நிறம் பார்த்து வெறுப்போர் முன் படைத்தாய் கண்ணா!

இங்கிலாந்து.
1993, ஏப்ரல் 22. பின்மாலைப்பொழுது.
18 வயது ஸ்டீஃபன் லாரன்ஸ், துவேன் ப்ரூக்ஸ் இருவரும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இங்கிலாந்தின் பல பாரம்பர்ய சட்ட விதிகள் மாற்றப்படுவதற்குக் காரணமாக அமையப்போவதை அறியாமல், வீடு திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்கள்.
திடீரென்று, தெருவின் மறுபுறத்தில் ஐந்தாறு வெள்ளை நிற இளைஞர்கள் ஆர்ப்பாட்டமாகச் சிரித்தபடி கூட்டமாக வந்தனர். ஸ்டீஃபனைப் பார்த்ததும், 'என்னடா கறுப்பா!' என்று சத்தமிட்டார்கள்.
ஸ்டீஃபன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவர்கள் என்ன நினைத்தார்களோ, தெருவைக் கடந்து வந்து அவனைச் சூழ்ந்தார்கள். அத்தனை பேரும் பாய்ந்து அழுத்தியதில், ஸ்டீஃபன் தெருவில் விழுந்தான்.
நண்பன் துவேன் மிரண்டு பின்வாங்கினான். பேருந்துக்காகக் காத்திருந்த மற்றவர்களும் சிதறி ஓடினார்கள்.
சுதாரிக்கும் முன், ஸ்டீஃபன் கத்தியால் குத்தப்பட்டான். முதல் கத்தி அவனுடைய வலது மார்புக்கும் தோளுக்கும் இடையில் செலுத்தப்பட்டது. அது நுரையீரலின் மேல்பகுதியைச் சிதைத்தது.
இரண்டாவது கத்திக்குத்து அவனுடைய இடதுபுறக் கழுத்தெலும்பை உடைத்தது. அவனுடைய ரத்தக் குழாய்கள் துண்டிக்கப்பட்டு, குருதி பீறிட்டது.
'ஸ்டீஃபன், ஓடி வந்துவிடு' என்று துவேன் அலறினான்.
வெள்ளைத் தோல் இளைஞர்களை உதறிவிட்டு ஸ்டீஃபனும் எழுந்து ஓட முனைந்தான். ரத்தம் பெருகி தரையில் கொட்ட, நரம்புகள் அறுந்த நிலையில் உணர்வுகள் அவனிடமிருந்து வேகமாக விடைபெற்றுக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட 120 மீட்டர் ஓடியிருப்பான். அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அப்படியே சரிந்து விழுந்தான்.
வெள்ளை இளைஞர்கள் அங்கிருந்து பறந்தோடினர்.
துவேன் ஆம்புலன்ஸுக்கு போன் செய்தான். மருத்துவமனையை அடையும் முன்பே ஸ்டீஃபன் லாரன்ஸின் உயிர் பிரிந்திருந்தது.
காவல் துறை விசாரணையை நடத்தியது. துவேனைத் தவிர நேரடியாகச் சாட்சி சொல்ல யாரும் முன்வரவில்லை.

போலீஸுக்கு பொதுத்தொலைபேசியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. பேசியவள், வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த இளம்பெண்.
''குற்றம் நடந்தபோது பார்த்தவள் நான். ஸ்டீஃபனைத் தாக்கியவர்களின் பட்டியலை இந்தப் பொதுத்தொலைபேசிக் கூண்டில் வைத்திருக்கிறேன். பிடித்துத் தண்டியுங்கள்'' என்று தன் பெயரைச் சொல்லாமல் தொடர்பைத் துண்டித்துவிட்டாள். கேரி டாப்ஸன், நீல் அகவுர்ட், ஜேமீ அகவுர்ட், டேவிட் நாரிஸ் என்ற நான்கு பெயர்கள் கொண்ட பட்டியலைக் கண்டெடுத்தது, போலீஸ். குற்றம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இவர்களின் வீடுகள் கண்காணிக்கப்பட்டன.
ஸ்டீஃபனின் தாயும், தந்தையும் உடைந்து போயிருந்தனர். கறுப்பர் இனத்தின் மீது உள்ள துவேஷம் காரணமாக காவல் துறையினர் தங்களுடைய கோரிக்கைகளை ஏற்று, உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்று கருதினார்கள். தங்கள் வேதனையை நெல்சன் மண்டேலாவைச் சந்தித்துத் தெரிவித்தார்கள்.
*
1993. மே 7.
