மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

ஒற்றைத் தோட்டா தியரி..!

குற்றம் புரிந்தவர்

ப்போது, FBI ஓர் அறிக்கை வெளியிட்டது.

ஒரு தோட்டா, கவர்னர் கானலியின் காயங்களுக்குக் காரணமானது. இரண்டாவது தோட்டா, கென்னடியின் மண்டையைத் துளைத்து மரணத்துக்கு வித்திட்டது. மூன்றாவது தோட்டா, அவருடைய முதுகில் பாய்ந்தது. பார்வையாளர்களில் நின்றவர் மீது பாய்ந்த தோட்டாவுக்குக் கணக்கு வரவில்லை​யென்று சொன்னது.

இதற்காகவே காத்திருந்தது​போல், கவர்னர் கானலியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற காவல் துறை அதிகாரி, கீழே கிடைத்ததாகச் சொல்லி ஒரு தோட்டாவை ஒப்படைத்தார். நான்கு தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன என்று கணக்கு வந்தது.

அதிபர் கென்னடியின் மரணம் குறித்து ஆராய 'வாரன் கமிஷன்’ என்று ஒரு குழு நியமிக்கப்பட்டது.

காயங்களை வைத்துப் பார்த்தபோது, இரண்டுவிதமான துப்பாக்கிகள் பயன்படுத்தப்​பட்டிருக்கவேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்து. அப்படியிருந்தால், ஆஸ்வால்டின் மரணத்தோடு வழக்கை மூட முடியாது. சம்பவம் நடந்து 10 மாதங்களுக்குப் பிறகு, வாரன் கமிஷனோ இதை மறுத்து, ஆஸ்வால்டே குற்றவாளி என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

குற்றம் புரிந்தவர்

இந்த நிலையில், புத்தகக்கடையில் கிடைத்த ரைஃபிளை ஆராய்ந்து பார்க்க ராணுவப் பிரிவினர் அழைக்கப்பட்டனர். ஒரு தோட்டாவைச் செலுத்தியபின், அடுத்த தோட்டாவைச் செலுத்துவதற்கு அந்த ரைஃபிளைத் தயார் செய்வதற்கு மிகத் திறமையான ராணுவ வீரரால் 2.3 விநாடிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிபரின் கார் அந்த இடத்தைக் கடந்த ஆறு விநாடிகளுக்குள் மூன்று முறை அதே துப்பாக்கியால் ஆஸ்வால்ட் சுட்டிருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

'இது பழைய ரைஃபிள். டெலஸ்கோப் சீரழிந்திருக்கிறது. துல்லியமாகக் குறி பார்த்துச் சுட இயலாது' என ராணுவத்தினர் தெரிவித்தனர்.

அடுத்து மருத்துவமனையில் கண்டெடுக்கப்​பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட தோட்டாவை ஆராய்ந்தனர். அதனுடைய அடிப்புறம் சற்று நசுக்கப்பட்டு இருந்ததே தவிர, தோட்டா

முழுமை​யாக இருந்தது.

'கவர்னரின் விலா எலும்புகளை நான்கு அங்குலம் உடைத்து, உறுதியான மணிக்கட்டு எலும்பையும் சிதைத்து வெளியேறி இருந்தால், தோட்டா நிச்சயமாக மேலும் சிதைவுண்டிருக்க வேண்டும். இது பஞ்சடைத்த தலையணையில் வைத்து சுடப்பட்டதுபோல் இருக்கிறது..' என்று சொன்னதோடு நிற்காமல், ராணுவத்​தினர் நிரூபித்தும் காட்டினர்.

எனவே, நான்காவது தோட்டா தயாரிக்கப்பட்டு, கண்டெடுக்கப்​பட்டதாக நாடகமாடப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

ஆஸ்வால்டு மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டான் என்று அறிவிப்பதற்காக, இதைச் சற்று திருத்தம் செய்து, வாரன் கமிஷன் ஒற்றைத் தோட்டா தியரி [Single Bullet Theory]  என்று ஒன்றை முன்வைத்தது.

ஒரு தோட்டா, பார்வையாளரைக் காயப்படுத்தியது. ஒரு தோட்டா அதிபர் கென்னடியின் மண்டையில் பாய்ந்தது. அவரைக் கொன்றது.

