகளையும் கொன்று விட்டேனே’ என்று கதறி அழுதான்.

குற்றம் புரிந்தவர்

1950, ஜனவரி. மனைவி, மகள் இருவரையும் கொலை செய்த குற்றத்துக்காக, திமோதி மீது காவல் துறை வழக்குத் தொடர்ந்தது.

திமோதி இப்போது தெளிந்திருந்தான்.

'நான் கொலை செய்யவில்லை. என் மனைவி கருவுற்றதால், அதைக் கலைக்கக் கிரிஸ்டியை அணுகினேன். அவன் கூறியபடி மனைவியை, மகளுடன் அவன் வீட்டுக்கு அனுப்பினேன். சிறிது நேரத்துக்குப் பின் கிரிஸ்டி என்னைக் கூப்பிட்டான். என் மனைவி, கருக்கலைப்பு செய்யும்போது இறந்துவிட்டதாகக் கூறினான்.

பின்னர் அவனே, 'இது வெளியே தெரிந்தால் போலீஸ் உன்னைப் பிடித்துக்கொள்ளும். உடனே லண்டனைவிட்டு வெளியேறு. சிறிது காலம் தலைமறைவாய் இரு. உன் மனைவியின் உடலை, சாக்கடையில் எறிந்து, அப்புறப்படுத்தி விடுகிறேன். குழந்தையை எனக்குத் தெரிந்த குடும்பத்தினரிடம் தத்துக் கொடுக்கிறேன். போய்விடு’ என்றான்.

துக்கத்திலும், பயத்திலும் குழம்பிப் போயிருந்த நான், அவன் சொன்னதை நம்பி அங்கிருந்து ஓடிப் போனேன். லண்டனை விட்டுச் சென்றதும், நான் செய்தது தவறு என்று தோன்றியது. ஆகவே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, நடந்ததைச் சொன்னேன். உணர்ச்சிவசப்பட்ட நிலையில், 'மனைவியின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டேன்’ என்ற அர்த்தத்தில்தான் நானே கொன்றதாகச் சொன்னேனே தவிர, அவளை நான் கொல்லவில்லை.

'நான் வசித்த கட்டடத்தைப் போலீஸ் சோதனையிட்டபோதுதான், என் மகளும் கொல்லப்பட்டுவிட்டாள் என்று புரிந்தது. என் மனைவி, மகள் இருவரையும் கொன்றது கிரிஸ்டிதான்'' என்று நீதிமன்றத்தில் வாதிட்டான், திமோதி.

கிரிஸ்டியை சர்க்கார் தரப்புச் சாட்சியாக நீதிமன்றத்தில் நிறுத்தியது போலீஸ். திமோதி சொன்னதை வன்மையாக மறுத்தான், கிரிஸ்டி.

''சமூகத்தில் கௌரவமான நிலையில் இருப்பவன் நான். குடும்பப் பிரச்னைகள் காரணமாக, மனைவியைக் கொலை செய்தது திமோதிதான். அந்தப் பழியிலிருந்து தப்பிப்பதற்காக, என் மீது பழி சுமத்துகிறான்'' என்று கூசாமல் சாட்சி சொன்னான்.

நியாயம், தர்மம் பக்கமெல்லாம் நீதிக்கடவுள் எப்போதும் இருப்பதில்லை போலும்! எழுத்தறிவில்லாத லாரி டிரைவரான திமோதி சொன்னது அங்கே எடுபடவில்லை. திருட்டும், கொலைகளும் செய்தே காலம் ஓட்டினாலும், 'மதிப்புமிக்க முன்னாள் போலீஸ்காரர்’ என்று காவல் துறையால் வர்ணிக்கப்பட்ட கிரிஸ்டியின் சாட்சியத்தைத்தான் நம்பி ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்.

'மனைவி பெரிலை திமோதிதான் கொன்றான் என்று உறுதியாகச் சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆனால், மகள் ஜெரால்டைனைக் கொன்றது திமோதிதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆகவே திமோதிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறேன்’ என்று அறிவித்தார் நீதிபதி.

எந்த அருமை மகளின் உடலைப் பார்த்த பின்னரே அவள் கொலையுண்டதை அறிந்து, கதறி அழுதானோ, அந்த மகளைக் கொன்ற குற்றவாளி என்று தீர்ப்பெழுதி, திமோதியை தூக்குமேடைக்கு அனுப்பியது நீதிமன்றம்.

1950, மார்ச் 9-ம் தேதி திமேதி தூக்கிலிடப்பட்டான். உடல் சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது.

1953 ஜூலை மாதம், காவலர்களை அழைத்து, 'அந்த இரு கொலைகளையும் செய்தவன் நான்தான். திமோதியைத் தூக்கிலிட்ட தீர்ப்பை எப்படித் திருத்துவீர்கள்?' என்று கிரிஸ்டி நக்கலாகக் கேட்டபோது, நிரபராதி திமோதி தூக்கிலிடப்பட்டு, பூமிக்குள் புதையுண்டு, மூன்று ஆண்டுகள் கழிந்திருந்தன.

சட்டமே சதி செய்து, ஓர் அப்பாவியைக் கொன்றுவிட்டது என்று செய்தி கசிந்தது. 'நீதி வழங்குவதில் பெரும் தவறு’ என்று பத்திரிைககளிலும், மக்களிடையேயும் கூக்குரல் எழுந்தது.

கொடூரக் கொலைகாரன் கிரிஸ்டி 1953-ம் ஆண்டு, ஜூலை 15-ம் தேதி தூக்கிலிடப்பட்டான்.

