மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

எங்கே அந்தத் தோட்டா..?

குற்றம் புரிந்தவர்

வம்பர் 22, 1963. 20-ம் நூற்றாண்டின் மிக முக்கியத் தினமாக மாறிப்போனது. ஆயிரக்கணக்கான மக்கள், நூற்றுக்கணக்கான கேமராக்கள் சாட்சி இருக்க, அமெரிக்காவின் மிக வசீகரமான அதிபரான ஜான் எஃப்.கென்னடி, அன்றைக்குச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவ தினம். டெக்சாஸ் மாநிலம். டல்லாஸ் நகர வீதிகள் வழியே முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க, ஜான் கென்னடி, கூரையில்லாத காரில் மக்களைப் பார்த்து கையசைத்துக்கொண்டே, சந்தோஷமாகப் பயணம் செய்தார்.

கென்னடியுடன் அவர் மனைவி ஜாக்குலின், டெக்சாஸ் மாநிலத்தின் கவர்னர் கானலி, கவர்னரின் மனைவி ஆகியோரும் பயணம் செய்தனர்.

'டல்லாஸ் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பைப் பார்த்தீர்களா..?' என்று கவர்னரின் மனைவி நெல்லி கேட்டார்.

'கவனித்தேன்..' என்றார், கென்னடி பூரிப்புடன். இரண்டாவது முறையும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கை அவர் முகத்தில் புலப்பட்டது.

நேரம், மதியம் 12.30. எதிர்பாராத அந்த அசம்பாவிதம் நேர்ந்தது.

திடீரென்று எங்கிருந்தோ துப்பாக்கிச் சத்தம் கேட்டது. கென்னடி தன் தொண்டையைப் பிடித்துக்கொண்டார். சரிந்தார்.

கென்னடிக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று பார்ப்பதற்காக கவர்னர் கானலி, வலது பக்கம் திரும்பினார். அடுத்த கணம் அவருடைய முதுகில் ஒரு தோட்டா பாய்ந்தது. கானலியும் சரிந்தார்.

வேடிக்கை பார்க்க வந்த பார்வையாளர்களில் ஜேம்ஸ் டேக் என்பவரையும் தோட்டா பெயர்த்தெடுத்த கான்கிரீட் துண்டு ஒன்று தாக்கியது. அவர் முகவாய் கிழிந்தது.

குற்றம் புரிந்தவர்

ஆக, மொத்தம் மூன்று நபர்கள் காயப்படுத்தப்பட்டனர். கென்னடி தாக்கப்பட்ட அடுத்த கணம் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஹில் என்பவர், கென்னடியின் காரின் பின்னால் குதித்து ஏறினார்.

'மருத்துவமனைக்குப் போ' என்று டிரைவரிடம் அலறினார். கார் சீறிப் பாய்ந்தது.

ஜாக்குலின் கண்களில் கண்ணீர். கென்னடி​யை மடியில் இருத்திக்கொண்டு, 'ஜான்.. ஐ லவ் யூ ஜான்..! என்னைவிட்டுப் போய்விடாதீர்கள்.. விழிப்பாய் இருங்கள்... இதோ மருத்துவமனைக்குப் போய்விடலாம்...' என்று தவிப்புடன் புலம்பினார். ஆனால், அவர் கண்ணெதிரேயே கென்னடி தன் நிலை இழந்து கொண்டிருந்தார்.

கவர்னர் கானலியை அவருடைய மனைவி தன் மடியில் சரித்துக் கொண்டிருந்தார்.

நடந்த அசம்பாவிதத்தை உணர்ந்து, போலீஸார் உஷாராயினர். 'அதோ அங்கே பாருங்கள்.. ஆறாவது மாடியில் ஒரு துப்பாக்கி மனிதன்...' என்று பிரேனான் என்ற ஒரு பார்வையாளர் அலற... போலீஸார் திரும்பிப் பார்த்தார்கள்.

கென்னடி தாக்கப்பட்ட இடத்துக்கு அருகில் 'டெக்சாஸ் ஸ்கூல் புக் டெப்பாசிடரி’ என்ற ஒரு பதிப்பகத்தின் அலுவலகம் இருந்தது. ஆறாவது மாடியில் ஒரு ஜன்னல் பாதி திறந்திருந்தது. அங்கு நிழலாய் ஓர் அசைவு.

போலீஸார், உடனடியாக அந்தக் கட்டடத்திலிருந்து யாரும் வெளியேற முடியாதபடி சுற்றி வளைத்தார்கள். புத்தகக்கடையைச் சேர்ந்த இரு பணியாளர்கள் எதிர்ப்பட அவர்களை விசாரித்தார்கள்.

'மாடியிலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது...' என்று அவர்களும் சொன்னார்கள்.

'யாராவது கட்டடத்தை விட்டு வெளியேறினார்களா..?'

'புத்தகக்கடையில் வேலை செய்யும் ஆஸ்வால்ட் சற்றுமுன் இங்கிருந்தான். இப்போது காணவில்லை..'

