மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

குற்றம் புரிந்தவர்

 உலகம் பிறந்தது எனக்காக..!

குற்றம் புரிந்தவர்

ஜெர்மனி. ஹேம்பர்க். ஹோட்டல் ப்ரேம். இரவு மணி 11.00.

மார்ட்டின் ஃப்ராங்கெல், தன் சமீபத்திய தோழி சிண்டியுடன் அற்புதமான கடலுணவை சாப்பிட்டுவிட்டு அறையில் ஆசுவாசமாக இருந்தான்.

வெளியிலிருந்து மாற்றுச் சாவி பொருத்தப்பட்டு, கதவு படக்கென்று திறந்தது. துப்பாக்கிகளை நீட்டியபடி, ஜெர்மானிய காவல் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர்.

'அமெரிக்காவின் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளை ஏமாற்றி 200 மில்லியன் டாலர்களுக்கு மேல் கொள்ளையடித்த உன்னைக் கைது செய்கிறோம்' என்றனர் ஜெர்மானிய போலீஸார்.      

பிடிபட்டபோது, அவனிடமிருந்து இரண்டு மில்லியன் டாலர் மதிப்புள்ள வைரக்கற்களும், இரண்டரை லட்சம் டாலர் பணமும் கைப்பற்றப்பட்டன. லேப்டாப், செல்போன்கள், பல போலி பாஸ்போர்ட்களும் பிடிபட்டன.

மார்ட்டின் அவன் பெற்றோருக்கு இரண்டாவது மகன். அடிப்படையிலேயே மேதாவித்தனம் இருந்ததால், படிப்பில் முதன்மையானவனாகத் திகழ்ந்தான். பதின்ம வயதிலேயே பணத்தின் மீது அவனுக்குப் பேராசை எழுந்தது.

பல நூறு மில்லியன் டாலர்களை ஏமாற்றி சம்பாதித்த ராபர்ட் வெஸ்கோ என்பவரின் கதை அவனுக்குப் பிடித்திருந்தது.

பங்குச் சந்தை குறித்து வெளியான அத்தனை புத்தகங்களையும் படித்து அறிவை வளர்த்துக்கொண்டான். பெரும் செல்வந்தனாக வேண்டும் என்ற கனவு, பங்குச் சந்தை மூலமாகவே நிறைவேறப்போகிறது என்று அவனுக்கு அழுத்தமாகத் தோன்றியது.

ஒரு சிறிய பங்குச் சந்தை கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். விரைவிலேயே அந்த கம்பெனியின் வணிகத்தை முழுமையாகப் புரிந்துகொண்டான். முதலாளி ஜானைவிட, அவனுடைய மனைவி சோனியாவை வளைப்பது சுலபம் என்று தோன்றியது. அவளிடம் நட்பை ஆழமாக்கிக்கொண்டான். சாதுர்யமான அவனுடைய பேச்சும், பங்குச் சந்தை பற்றி அவனுக்கு இருந்த ஆழமான அறிவும் சோனியாவை அவன் மீது ஈடுபாடுகொள்ள வைத்தது.

புத்தகத்தில் படித்தது எல்லாம் வேலைக்கு உதவாது என்பதை மார்ட்டின் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அவனால் கம்பெனிக்கு நஷ்டம். ஆனால், மார்ட்டினின் சாமர்த்தியமும் சாதுர்யமும் நாக்கில் அல்லவா இருந்தன.

ஜானின் நண்பர் டெட் பிட்டர் என்பவர், தன்னுடைய சேமிப்பு முழுவதையும் மார்ட்டினின் கைகளில் ஒப்படைத்தார். அத்தனை பணத்தையும் இழந்தார். இது பெரும் பிரச்னையாக வெடித்தது. ஜான், மார்ட்டினை வேலையிலிருந்தே தூக்கினான். ஆனால், ஜானுடைய பெயரைச் சொல்லிக்கொண்டு மார்ட்டின்  செய்திருந்த பல ஏமாற்று வேலைகள் பிற்பாடுதான் அவனுக்குத் தெரிய வந்தன. மார்ட்டின் இனி வாழ்நாள் முழுவதும் பங்குச் சந்தையில் ஈடுபடக் கூடாது என்று பங்குச் சந்தையின் கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்தது.