1965-ல், பெரில் ஈவன்ஸ் மற்றும் ஜெரால்டைன் கொலைகளில் புதைந்திருந்த உண்மைகளை வெளிக்கொண்டு வர, நீதிபதி டேனியலின் தலைமையில், ஒரு விசாரணைக் கமிஷனை அரசாங்கம் நியமித்தது.

பெரில் ஈவன்ஸ் மற்றும் ஜெரால்டைன் கொலைகள் தொடர்பான விஷயங்களை ஆராய்ந்த டேனியல்  தனது முடிவை இவ்வாறு வெளியிட்டார்:

'திமோதி ஈவன்ஸ், தன் மனைவி பெரிலைக் கொன்றிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனால், மகள் ஜெரால்டினைக் கொன்றிருப்பதற்கான சாத்தியம் இல்லை.'

இந்த அறிக்கை வழக்கை மேலும் குழப்பியது.

மனைவி பெரிலை திமோதி கொன்றதாகச் சொல்ல முடியாது என்று முந்தைய நீதிமன்றத் தீர்ப்பு சொல்லியிருந்தது. 'பெரில் ஈவன்ஸை நான்தான் கொன்றேன்' என்று கிரிஸ்டி ஒப்புக்கொண்டு, வாக்குமூலமே கொடுத்துவிட்டான். இவற்றுக்கு நேரெதிராக திமோதி மனைவியைக் கொன்றிருக்கலாம் என்றது இந்தக் கமிஷன் அறிக்கை.

மகள் ஜெரால்டைனைக் கொலை செய்தது திமோதிதான் என்று சொல்லி அவனைத் தூக்கிலும் ஏற்றியது முந்தைய தீர்ப்பு. ஆனால் திமோதி மகளைக் கொன்றிருக்க முடியாது என்று முடிவு செய்தது, இந்த அறிக்கை.

மனைவி, மகள் இருவரின் கொலைகளுக்கும் திமோதி காரணமில்லை, அவனைக் குற்றவாளியாகக் கருதியது தவறு என்றும், அவனுக்கு மரண தண்டனை விதித்தது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு என்றும் நாடெங்கும் கிளர்ச்சி எழுந்தது.

கிரிஸ்டியின் மோசமான குற்றப் பின்னணியை ஆராயாமல், போலீஸ்காரனாகப் பணி புரிந்த ஒரே காரணத்தால் அவனை மரியாதைக்குரிய சாட்சியாக நீதிமன்றத்தில் நிறுத்தியது, காவல் துறை செய்த தவறு. அவனுடைய வாக்குமூலத்தை ஏற்று திமோதியைக் குற்றவாளியாக அறிவித்தது நீதிபதி செய்த மாபெரும் தவறு.

குற்றம் புரிந்தவர்

1949-ல் 10, ரில்லிங்டன் ப்ளேஸ் கட்டடத்தில், பெரில் ஈவன்ஸின் உடலைத் தேடியபோது அந்த இடத்தை இன்னும் தீவிரமாக ஆராய்ந்திருந்தால், கட்டடத்தின் பின்பகுதியில் இருந்த வெற்றிடத்தில் கிரிஸ்டியால் கொன்று புதைக்கப்பட்டிருந்த இரு விலைமாதர்களின் உடல்கள் அன்றைக்கே கிடைத்திருக்கும்.

திமோதியின் மனைவி, மகள் உடல் கிடைத்ததும், அவர்களும் அதே போல, கழுத்து நெரிபட்டு கொலை செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்திருக்கும். அவர்களைக் கொன்றவனும் கிரிஸ்டிதான் என்பது தெளிவாகி அவன் அப்போதே கைது செய்யப்பட்டிருப்பான்.

அப்பாவி திமோதி அநியாயமாகத் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்க மாட்டான். 1949 முதல் 1953 வரை கிரிஸ்டி மேலும் செய்த நான்கு கொலைகளும் தடுக்கப்பட்டிருக்கும். கிரிஸ்டியின் மனைவியும் உயிர் தப்பிப் பிழைத்திருப்பாள்.  இதுபோன்ற பல ஆய்வறிக்கைகள், மக்களால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

1965-ம் ஆண்டில் 'திமோதி ஈவன்ஸ் நிரபராதி’ என அரசாங்கம் அறிவித்தது. நீதி வழங்குவதில் நிகழ்ந்த தவறுக்கான நஷ்ட ஈடாக, திமோதியின் சகோதரிக்கு, மாதாந்திரத் தொகை ஒன்றையும் அளிக்கத் தொடங்கியது.

இயல்பாக இறந்தவர்களுக்குச் செய்யும் உரிய இறுதிச் சடங்குகள் எதுவும் வழங்கப்படாமல் சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்ட திமோதியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சமயச் சடங்குகளுடன் மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பில் நேர்ந்த தவறைத் திருத்த முடியாத நிலையில், குற்றமற்ற நிரபராதிகள் யாருக்கும் தவறுதலாகக்கூட மரண தண்டனை அளிக்கப்பட்டுவிடக் கூடாது என்று தீர்மானித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இங்கிலாந்தில் மரண தண்டனையையே ரத்து செய்தது.

இந்தக் காரணத்துக்காகவே, இன்றளவும் திமோதி ஈவன்ஸ் இங்கிலாந்து மக்களால் ஒரு நாயகனாகக் கொண்டாடப்படுகிறான்.

- குற்றம் தொடரும்