லீ ஹார்வே ஆஸ்வால்ட் (Lee Harvey Oswald), அந்தப் புத்தகக்கடையில் பணியாற்றி வந்தவன்.

போலீஸார் விசாரித்துக்கொண்டிருந்த நேரத்தில், சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த பார்க்லேண்ட் மெமோரியல் மருத்துவமனையை அதிபரின் கார் சில நிமிடங்களில் சென்றடைந்தது.

கென்னடி முதுகிலும், தலையிலும், தொண்டையிலும் சுடப்பட்டிருந்தார். மருத்துவர்கள் போராடியும், அதிபர் கென்னடியைக் காப்பாற்ற இயலவில்லை. மதியம் ஒரு மணிக்கு அவருடைய மரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடுமையான காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட கவர்னர் கானலி உயிர் பிழைத்துவிட்டார் என்பது மட்டுமே அப்போதைக்கு நல்ல செய்தியாக இருந்தது. கானலியின் முதுகைத் துளைத்த தோட்டா அவருடைய விலா எலும்பில் நான்கு அங்குலங்களைச் சிதைத்து, நுரையீரலையும் கிழித்து, வலது மார்பு வழியே வெளியே வந்திருந்தது. அதே தோட்டா வலது மணிக்கட்டையும் சிதைத்து, இடது தொடையில் பாய்ந்திருந்தது. கவர்னரை அவரது மனைவி  தன் மடியில் இழுத்துக்கொண்டபோது, கவர்னரின் உடல் முன்புறம் வளைந்தே இருந்ததால், அவர் அதிக ரத்தம் இழக்கவில்லை.

போலீஸார் தேடியபோது, ஆறாவது மாடியில் புத்தகக்கடையில் ஒரு பெரிய ரைஃபிள் கீழே கிடத்தப்பட்டிருந்தது. சுடப்பட்ட மூன்று தோட்டாக்களின் உறைகளும் கிடைத்தன. துப்பாக்கி வைத்திருந்தவனை தொலைவிலிருந்து பார்த்திருந்தாலும், பிரேனன் சில அடையாளங்கள் சொன்னான். அவை அங்கு பணியாற்றிய ஆஸ்வால்டின் வர்ணனையுடன் ஒத்துப்போயின. ஆஸ்வால்டுதான் அதிபரைச் சுட்டுக் கொன்றவன் என்று போலீஸ் சந்தேகித்தது. அவனைப் பற்றிய விவரங்கள் தொலைக்காட்சிகளிலும், ரேடியோக்களிலும் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டன.

இன்னொருபுறம், கென்னடியின் உடல் விமானப்படையின் தளத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மதியம் 2.30 மணிக்கு, அங்கேயே ஒரு சிறு அறையில், துணை அதிபராக இருந்த ஜான்ஸனை அடுத்த அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்தார், நீதிபதி ஒருவர்.

அதிபரைச் சுட்டுக்கொன்றவனின் வர்ணனையை வயர்லெஸில் கேட்டவாறு, காவல் துறை அதிகாரி டிப்பிட் தன் போலீஸ் காரை மெள்ளச் செலுத்தினார். 'வெள்ளை நிறம். 5 அடி 9 அங்குல உயரம். மெலிதான தேகம்...’ என்று வயர்லெஸ் கருவி கரகரக்க.. அந்த வர்ணனைகளுக்குப் பொருத்தமானவனாக ஒருவன் நடைபாதையில் தென்பட்டான்.

டிப்பிட் உஷாரானார். காரை ஓரம் கட்டி நிறுத்தினார். ஜன்னல் கண்ணாடியை இறக்கி, அவனை அருகே அழைத்தார். அவன் திடுக்கிட்டான். அவரை நோக்கி வந்தான். டிப்பிட் காரிலிருந்து இறங்கினார். ஆனால் திடீரென்று அவன் ஒரு பிஸ்டலை உயர்த்தினான். டிஷ்யூங்.. டிஷ்யூங்.. டிஷ்யூங்.. என்று மூன்றுமுறை சுட்டான். மூன்று தோட்டாக்களும் நெஞ்சில் பாய, டிப்பிட் சரிந்து விழுந்தார். துணிச்சலுடன் அவரை நெருங்கி அவன் மீண்டும் சுட்டான். இந்தமுறை தோட்டா டிப்பிட்டின் நெற்றியில் பாய்ந்தது. உயிரைப் பறித்தது.

சுட்டவன் அங்கிருந்து ஓடினான். அருகிலிருந்த திரையரங்குக்குள் அவன் ஓடி மறைந்ததைப் பலர் பார்த்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த போலீஸாரிடம் அதைத் தெரிவித்தனர்.

குற்றம் புரிந்தவர்

டிக்கெட் கூட வாங்காமல், திரையரங்கில் மக்களுடன் ஒருவனாக அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்வால்ட் போலீஸாரைக் கண்டதும் மீண்டும் பிஸ்டலை எடுக்க முயற்சி செய்தான். கட்டுப்படுத்தப்பட்டான். தப்பித்து ஓடப் பார்த்தான். மடக்கப்பட்டான். அமெரிக்க அதிபரையும், ஒரு காவல் அதிகாரியையும் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டான்.

