மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

வெறுக்காதே, விலகாதே, என் ஆருயிரே..!

குற்றம் புரிந்தவர்

பிரான்ஸின் அழகிய ஆர்லேன்ஸ் நகரம்.

1951, ஆகஸ்ட் 12. முந்தைய தினம் அமைச்சராகப் பதவி ஏற்றிருந்த பியர்ரி செவாலியேவின் மாளிகை. அமைச்சரின் 11 வயது மகன் மாத்யூ தந்தை மாடியிலிருந்து கீழே வருவதற்காக ஆவலுடன் காத்திருந்தான். இளைய மகன் துகல் தூங்கிக் கொண்டிருந்தான்.

திடீரென துப்பாக்கி வெடிக்கும் சப்தம். அடுத்தடுத்து, நான்கு குண்டுகள் வெடித்தன. துப்பாக்கிச் சத்தம் கேட்டு மாத்யூவைத் தூக்கிக்​கொண்டு மாடிக்கு ஓடினாள், பணிப்பெண்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தையையும், கையில் துப்பாக்கியுடன் நின்ற தாயையும் கண்டு பயத்தில் உறைந்தான் மாத்யூ.

'ஒன்றுமில்லை.. ஒன்றுமில்லை..' என்று அவனை சமாதானம் செய்து, பணிப்பெண்ணுடன் கீழே அனுப்பினாள் வோனி. சில நிச்ஃப்மிடங்களில், மீண்டும் ஒருமுறை துப்பாக்கி வெடித்தது.

மாடியில், வோனி போலீஸ் தலைமையகத்துக்கு போன் செய்தாள். கறுப்பு உடையை அணிந்துகொண்டு, போலீஸாரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

41 வயதே நிரம்பிய பியர்ரி செவாலியே பிரான்ஸ் தேசத்தின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அடுத்த நாளே, தன் மனைவியின் கையாலேயே ஏன் சுட்டுக் கொல்லப்பட்டான்?

செல்வமும் செல்வாக்கும் மிக்க குடும்பத்தில் பிறந்தவன், பியர்ரி. முனைப்புடன் மருத்துவக் கல்வி பயின்று டாக்டர் பட்டம் பெற்றவன்.

1935-ம் ஆண்டு. பியர்ரி ஆர்லேன்ஸ் மருத்துவமனையில் பணியாற்றியபோது, வோனி என்ற இளம் நர்ஸைச் சந்தித்தான். அடக்கமான, குடும்பப் பாங்கான வோனி அவனை வசீகரித்தாள். காதல் மலர்ந்தது. செல்வம், அந்தஸ்து போன்ற​வற்றில் அவர்களிடையே பெரும் வேறுபாடுகள் இருந்தபோதிலும் இருவரும் காதலில் உறுதியாக இருந்தனர். 1939-ல் திருமணம் செய்து​கொண்டனர். அவர்களுக்கு மேத்யூ, துகல் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

குற்றம் புரிந்தவர்

இரண்டாவது உலகப் போர் மூண்டது. ஜெர்மானியத் தாக்குதலில் பிரான்ஸ் நிலைகுலைந்தது. எதிரிகளிடம் சரணடைந்து அடிமை நாடாகியது.

பியர்ரி தோழர்களுடன் இணைந்து நாட்டை விடுவிக்கப் போராட்டத்தில் குதித்தான். பகலில் மருத்துவப் பணி. இரவுகளில் புரட்சிப் படைகளுக்குத் தலைமை தாங்கி எதிரிகளை எதிர்த்துப் போராட்டம். ஆர்லேன்ஸில் தொடங்கிய இந்தப் போராட்டம் பிரான்ஸ் முழுக்க எதிரொலித்தது.

புரட்சிப் படைகளின் தீவிரத் தாக்குதலால் ஜெர்மானியப் படைகள் பின்வாங்கின. பிரான்ஸ் மீண்டும் சுதந்திர நாடாகியது. பியர்ரியின் தீரம், தேச சேவை ஆகியவற்றைப் பாராட்டி தேசம் அவனுக்கு ஆர்லேன்ஸ் நகர மேயர் பதவி அளித்து கௌரவித்தது. விரைவிலேயே, மக்களின் பேராதரவுடன் பிரெஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினராக பியர்ரி தேர்ந்தெடுக்கப்பட்டான்.

மேலும் ஒரு பெருமையாக, பிரான்ஸின் மதிப்புமிக்க அமைச்சர் பதவி வந்து சேர்ந்தது! கல்வி, விளையாட்டு, இளைஞர் நலம் ஆகியவற்றுக்கான அமைச்சராக, 1951 ஆகஸ்ட் 11-ம் நாள் பியர்ரி நியமிக்கப்பட்டான்.

அவனுடைய சொந்த ஊரான ஆர்லேன்​ஸில், அவனுக்குப் பாராட்டு விழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன. அங்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வந்து சேர்ந்தான். தன் வீட்டில் குளித்து, உடைமாற்ற மாடிக்குப் போனவன் பிணமாகத்தான் கீழே கொண்டுவரப்பட்டான்.