பெரும் செல்வந்தர்கள் ஃப்ளோரிடாவில் இருப்பதை அறிந்ததும், மார்ட்டின்  அங்கே இடம்பெயர்ந்தான். ஃப்ராங்கெல் ஃபண்ட் என்று ஒரு நிறுவனத்தை நிறுவினான். 'பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழப்பீடு நேர்ந்தால், அதற்குக் காப்பீடு தரப்படும்’ என்று கவர்ச்சிகரமாக வாக்கியம் அமைத்து, பலரைத் தன் பக்கம் ஈர்த்தான்.

குற்றம் புரிந்தவர்

இந்த சமயத்தில் அமெரிக்கன் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்தது. தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த அருமையான சந்தர்ப்பம் என மார்ட்டின் முடிவு செய்தான். ஜான் ஹேக்னே என்ற செல்வந்தரைச் சந்தித்தான்.

'நஷ்டத்தில் தடுமாறும் இந்தக் காப்பீடு கம்பெனியை குறைந்த விலைக்கு வாங்கினால், நிறைய லாபம் கிடைக்கும்' என்று சில கணக்குகள் போட்டுக்காட்டி, அவரை நம்ப வைத்தான். ஜான் ஹேக்னே தன்னுடைய நண்பர்கள் சிலரிடமும் பேசி, முதலீடுகள் கொண்டுவந்தார்.

ஒவ்வோர் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியும் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஒரு பெரும் தொகையை வைப்புத் தொகை​யாக வைத்திருக்க வேண்டும் என்பது சட்ட விதி. அந்த வைப்புத் தொகைதான் மார்ட்டினைக் கவர்ந்திழுத்தது.

இதற்கிடையில் அவனுடைய முதலாளி சோனியா, மகள்களிடமே தகாத முறையில் பழக முயற்சிப்பதாகப் பழிசொல்லி, தன் கணவனை உதறினாள். அவளை இருகரம் கொண்டு அரவணைத்துப் பாதுகாப்பு அளித்தான், மார்ட்டின். மார்ட்டின், அடுத்து, 'தூனார் அறக்கட்டளை’  என்று ஒரு கம்பெனியைத் தொடங்கினான். நிதி நெருக்கடியில் தள்ளாடும் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளைக் குறைந்த விலைக்குக் கையகப்படுத்துவதே இந்த அறக்கட்டளையின் செயல்பாடு.

காப்பீடு கம்பெனிகள் அவன் வலையில் விழுந்தன. அப்படி வாங்கப்பட்ட ஒவ்வொரு கம்பெனியின் வைப்புத் தொகையும் அவன் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. மார்ட்டின் எந்தக் குறையுமின்றி அந்தப் பெரும் தொகையைப் பயன்படுத்த ஆரம்பித்தான். ஒரு கம்பெனியின் வைப்புத் தொகைக்குக் கணக்கு காட்ட வேண்டிய சூழ்நிலை வந்தால், இன்னொரு கம்பெனியின் வைப்புத் தொகையிலிருந்து பணத்தை இடம்பெயர்த்தான். பல்லாங்குழியில் சோழிகளை ஒரு குழியிலிருந்து இன்னொரு குழிக்கு மாற்றுவது போல் வெவ்வேறு கம்பெனிகளில் கையாடிய பணத்தை அவன் மாற்றிக்கொண்டே இருந்ததால், அவனுடைய திருட்டுத்தனம் பல வருடங்களுக்கு வெளியில் தெரியவில்லை.

கையில் கொள்ளை கொள்ளையாகப் பணம் புழங்கியதும், மார்ட்டினின்  வாழ்க்கை முறை மாறியது. வசதியான வீடுகள், கார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் வாசம், பல பெண்களுடன் தொடர்பு என்று சபலங்கள் அவனை ஆக்கிரமித்தன.

பெண்களை அலட்சியப்படுத்தாமல், அவன் உருகி உருகிப் பேசியதால், பல பெண்களும் அவனுடைய வலையில் சுலபமாக விழுந்தனர். சிண்டியும் அவர்களில் ஒருத்தி! 1998 இறுதியில் தூனார் அறக்கட்டளை கிட்டத்தட்ட 434 மில்லியன் டாலர்கள் அசையாச் சொத்து வைத்திருந்தது.

