கொலையும் செய்வாள் பத்தினி..!

பியர்ரி, ஜென்னி இருவரின் உறவு பற்றி வோனி சொன்னதைக் கேட்டு லியோ அதிர்ச்சி அடையவில்லை. மாறாகப் புன்னகைத்தார்.
'பியர்ரியுடன் என் மனைவிக்கு உள்ள உறவுபற்றி நன்றாகவே தெரியும். அதனால் என்ன?' என்றார் அலட்சியமாக.
வோனி விரக்தியின் விளிம்புக்கே தள்ளப்பட்டாள். தீவிரமாக யோசித்தாள். விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயன்றது தோற்றுவிட்டது. சுட்டுக்கொண்டு செத்தால் என்ன என்று ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.
துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமம் கோரி விண்ணப்பித்தாள். ஒரு சிறிய கைத்துப்பாக்கியை வாங்கினாள்.
பியர்ரி அவளை உதாசீனம் செய்தும், அவமானப்படுத்தியும்கூட கணவன் மீது அவள் எல்லையற்ற காதல் கொண்டிருந்தாள். கணவனுக்குத் தகுதியானவளாகத் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லையே என்ற வெறுப்புதான் அவளை மீண்டும் தற்கொலை முடிவை எடுக்கத் தூண்டியது.
அப்போதுதான், பியர்ரி அமைச்சராக நியமிக்கப்பட்டான். வோனி உடனே அவனுக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பினாள். சிறிது நேரத்தில் பாரீசில் இருந்து டெலிபோனில் பேசினான், பியர்ரி.
'நாளைக்கு அங்கே எனக்குப் பாராட்டுக் கூட்டம். உடை மாற்றிக்கொள்ள நம் வீட்டுக்குத்தான் வரப் போகிறேன்' என்றான்.
வோனி மிகவும் மகிழ்ந்தாள்.
மறுநாள். பிரான்ஸ் தேசக் கொடி படபடக்கும் லிமோஸின் காரில், மக்களின் வாழ்த்தொலிகளுக்கு இடையே, ஆர்லேன்ஸ் வீதிகளில் பவனி வந்தான் அமைச்சர் பியர்ரி.

குளித்து, உடை மாற்றிக்கொள்வதற்காக வீட்டுக்கு வந்தான். வாசலிலேயே அவனை அன்புடன் வரவேற்றாள் வோனி.
அவள் சொல்லிக் கொடுத்திருந்தபடியே, 'வணக்கம், மேன்மை தாங்கிய அமைச்சரே' என்று தந்தையை வாழ்த்தினான் மகன் மேத்யூ.
பியர்ரி, மகனைத் தூக்கி முத்தமிட்டான். மனைவி என்ற ஒரு 'ஜந்து’ அங்கு இருந்ததைக் கண்டுகொள்ளாமல் மாடி அறைக்கு விரைந்தான்.
கணவனைப் பின்தொடர்ந்து மாடிக்குச் சென்றாள் வோனி. அவன் அமைச்சரானதற்காக வாழ்த்துத் தெரிவித்தாள்.
'உங்களுக்கு ஏற்றவளாக என்னையே மாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னை உதாசீனப்படுத்தாதீர்கள். இனியாவது, ஜென்னியுடன் உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ளுங்கள்' என்று கெஞ்சினாள்.
பியர்ரி மனைவியைப் புழுவாகப் பார்த்தான்.
'ஜென்னியுடன் உல்லாசமாகக் கும்மாளமிடுவேன். ஏன், விரைவிலேயே அவளைக் கல்யாணம்கூட செய்துகொள்வேன். நான் இப்போது அமைச்சர். யாரும் கேள்வி கேட்க முடியாது' என்று கத்திவிட்டு குளிக்கச் சென்றான்.
வோனி கதறி அழுதபடி தரையில் விழுந்தாள். குளித்துவிட்டுத் திரும்பிய பியர்ரி, உடை மாற்றிக்கொள்ளத் தொடங்கினான்.
'நீங்கள் மனம் மாறவில்லையென்றால், தற்கொலை செய்து கொள்வேன்' என்றாள் வோனி.
'செத்து ஒழி. அதுதான் வாழ்க்கையிலேயே நீ செய்யும் புத்திசாலித்தனமான காரியம்!' என்று கேலியாகக் கூறினான் பியர்ரி.
வோனி உள்ளே ஓடினாள். திரும்பிவந்தபோது, அவள் கையில் துப்பாக்கி பளபளத்தது. அதைப் பார்த்தும் சற்றும் பதற்றமடையவில்லை பியர்ரி.
வோனி தடுமாறிக் கீழே விழுந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக வோனியின் கை, கணவனின் காலை உரசியது.