நீல், ஜேமி, டேவிட், கேரி, லூக் ஆகிய ஐந்து வெள்ளை இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். காவல் துறையின் விட்டேற்றியான போக்கினால், ஜூலை மாதம் போதிய சாட்சியம் இல்லையென்றும், துவேனுடைய சாட்சியத்தில் வலுவில்லை என்றும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
டிசம்பர் மாதம் புதிய சாட்சிகளைக் கொண்டுவருவதாக ஸ்டீஃபனின் தரப்பு, கோரிக்கை வைத்தது. ஆனால், ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை என்று சொல்லி போலீஸ், கை விரித்துவிட்டது.
அரசு வக்கீல்கள் ஒத்துழைக்க மறுத்தனர்.
1994, செப்டம்பர். ஸ்டீஃபனின் பெற்றோர், தனியார் வழக்கறிஞர்களை நியமித்தனர். கேரி, லூக், நீல் ஆகியோர் மீது வழக்குத் தொடுத்தனர். கேரி டாப்ஸன் வீட்டிலும், நாரிஸ் வீட்டிலும் வைக்கப்பட்ட ரகசிய கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளில் அவர்கள் பயன்படுத்திய ஆபாசமான வார்த்தைகள், அவர்கள் வக்கிரமான நிறவெறி பிடித்தவர்கள் என்பதை நிரூபித்தன.
1996, ஏப்ரல். ஆதாரங்கள் புதிதாக முன்வைக்கப்பட்டாலும், துவேன் ப்ரூக்ஸ் கொடுத்த சாட்சியத்தை ஏற்க இயலாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1997, பிப்ரவரியில், குற்றத்தைப் பற்றி மறு விசாரணை நடந்தது. குற்றம்சாட்டப்பட்ட ஐந்து நபர்களும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்கள்.
ஐந்து வெள்ளை இளைஞர்களால் இன வெறிகொண்டு தாக்கப்பட்டு ஸ்டீஃபன் லாரன்ஸ் கொல்லப்பட்டிருக்கிறான் என்று ஜூரிகள் தீர்ப்பெழுதினாலும், அந்த ஐவர் யாரென்று குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், 'டெய்லி மெயில்’ என்ற பத்திரிகை, துணிச்சலுடன் ஒரு வேலை செய்தது. ஐந்து கொலைகாரர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களுடைய புகைப்படங்களை முதல் பக்கத்தில் வெளியிட்டது. 'இந்த தினசரி இவர்களைக் கொலைகாரர்கள் என்று குற்றம்சாட்டுகிறது. தவறாயிருந்தால், அவர்கள் எங்கள் மீது வழக்குத் தொடரட்டும்’ என்று தலைப்புச் செய்தியாக அறிவித்தது.
இப்படி வெளிப்படையாக சவால்விட்டும், ஐவரில் யாரும் செய்தித்தாளின் மீது மான நஷ்ட வழக்கு எதுவும் தொடுக்கவில்லை.
*
2002. தன்னுடைய பணியை முடித்துவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரு கறுப்பினக் காவல் அதிகாரியை வழியில் பார்த்து, டேவிட் நாரிஸும், நீல் அகவுர்ட்டும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டினர். காவல் அதிகாரியிடம் வாலாட்டியதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இந்த நிறவெறி பிடித்தவர்கள் ஸ்டீஃபன் லாரன்ஸை ஏன் தாக்கியிருக்க மாட்டார்கள் என்று ஊடகங்கள் அலறின.
ஒரே குற்றத்துக்காக ஒருவர் மீது இருமுறை வழக்குகள் போட இயலாது (Double Jeopardy) என்று இங்கிலாந்தின் பாரம்பர்ய சட்டவிதிகள் தடுத்தன. அதனால் அந்த ஐந்து வெள்ளை இளைஞர்கள் மீது ஸ்டீஃபன் கொலை தொடர்பாக மீண்டும் வழக்கு தொடுக்க இயலாத நிலை இருந்தது.
இந்தச் சட்டத்தையே மறு ஆய்வுசெய்ய வேண்டும் என்று பல வருடங்களாக இருந்த கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது. கூடுதலான ஆதாரங்கள் கிடைத்தால், கொலைக் குற்றங்கள் குறித்து மீண்டும் வழக்கை நடத்தலாம் என்று 2005-ம் வருடம், இந்தச் சட்டம் திருத்தப்பட்டது.
இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்னர், கேரி டாப்ஸன் பல முறை திருட்டுக் குற்றத்துக்காகக் கைதாகி, சிறு அபராதங்களுடன் தப்பித்துக்கொண்டிருந்தான்.
'டெய்லி மெயில்’ மீண்டும் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. 'முன்பு கிடைத்த தடயங்களை, முன்னேறிய விஞ்ஞான முறைகள் கொண்டு, தடயவியல் துறை மீண்டும் ஆராயலாம்’ என்று பி.பி.சியும் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தது.