மார்ட்டின்  திருப்தி அடையவில்லை. ரோம் நகரத்தில் இருந்த வாடிகனுடன் தன் கம்பெனி தொடர்பு வைத்தால், அது இன்னும் பலருக்கு நம்பிக்கை அளிக்கும் என்று நினைத்தான்.

கத்தோலிக்க தேவாலயங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொண்டான். வாடிகனில் செல்வாக்கு மிக்கவர்கள் யார் யார் எனத் தகவல் சேகரித்தான்.

தாமஸ் போலன், ஃபாதர் பீட்டர் ஜேக்கப்ஸ், மற்றும் எமிலியோ ஆகியோர் வாடிகனுக்கு நெருக்கமான மூவர் என்பதை அறிந்தான்.

தாமஸ் போலன் செல்வாக்குள்ள வழக்கறிஞர். அமெரிக்க அதிபரின் நண்பர். பல வங்கிகளின் தலைவர்களுடன் நெருக்கமாய் இருந்தவர். ஃபாதர் பீட்டர் ஜேக்கப், நியூயார்க்கின்  ஏழைகளுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். வாடிகனுடன் நெருக்கமானவர். எமிலியோ ரோம் நகரத்தின் மூத்த நீதிபதி. தேவாலயங்களுக்கு நெருக்கமானவர். மார்ட்டின்  அவர்களைச் சந்தித்தான்.

'50 மில்லியன் டாலர்களுக்கு மேல் கத்தோலிக்க அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிக்க நண்பர் ஒருவர் விரும்புகிறார். நீங்கள் உதவ வேண்டும்' என்று கேட்டுக்கொண்டான். கத்தோலிக்கத் துறவிகள் பற்றியும், ஞானிகள் பற்றியும், மார்ட்டின் பேசியதைக் கேட்டு மூவரும் வசீகரிக்கப்பட்டனர்.

'நன்கொடையாக வரும் 50 மில்லியன் டாலர்களை சும்மா தூங்கவிடாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, பெரும் தொகையாகப் பெருக்கலாம். முதலில் ஐந்து மில்லியன் டாலர்களை வாடிகனுக்கு நன்கொடையாக அளிக்கலாம்' என்று அவன் சொன்னான். பதிலுக்கு அவனுடைய அறக்கட்டளைக்கு, வாடிகன் ஒரு நற்சான்றிதழ் அளித்தால் போதும் என்றும் கேட்டுக்கொண்டான்.

அமெரிக்க இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளிலிருந்து கையாடல் செய்யப்பட்ட பணத்தை வைத்துக்கொண்டு அந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது தெரியாமல், வாடிகன் நற்சான்றிதழ் வழங்கியது.

வாடிகனின் முத்திரை கிடைத்ததும், மார்ட்டினின் நிறுவனத்தை யாரும் சந்தேகம்கொண்டு பார்க்கவில்லை. ஒரே ஒருவரைத் தவிர.

ஜார்ஜ் டேல் என்னும் இன்ஷ்யூரன்ஸ் கமிஷனர், நிறைய பணம் பந்தாடப்படுவதைக் கவனித்தார். சந்தேகம் தலைதூக்க, சில போன் கால்கள் செய்தார். பணப் பரிமாற்றங்களை நடத்திய லிபர்ட்டி நேஷனல் செக்யூரிட்டீஸ் என்பது கம்பெனி அல்ல, வெறும் அஞ்சல் பெட்டி முகவரி என்பதை அறிந்தார். தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டார். மார்ட்டினின் கம்பெனிகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார்.

1999, மே மாதம். தன்னைப் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது மார்ட்டினுக்குத் தெரியவந்தது. சட்டத்துக்குப் புறம்பான விதங்களில் பணப் பரிமாற்றங்களில் அவன் ஈடுபட்டதை அறிந்து, சட்டத்தின் பிடி இறுகியது.