குற்றம் புரிந்தவர்

மிச்சமிருந்த ஒற்றைத் தோட்டா, கென்னடியின் முதுகைத் துளைத்து நுழைந்து எலும்புகளில் மோதி, திசை மாறி மேலெழும்பி, அவருடைய தொண்டைக்குழி வழியே வெளிப்பட்டு, கவர்னர் கானலியின் முதுகில் பாய்ந்து, அவருடைய நுரையீரலைச் சிதைத்து, மார்பு வழியே முன்புறம் வெளியே வந்து, வலது மணிக்கட்டு எலும்பை உடைத்து, அங்கிருந்து திசை மாறி அவருடைய இடது தொடையில் சென்று பதிந்தது.

ராமரின் பாணம் பல தலைகளைக் கொய்துவிட்டு அவரிடமே திரும்பி வரும் என்பதுபோல் இருந்தது இந்த அறிக்கை.    

இந்த ஒற்றைத் தோட்டா தியரியை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. ஆறாவது மாடியின் உயரத்திலிருந்து செலுத்தப்பட்டிருந்தால், முதுகைத் துளைக்கும் தோட்டா கீழ்நோக்கிப் பாயுமேயன்றி, மேல்நோக்கித் திரும்பி தொண்டைக்குழி வழியே வெளியேறுவது சாத்தியமே இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

'கென்னடியைத் தாக்கிய அதே தோட்டா, என்னைத் தாக்கவில்லை. அதிபர் தாக்கப்பட்டு சில கணங்கள் கழித்தே நான் தாக்கப்பட்டேன்...' என்று கவர்னரும் கடைசிவரை வாதிட்டார். எனவே, புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட இந்த மேஜிக் தோட்டா, கவர்னர் கானலியின் ஸ்ட்ரெச்சலிருந்து விழுந்திருக்க வாய்ப்பில்லை என்றும், வேண்டுமென்றே அங்கு போடப்பட்டிருக்க வேண்டும் என்றும் முடிவானது.

'ஆஸ்வால்டின் பின்னணியை ஆராய்ந்தபோது, அவன் மெக்ஸிகோவில் இருந்த சோவியத் தூதரகம் மற்றும் க்யூபன் தூதரகத்தைப் பல முறை தொலைபேசியில் தொடர்புகொண்டிருக்கிறான். அங்கே பலமுறை போயிருக்கிறான்...' என்று FBI-யால் அவதூறு சுமத்தப்பட்டது. சோவியத் தூதரகமும், க்யூபன் தூதரகமும் பொதுவாக சி.ஐ.ஏ-வின் கண்காணிப்பிலேயே இருந்து வந்தன. அங்கு நடந்த தொலைபேசி உரையாடல்கள் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவை ஆராயப்பட்டன.

அந்த உரையாடல்களில் ஒலித்த குரல், ஆஸ்வால்டுடையது அல்ல என்றும், தூதரகத்துக்குள் நுழைந்தவனது புகைப்படங்களில் இருந்தது ஆஸ்வால்டு இல்லை என்றும் தெரியவந்தது.

ஆஸ்வால்டு பெயரைப் பயன்படுத்தி வேறு யாரோ அங்கு சென்று வந்து, அவனுக்கு எதிரான சாட்சியங்களை உருவாக்கியிருந்தார்கள். ஆஸ்வால்டுக்கு எதிராக மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு சதியாக இது ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்வி எழுந்தது.

ஆஸ்வால்டின் தோழர்கள் அவனை இரண்டாவது மாடியில் சந்தித்ததாகச் சொன்ன நேரத்துக்குள் அவன் சுட்டுவிட்டு, ஆறாவது மாடியிலிருந்து இறங்கி வந்திருக்க முடியாது. அன்றைக்கு அவன் எடுத்துவந்த காகிதப்பையில், அவ்வளவு பெரிய ரைஃபிளை மறைத்து எடுத்து வந்திருக்கவும் முடியாது.