போலீஸ் வந்ததும், வோனி சரணடைந்தாள். கணவனைக் கொன்ற குற்றத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டாள்.

நாடு போற்றும் இளம் தலைவனான பியர்ரியை இரக்கமின்றி சுட்டுக் கொன்ற அவனது மனைவி, எப்பேர்ப்பட்ட கல்நெஞ்சுக்​காரியாக இருக்க வேண்டும் என்று மக்கள் கொதித்தனர். வழக்கு தொடங்கியபோது, அந்தக் கொடூரக் கொலைகாரியைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் குழுமினர்.

வீங்கிப் போயிருந்த கண்களும் இளைத்துப் போயிருந்த உடலுமாக வோனி பரிதாபமாகத் தோற்றம் அளித்தாள். அவளது முகத்தில் சோகமும் குற்ற உணர்ச்சியும் துலங்கின. அவளை அந்த நிலைமையில் பார்த்த கூட்டம் கூச்சலை அடக்கிக்கொண்டு மௌனமானது.

வழக்குத் தொடங்கியது. கணவனைச் சுட்டுக் கொன்றதாக வோனி மீது அரசு வக்கீல் குற்றம்சாட்டினார்.

வோனியின் வக்கீல் தனது வாதத்தைத் தொடங்கினார். பியர்ரியுடன் அவள் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்கத் தொடங்கினார்.

குடும்பப் பின்னணி, அந்தஸ்து போன்றவற்றில் இருவருக்கும் மலைக்கும், மடுவுக்குமான ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும், காதலித்தபோது, பியர்ரிக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.

ஆனால், திருமண வாழ்க்கையில் அந்த ஏற்றத்தாழ்வுகள் விஸ்வரூபம் எடுத்தன. விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த வோனியை, பியர்ரியின் குடும்பம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

பியர்ரி படித்தவன். செல்வந்தன். சாதுர்யமான பேச்சும், அனைவரும் மெச்சும் செயல்திறனும் கொண்டவன். அரசியல் வானில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தான்.

வோனியோ நேர் எதிராக இருந்தாள். ஏழ்மையான பின்னணி. சாதாரணத் தோற்றம். பொது இடங்களில் வாயே திறக்க முடியாத அளவுக்குக் கூச்சம். மேல் தட்டு மக்களின் நடை, உடை, நாகரிகம் எதுவுமே தெரியாத அறியாமை.

நாட்டுப்புறம் என்றும், பியர்ரிக்குச் சற்றும் பொருந்தாதவள் என்றும் வோனி விமர்சிக்கப்பட்டாள். ஆனாலும் தன் கணவன் மீது அவள் தீவிரமான அன்பு கொண்டிருந்தாள்.

மற்றவர்களின் விமர்சனம் பியர்ரியின் மனதையும் மாற்றியது. பொருத்தமற்றவளைக் கைப்பிடித்து விட்டோமோ என்று, அவனும் அவளைப் புறக்கணித்தான். வோனியின் களங்கமில்லாத அன்பைப் புரிந்துகொள்ள மறுத்தான்.

தாழ்வு மனப்பான்மையில் தவித்த வோனி மேற்தட்டு நாகரிகங்களைக் கடைப்பிடிக்க முற்பட்டாள். எப்பாடு பட்டாவது கணவனின் அன்புக்குப் பாத்திரமாக வேண்டும் என்பதே அவளது குறிக்கோள்.

அவன், பிரெஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், பாரீஸில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினான். அங்கே ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்துகொண்டான். கணவனும் மனைவியும் சந்தித்துக்கொள்வது குறைந்துபோனது.

பாரீஸில் தனித்திருந்த பியர்ரியுடன் சேர்ந்து, ஜென்னி என்பவள் பல இடங்களில் சுற்றித் திரிவதாக வோனி கேள்விப்பட்டாள்.

ஜென்னி யாரென்று வோனிக்குத் தெரியும். ஆர்லென்ஸைச் சேர்ந்தவள். கவர்ச்சிகரமான அங்க அமைப்புகள் கொண்டவள். வோனியைவிடவும் பதினைந்து வயது இளையவள். பியர்ரி  வோனி குடும்பத்துக்கு நன்கு தெரிந்தவள். லியோ பெர்ரோ என்ற வயதான, பணக்காரத் தொழிலதிபரின் மனைவி.

வோனி இதுபற்றிக் கணவனிடம் பலமுறை கேட்டாள். அழுதாள். சண்டையிட்டாள்.

'உங்களுக்கு ஏற்றவளாக என்னை மாற்றிக்​கொள்கிறேன். ஜென்னியை மறந்துவிடுங்கள். உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் என்னை நிராகரித்து விடாதீர்கள்' என்று கெஞ்சினாள்.

குற்றம் புரிந்தவர்

பியர்ரி அசையவில்லை. 'நீ எனக்கு எந்த வகையிலும் தகுதி இல்லாதவள். யாருடன் வேண்டுமானாலும் பழகுவேன். என் விஷயத்தில் தலையிடாதே' என்று எரிச்சலை உமிழ்ந்தான்.