அவசரமாகத் திட்டமிட்டான். போலி பாஸ்போர்ட்கள் தயாரிக்கப்பட்டன. பல மில்லியன் டாலர்களை வைரங்களாக மாற்றினான். தன்  வீட்டில் தடயங்களை அழித்தான். அமெரிக்காவை விட்டு வெளியேறினான்.

அவனுக்கான சர்வதேச வேட்டை தொடர்ந்தது. ஜெர்மனியில் அவன் இருப்பதை அறிந்து ஒருவழியாகக் கைது செய்யப்பட்டான்.

'என்னை உங்கள் சிறையிலேயே வைத்திருங்கள். அமெரிக்காவுக்கு அனுப்பிவிடாதீர்கள்' என்று ஜெர்மானியர்களிடம் கெஞ்சினான்.

போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக, ஜெர்மனியில் மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின், அமெரிக்காவிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான்.

'உண்மையில் நான் பணத்தைக் கையாடியது, இந்த உலகில் உள்ள பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கெல்லாம் எப்போதாவது உணவளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான்' என்று மார்ட்டின்  பேட்டி கொடுத்தான்.    

சிறையிலிருந்து தப்பிப்பதற்கும் முயற்சி செய்தான். ஆனால் பிடிபட்டான்.

வாடிகனுடன் நெருக்கமான தொடர்புகள் வைத்திருந்த மூத்த வழக்கறிஞர் எமிலியோவுக்கும், இந்தக் கையாடலில் பங்கு​கொண்டதற்காக தண்டனை அளிக்கப்பட்டது.

வாடிகனின் பெயர் இந்த வழக்கில் இழுக்கப்பட்டால், அதன் செல்வாக்கு குறைந்துவிடும் என்பதற்காக நடந்ததெல்லாம் தனி நபர்களின் முடிவுகளேயன்றி, வாடிகனின் முடிவு அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டது.

சோனியா, மார்ட்டினுக்காகப் பல போலியான கணக்கு விவரங்களைத் தயாரித்துக் கொடுத்ததாக ஒத்துக்கொண்டாள்.

இறுதியாக மார்ட்டினுக்கு, 200 மில்லியன் டாலர்களைக் கையாடியதற்காக 200 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

- குற்றம் தொடரும்

கண்கள் குளமாகின

கடிதங்கள்

ல வருடங்களுக்கு முன்பு, சிறுவர்களைக் கடத்தி கண்களில் கரப்பான் பூச்சியைக் கட்டி கண்களைக் குருடாக்கி பிச்சை எடுக்க வைத்தது குறித்த கட்டுரை ஜூ.வியில் வெளிவந்து அதிர்ச்சியைத் தந்தது. இன்று அதே கடத்தல் தொழில் லட்சக்கணக்கான ரூபாய்கள் சம்பாதிக்கும் கொள்ளையடிக்கும் தொழிலாக விரிவடைந்திருப்பது மிகப்பெரிய வேதனை!

- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

டந்த 37 ஆண்டுகளாக அந்த முகமறியாத 44 ஏழை, எளிய மக்களின் அஸ்தியைக்கட்டிக் காப்பாற்றி வந்த மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஐ.மாயாண்டி பாரதியைப் பற்றிய நினைவுகளை, பாரதி கிருஷ்ணகுமாரின் வரிகளில் வாசித்தபோது கண்கள் குளமாகின!

- ந.தேவதாஸ், வில்லிவாக்கம்.

'வில்வ மரம் வில்லங்கம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை அ.தி.மு.க-வினர் அம்மா மீது எவ்வளவு மரியாதை வைத்துள்ளனர் என்பதை காட்டுகிறது. சில வேண்டுதல்களுக்காக நம்பிக்கை வைத்து அக்கட்சியினர் இதனைச் செய்தாலும், மரக்கன்று நடுதல் என்பது பாராட்டுதலுக்குரியது.

- வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன்,  நாகர்கோவில்.

ரசியல் தலைவர்கள்... போராளிகளின் தலைவர்கள் என்று சிலபேர் எடுக்கும் தவறான முடிவுகள் லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கையில் விரும்பாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்திய, இலங்கைத் தமிழர்களின் கச்சத்தீவு சந்திப்பு உணர்த்துவது இதைத்தான்!

- சிவமைந்தன், சென்னை-78.