'ச்சீ, கையை எடு.. ஓர் அமைச்சரைத் தொடும் துணிச்சல்... கேவலம், சாதாரணக் கூலிக்காரிக்கு எப்படி வந்தது?' என்று பியர்ரி கூச்சலிட்டான். காதால் கேட்கவே முடியாத வசைச் சொற்களால் அவளைத் திட்டினான். மிக ஆபாசமான மோசமான சைகை ஒன்றை செய்து காட்டி அவளை மிகக் கேவலமாக அவமானப்படுத்தினான்.
கதறியபடி தரையில் கிடந்த வோனி, தன்னை நிதானித்துக் கொண்டு எழுந்து நின்றாள். அவளது முகம் இறுகியிருந்தது. வலது கைத் துப்பாக்கியை இறுக்கமாகப் பிடித்தது. அது பியர்ரியைக் குறிபார்த்தது. அடுத்த கணம் வெடித்தது. ஒன்றன் பின் ஒன்றாக குண்டுகள் பாய்ந்தன.
முதல் குண்டு பியர்ரியின் காலில் பாய்ந்தது. அடுத்தது முகத்தில். மூன்றாவது மார்பில். நான்காவது நெற்றியில்! ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான் பியர்ரி.
அரவம் கேட்டு ஓடிவந்த மகனைப் பணிப்பெண்ணுடன் திருப்பி அனுப்பினாள், வோனி. கணவனின் உடல் இருந்த திசையில் திரும்பினாள். வெறுப்பும், குமைச்சலுமாக மீண்டும் துப்பாக்கியால் குறிபார்த்தாள். ஐந்தாவது குண்டு பியர்ரியின் முதுகில் பாய்ந்தது.
'நடந்தது இதுதான்...' என்று வோனியின் வக்கீல் வாதத்தை நிறுத்தினார்.
நீதிமன்றம் அதிர்ந்து போயிருந்தது. மக்கள் திகைத்தனர். கண்ணீருடன் குற்றவாளிக் கூண்டில் நின்ற வோனி மீது பரிதாபம் பொங்கியது. அவள் சந்தித்த சோகங்கள், அவள் மீது திணிக்கப்பட்ட மோசமான அவமானங்கள், அரக்கனான கணவன் மீது அவள் கொண்டிருந்த தீராத காதல் இவற்றை அறிந்து, மக்கள் உருகிப் போனார்கள்.
அடுத்து, ஜென்னியும், அவளது கணவர் லியோ பெர்ரோவும் விசாரிக்கப்பட்டனர்.
சீவி சிங்காரித்துக் கொண்டு ஒயிலாகக் கூண்டில் ஏறினாள் ஜென்னி. அந்தக் கோலத்தில் அவளைக் கண்ட மக்கள் கொதித்தனர்.
'வோனிக்காக வருந்துகிறேன். ஆனால், மணமான அமைச்சருடன் கள்ளக் காதல் கொண்டிருந்ததற்காக வருந்தவில்லை' என்று ஜென்னி சொன்னதும், மக்கள் அவளுக்கு எதிராகக் கூச்சலிட்டனர்.
'என் மனைவி மாற்றானுடன் கூடிக் குலாவியது எனக்குத் தெரியும். பியர்ரி அரசியலில் செல்வாக்கு உள்ளவன். அவனால், என் தொழிலுக்கு நல்ல ஆதாயம் கிடைத்தது. அப்படியிருக்க, அந்த உறவை நான் ஏன் கண்டுகொள்ள வேண்டும்?' என்று ஜென்னியின் கணவர் லியோ அலட்சியமாக பதில் சொன்னார். மக்கள் வெறுப்பின் உச்சிக்குச் சென்றனர்.
வழக்கு தொடங்கியபோது மக்களின் ஹீரோவாக இருந்த பியர்ரி, வழக்கு நடந்த சொற்ப நாட்களிலேயே கொடிய வில்லனாகிப் போனான்.
'கணவனைக் கொன்ற இரக்கமற்ற கொலைகார மனைவி’யாகப் பார்க்கப்பட்ட வோனியோ, தாங்க முடியாத சோகங்களைத் துணிவுடன் எதிர்த்துப் போராடிய தேவதையாகிப் போனாள்.
வோனிக்கு எதிராக வழக்கு நடத்திய அரசாங்க வக்கீல்களும், அவள் மீது பரிதாபம் கொண்டனர். வோனியைத் தீவிரமாக குறுக்கு விசாரணை செய்யாமலேயே விட்டனர்.
வோனியின் துப்பாக்கியிலிருந்து நான்கு குண்டுகள் பாய்ந்ததுமே பியர்ரி பிணமானான். அப்படியும், அவனது உயிரற்ற உடலின் மீது ஐந்தாவது குண்டையும் செலுத்தியிருந்தாள் வோனி.