இதற்கிடையில் 49 கிலோ போதை மருந்தை கையிருப்பில் வைத்திருந்த குற்றத்துக்காக கேரி டாப்ஸன் கைது செய்யப்பட்டான்.

2006, ஜூன் மாதம். ஊடகங்களின் இடையறாத முயற்சிகளால், ஸ்டீஃபன் கொலை வழக்கை மறுபடியும் திறக்க போலீஸ் முன்வந்தது. ஸ்டீஃபன் லாரன்ஸ் கொலையானபோது குற்றவாளிகள் அணிந்திருந்த ஜாக்கெட்கள் போலீஸ் வசம் இருந்ததால், அவை ஆராயப்பட்டன.
தடயவியல் விஞ்ஞானத்தில் பெரும் முன்னேற்றங்கள் நடந்திருந்ததால், உலர்ந்து போயிருந்த ஒரு சிறு துளி ரத்தம், உடைகளின் நூல்கள், தலைமுடிகள் முதலியன துல்லியமாகப் பரிசோதிக்கப்பட்டன. டி.என்.ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, கேரி டாப்ஸன், டேவிட் நாரிஸ் இருவரும் வகையாகச் சிக்கினர். மாறிய சூழ்நிலையில், நீதிமன்றம் இந்தப் புதிய ஆதாரங்களை ஏற்றது.
2012, ஜனவரி 3. கேரி டாப்ஸன் மற்றும் நாரிஸ் இருவரும் ஸ்டீஃபன் லாரன்ஸை கொலை செய்தவர்கள் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. ஆனால், இங்கிலாந்தில் வேறு சில வேடிக்கையான சட்ட விதிகள் இருந்தன. குற்றம் நடந்தபோது, அவர்கள் இருவரும் இளம் குற்றவாளிகளுக்கான வயது வரம்புக்குள் இருந்தார்கள். அதனால், அந்த வயதினருக்கு என்ன தண்டனை அளிக்க முடியுமோ அதைத்தான் அளிக்க முடியும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
அந்த அடிப்படையில் கேரி டாப்ஸனுக்கு 15 வருடங்களும், நாரிஸுக்கு 14 வருடங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டன.
தங்கள் மகனுடைய மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல வருடங்கள் சளைக்காமல் போராடிய ஸ்டீஃபன் லாரன்ஸின் பெற்றோரை உலகம் பெருமையுடன் பார்த்தது.
''என்னுடைய சாட்சியத்தை ஏற்காதது மட்டுமல்ல, என்னைக் கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, எப்போதும் மன அழுத்தம் கொடுத்தனர் காவல் துறையினர்'' என்று ஸ்டீஃபனின் நண்பன் துவேன் ப்ரூக்ஸ் காவல் துறை மீது வழக்குத் தொடர்ந்தான். 'காவல் துறை ஒரு லட்சம் பவுண்ட் ஸ்டெர்லிங் அவனுக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பானது.
குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொள்ள ஓர் அதிகாரி பணம் வாங்கியதை பிபிசி ஆதாரத்துடன் நிரூபித்தது. நீல் புட்னம் என்னும் ஊழல் அதிகாரி மனம் திருந்தி, பிபிசி மூலம் பல உண்மைகளை வெளிப்படையாகச் சொன்னார்.
பீட்டர் ஃப்ரான்சிஸ் என்னும் அதிகாரி, கொலையான ஸ்டீஃபனின் கறுப்பினக் குடும்பத்தைக் கேவலப்படுத்த ஏதாவது ஆதாரங்களைத் திரட்டி வருமாறு தனக்கு ஆணையிடப்பட்டதாகச் சொன்னார். இங்கிலாந்தின் காவல் துறையில் நிறவெறி தலை விரித்தாடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன.
இங்கிலாந்தின் பிரதமரே தலையிட்டு, இதுபற்றி விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
ஓர் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிப்பட்டன. காவல் துறையில் நிறவெறி மட்டுமல்ல, ஊழலும் கோலோச்சுவதை ஆய்வுக்குழு கண்டுபிடித்தது. காவல் துறையை முழுமையாகச் சீரமைக்க கிட்டத்தட்ட 70 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
இப்படி, காவல் துறையின் சீரமைப்புக்கும் காரணமாகிப் போனான், ஸ்டீஃபன் லாரன்ஸ்.
ஸ்டீஃபன் லாரன்ஸின் தாய் சொன்னாள்:
''கொலையான ஓர் கறுப்பின இளைஞனாக மட்டும் என் மகன் நினைவு வைத்துக்கொள்ளப்படுவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. இனவெறியை அடியோடு ஒழித்து, வெள்ளை இனத்தவரும் கறுப்பினத்தவரும் ஒன்று சேர்வதற்கான ஒரு பாலமாக அவன் பார்க்கப்படுவதையே விரும்புகிறேன்.''
- குற்றம் தொடரும்