இந்நிலையில், ஒரு நாள், பியர்ரி கழற்றிப் போட்டிருந்த கோட் பாக்கெட்டில், காதல் கடிதம் ஒன்றைக் கண்டெடுத்தாள் வோனி.

'நீ இல்லாமல், வாழ்க்கையில் எனக்கு அழகோ, அர்த்தமோ இல்லை’ என்ற வார்த்தைகளும், 'ஜென்னி’ என்ற கையெழுத்தும் இருந்தன. வோனி நிலைகுலைந்தாள்.

மீண்டும் மீண்டும் கணவனிடம் மன்றாடினாள், வோனி.

'ஏய், பேசாமல் விவாகரத்துக் கொடுத்து விட்டுத் தொலைந்து போ' என்று சீறினான், பியர்ரி.

இரண்டு குழந்தைகள் இருக்க, விவாகரத்தில் வோனிக்கு விருப்பம் இல்லை. ஜென்னியைத் தேடிப்போனாள்.

'என் கணவனுடன் நீ கூடிக் குலாவுவதை உடனே நிறுத்து' என்று சத்தமிட்டாள்.

ஜென்னி, 'இது யாரோ கிளப்பிவிட்ட புரளி' என்று சாதித்தாள்.

வோனி ஜென்னியைத் தேடிப்போனது மறுநாளே பியர்ரிக்குத் தெரிந்துவிட்டது. 'நீ எப்படி ஜென்னியிடம் இப்படியெல்லாம் பேசலாம்? எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா எனக்கு?' என்று அவளை ஏசினான்.

வோனி தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தாள். ஒரு நாள் விஷமும் குடித்தாள். ஆனால் அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ, தப்பிப் பிழைத்துவிட்டாள்.பணிப்பெண்ணிடம் குழந்தைகளை விட்டுவிட்டு, பியர்ரியைத் தேடி அவனது பாரீஸ் அலுவலகத்துக்குப் போனாள்.

'என் மனைவி வந்தால், உள்ளே விடாதே. திருப்பி அனுப்பிவிடு' என்று தன் உதவியாளரிடம் பியர்ரி உத்தரவிட்டிருந்தான். எனவே பியர்ரியின் அலுவலகத்தின் உள்ளே நுழையக்கூட அவளால் முடியவில்லை. அவன் பாரீஸில் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றாள். பூட்டியிருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தாள். பியர்ரியும், ஜென்னியும் விடுமுறையைக் கொண்டாட வெளியூருக்குச் சென்றிருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்தது.

'இனி என்னதான் செய்வது? யாரிடம் போவது?’ என்று குழம்பினாள் வோனி. இன்னும் ஒரே ஒரு வழிதான் மிச்சம் இருந்தது.  

ஆர்லேன்ஸுக்குத் திரும்பினாள். ஜென்னியின் கணவன் லியோ பெர்ரோவிடம் போனாள்.

'உன் மனைவியும் என் கணவனும் நம் இருவருக்கும் துரோகம் செய்கின்றனர், தெரியுமா?' என்று வினவினாள்.

அதற்கு, லியோ சொன்ன பதில் அவளை நிலைகுலைய வைத்தது.

அடுத்த இதழில்...

- குற்றம் தொடரும்

ஆடுகளின் கழுத்தில் அம்மா படம்!

கடிதங்கள்

ருத்துக்கு எதிராக மாற்றுக் கருத்து கூறுவதுதான் நாகரிகத்தின் அடையாளம். இப்படி அடிதடி உதை என்று ஆயுதம் ஏந்தி படைப்பாளிகளைத் தாக்குவது என்பது அவர்தம் சிந்தனைக்குக் கல்லறை கட்டும் உச்சகட்ட அநாகரிகம்!

- காந்திலெனின், திருச்சி.

ரசு ஊழியர்களுக்கு பணி இடமாறுதல், பணி இடை நீக்கம், அரசியல்வாதிகளுக்கு பதவிப் பறிப்பு என்பதெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குப்பதிவு செய்து தண்டித்தல்தான் நேர்மையானதாக இருக்கும்.

- ச.நாராயணன், பாளையங்கோட்டை.

ம்மா நலன் வேண்டி அ.தி.மு.கவினர் இலவசத் திருமணம் நடத்துவது சரி. அதற்காக சீர்வரிசையாகக் கொடுக்கும் ஆடுகளின் கழுத்திலும் அம்மா படத்தை தொங்கவிட வேண்டுமா?

- டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

ன் மீதுள்ள புகாருக்கே விடை தெரியாத நிலையில் அமைச்சர்களுக்கு எதிராக ஜெயலலிதா சாட்டையைச் சுழற்றியிருப்பது வேடிக்கையாக உள்ளது. ஜெயின் இந்தக் கோபத்தைத் தணிக்கவும் அமைச்சர்கள் நேர்த்திக்கடன் என்று இறங்கிவிடாமல் இருந்தால் சரி!

- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.