'அவளது கொலை வெறியையே இது காட்டுகிறது’ என்று அரசுத் தரப்பு வாதம் செய்திருக்கலாம். ஆனால் வோனி மீதிருந்த அனுதாபத்தால் அரசு வக்கீல் அவ்வாறு செய்யவில்லை.
'கணவன் இறந்ததும் சோகத்தில் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றாள் வோனி. பதற்றத்தில் கை நடுங்கியதால் குண்டு பியர்ரியின் உடல் மீது பாய்ந்தது’ என்று அவளது தரப்பு வக்கீல் வாதம் செய்ததை நீதிபதியும் மறுப்பு கூறாமல் ஏற்றுக்கொண்டார்.
கொலை வழக்குகளின் முடிவில், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குமாறு அரசுத் தரப்பு கோருவது வழக்கம். அந்த நடைமுறையைக் கூட அரசுத் தரப்பு வக்கீல் பின்பற்றவில்லை. வோனிக்கு, இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

தண்டனை பற்றி முடிவு எடுக்க வேண்டிய நேரம். நீதிபதிகள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் மிச்சமிருந்தது.
தற்கொலை எண்ணத்துடன் இருந்த வோனியை, திடீரென்று கொலை செய்யும் அளவுக்குத் தூண்டியது பியர்ரி செய்து காட்டிய கேவலமான சைகைதான் என்று வாதங்களின் மூலம் தெரிந்திருந்தது.
அந்தச் சைகை என்ன என்பதை நீதிபதிகள் தெரிந்துகொள்ள விரும்பினர். நீதிமன்றத்தில் இந்தக் கேள்வியை வோனியிடம் கேட்டனர். அதைக் கேட்டதும் வோனி கதறினாள். மயங்கிச் சரிந்தாள்.
பின்னர், தனி அறையில் வோனியின் வக்கீல் அந்த ஆபாசச் சைகையை நீதிபதிகளுக்குச் செய்து காட்டினார்.
எந்த ஒரு கணவனும், தன் மனைவியிடம் செய்து காட்டக்கூடாத அளவுக்கு அந்தச் சைகை மிக மோசமாக இருந்தது. நீதிபதிகள் வாயடைத்துப் போனார்கள்.
வோனிக்கு அளிக்க வேண்டிய தண்டனை பற்றி நீதிபதிகள் விவாதித்தனர். பிரான்ஸின் தண்டனைச் சட்டத்தின் படி, கொலை செய்தவர்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்காமல் விடுவிக்க முடியாது.
ஆனால் 'ஆண்மகன் ஒருவன், தன் மனைவி வேறோர் அந்நியனுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்க்க நேர்ந்து, உணர்ச்சிவசப்பட்டு, மனைவியையோ, அந்நியனையோ கொன்றால் அவனைக் குற்றமற்றவனாகக் கருதி விடுதலை செய்யலாம்’ என்ற ஒரு விதி பிரெஞ்சு சட்டத்தில் இருந்தது.
'பெண்களுக்கும் இது பொருந்தும்’ என்று தீர்மானித்த நீதிபதிகள் நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தீர்ப்பை வழங்கினார்கள்.
'வோனி குற்றமற்றவள்...'
சரியான தீர்ப்பு என்று மக்கள் கொண்டாடினார்கள்.
ஆனால், வோனியின் முகத்தில் எந்த சந்தோஷமும் இல்லை. குனிந்த தலையுடன் கோர்ட்டிலிருந்து வெளியேறினாள்.
வோனி விடுதலையாகிவிட்டாள். ஆனால், அவள் மனதை பாரமாக அழுத்திக்கொண்டிருந்த குற்ற உணர்ச்சியிலிருந்து, யார் அவளுக்கு விடுதலை தருவார்கள்? ஆர்லேன்ஸ் நகரமும், வாழ்ந்த வீடும் நடந்த சோகங்களை நினவுபடுத்திக்கொண்டே இருந்தன. வீடு, உடைமைகள் எல்லாவற்றையும் விற்றாள்.
வோனி குழந்தைகளை அழைத்துக் கொண்டாள். மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த பிரெஞ்சு கயானா என்ற குடியிருப்புக்கு இடம் பெயர்ந்தாள். வெளி உலகத்துத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டாள்.
மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றத் தொடங்கினாள். நோய்களைப் பரப்பும் மோசமான சுற்றுச் சூழலில் அங்கு வாழ்ந்த மக்களுக்கு சேவை செய்தாள்.
அதுவே அவள் செய்த காரியத்துக்குப் பிராயச்சித்தமாக இருக்கும் என்று நினைத்தாள். குறைந்த வசதிகளுடன், சாதாரண வாழ்க்கையை நடத்திய வோனி, 1970-ல் இயற்கையாக மரணமடைந்தாள்.
- குற்றம் தொடரும்