அதிபரைக் கொலை செய்தவன் உடனடியாகப் பிடிபட்டான் என்று செய்திகள் கதறின.

அதிபரைக் கொன்றதற்கான காரணம் என்ன? குற்றத்தின் பின்னணி என்ன? ஆஸ்வால்ட் தனியாகச் செயல்பட்டானா? அவனுக்கு வேறு கூட்டாளிகள் உண்டா?

ஆதாரங்களைக் காட்டி போலீஸ் விசாரித்தபோது, ஆஸ்வால்ட் முழுமையான தகவல்கள் எதையுமே கொடுக்கவில்லை. முன்னுக்குப்பின் முரணாக பல தகவல்கள் கொடுத்தான். 'நானல்ல கொலைகாரன். நான் வெறும் பலியாடு...' என்றே சொல்லிக்கொண்டிருந்தான்.

அவன் மூலம் விவரங்களை அறிய உலகமே தவிப்புடன் காத்திருக்க.. இன்னொரு திருப்பம் நேர்ந்தது.

கென்னடி கொலை செய்யப்பட்ட இரண்டாவது நாள், ஆஸ்வால்டை வேறொரு சிறைச்சாலைக்கு மாற்ற போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அவனை வெளியே அழைத்துவந்தனர்.

நிருபர்களும், தொலைக்காட்சி கேமராக்களும் சூழ்ந்திருக்க, நூற்றுக்கணக்கானவர்களின் முன்னிலையில், கூட்டத்திலிருந்த ஒருவன் திடீரென்று முன்னால் பாய்ந்தான். மிக நெருக்கமான தொலைவிலிருந்து, ஆஸ்வால்டைச் சுட்டான். ஆஸ்வால்ட் சுருண்டு விழுந்தான். அதிபரை அனுமதித்த அதே பார்க்லாண்ட் மெமோரியல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். மார்பில் சுடப்பட்டு, ரத்தக்குழாய் வெடித்து அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்வால்டைச் சுட்டவனை போலீஸார் உடனே கைது செய்தனர். அவன் பெயர் ஜேக் ரூபி என்றும் ஓர் இரவு விடுதியின் மேலாளர் என்றும் மாஃபியாவுடன் நெருக்கமானவன் என்றும் போலீஸார் விசாரித்து, அறிந்துகொண்டனர். கென்னடி இறந்து 48 மணி நேரத்துக்குள் முக்கியமான விவரங்கள் எதுவும் கொடுக்காமலேயே ஆஸ்வால்டும் இறந்துபோனான்.

'ஆஸ்வால்டை ஏன் கொன்றாய்?' என்று ஜேக் ரூபியிடம் கேட்கப்பட்டது.

'அதிபரைக் கொன்றவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக அவனைச் சுட்டேன்...' என்றான் ஜேக் ரூபி.

கென்னடியின் மரணத்துக்குப் பின்னால் இருந்த உண்மைகள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆஸ்வால்ட் எந்த வாக்குமூலமும் கொடுப்பதற்கு முன்னால் தீர்த்துக்கட்டப்பட்டானா என்ற கேள்வி எழுந்தது.

ஜேக் ரூபியை மனநலம் சரியில்லாதவன் என்று போலீஸ் கருதியது. கிடைத்த ஆதாரங்களை ஆராய்ந்தது. புத்தகக்கடையில் ஒரு ரைஃபிளும், மூன்று தோட்டாக்களின் உறைகளும் கிடைத்திருந்தன. அப்படியானால், மூன்று முறைதான் அந்த ரைஃபிள் குண்டுகளை உமிழ்ந்ததா?

பார்வையாளர்களில் ஒருவரைக் காயப்படுத்தியது, ஒரு தோட்டா. கவர்னர் கானலியின் மீது பாய்ந்தது ஒரு தோட்டா.

மிச்சமிருப்பது ஒரே தோட்டா. அதுதான் கென்னடியைக் கொன்றதா? கென்னடிக்கு முதல் உதவி அளித்த மருத்துவர்கள், கென்னடியின் பின் மண்டை, முதுகு, மற்றும் தொண்டையில் தோட்டாக்கள் துளைத்திருந்ததாகச் சொல்லியிருந்தார்கள். ஒரே தோட்டா மூலம், மூன்று இடங்களில் குண்டு துளைத்த காயம் எப்படி வந்தது?

கென்னடியின் முதுகில் பாய்ந்த தோட்டா முன்புறம் தொண்டை வழியாக வெளியேறியிருக்கலாம் என்று கணக்கு வைத்துக்கொண்டாலும், கென்னடியின் பின்மண்டையில் பாய்ந்த தோட்டா எங்கிருந்து வந்தது? எப்படிப் பார்த்தாலும், நான்கு தோட்டாக்களுக்குக் கணக்கு தேவைப்பட்டது.

இங்கேதான் விவகாரமான விளையாட்டு ஆரம்பித்தது..

அடுத்த இதழில்....

- குற்றம் தொடரும்