குற்றம் புரிந்தவர்

துப்பாக்கியுடன் ஆஸ்வால்டைப் பார்த்ததாகச் சொன்ன ஒரே சாட்சி பிரேனான். ஒருவன் நின்றுகொண்டே சுட்டதைக் கண்ணால் பார்த்ததாக அவன் சொல்லியிருந்தான். அந்தக் குறிப்பிட்ட  ரைஃபிளை நின்றுகொண்டு சுட முடியாது. மண்டியிட்டு அமர்ந்தால்தான், குறி பார்த்திருக்க முடியும் என்று நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.

வேறு பல குற்றவாளிகளுடன் ஆஸ்வால்டையும் நிறுத்தி அடையாளம் காட்டச் சொன்னபோது, பிரேனான் அவனை அடையாளம் காட்ட முடியாமல் தவித்தான்.

துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் தோட்டா பவுடர், சுடுபவரின் சருமத்தில் கண்ணுக்குப் புலப்படாத துளைகளில் தங்கியிருக்கும். அதை மீட்டெடுக்க 'பாரஃபின் டெஸ்ட்’ எனப்படும் மெழுகுப் பரிசோதனை செய்யப்படும். கைது செய்யப்பட்டதும், ஆஸ்வால்டின் கரங்களும், வலது முகவாயும் இப்படிப் பரிசோதிக்கப்பட்டன. காவல் அதிகாரியைச் சுட்டபோது, பிஸ்டலைப் பயன்படுத்தியதற்கான அளவுதான் ரசாயனம் அவன் கையில் காணப்பட்டது. பேரியமும், ஆன்ட்டிமனியும் அவனுடைய முகவாயிலோ, கன்னத்திலோ காணப்படாததால், ரைஃபிளை தோளில் இருத்தி அவன் சுட்டிருக்க முடியாது என்ற சந்தேகம் வலுத்தது.

சுடுவதற்குக் கிடைத்த நேரம், ரைஃபிளின் திறன், அதிபருக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்ட காயங்களின் தன்மை, இவற்றை வைத்து ஆராய்ந்தபோது, நிச்சயமாக சதியில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற உண்மை முன்வைக்கப்பட்டது.

ஆஸ்வால்டை கொலை செய்த ஜேக் ரூபி, மாஃபியாவின் ஆதரவாளன். சிறைச்சாலையிலேயே நுரையீரலில் கான்சர் வந்து அவன் இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டது. வினோதமான விஷயம் என்னவென்றால், அவன் உயிர் பிரிந்ததும், அதே பார்க்லேண்ட் ஹாஸ்பிடலில்தான்.

கென்னடியின் அகால மரணத்துக்குப் பின்னால், இவ்வளவு மர்மம் புதைந்திருப்பதால், புத்தகங்களும் சினிமாக்களும் பற்பல யூகங்களை முன்வைத்து பல்வேறு கோணங்களில் இதை அலசின.

'ஆஸ்வால்டுக்குக் கூட்டாளிகள் இருந்திருக்க​ வேண்டும் என்று சொன்னால், அமெரிக்க உளவுத் துறையும், FBI-யும் தங்கள் அதிபரைப் பாதுகாக்கத் தவறிவிட்டன என்ற அவமானம் நேரும். எனவே, அதை மூடி மறைப்பதற்காக மீண்டும் மீண்டும் ஆஸ்வால்டு தனித்துச் செயல்பட்டான் என்று அமெரிக்க உளவுத் துறையால் உலகுக்கு அறிவிக்கப்பட்டது. வாரன் கமிஷன் நியமிக்கப்பட்டதே இதை உறுதிப்படுத்தத்தான்’ என்று ஒரு கருத்து.

'உண்மையான ஆதாரங்களை அழிப்பதற்கும், போலியான ஆதாரங்களை முன்வைப்பதற்கும் சி.ஐ.ஏவால் மட்டுமே முடியும். இது ஆஸ்வால்டைச் சுற்றி அவர்கள் பின்னிய சதி’ என்று இன்னொரு கருத்து.

'துணை அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன், அதிபர் கென்னடியுடன் பல கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார். அடுத்த தேர்தலில் லிண்டனைத் துணை அதிபராக நிறுத்த வேண்டாம் என்று கென்னடி கருத்து தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. லிண்டன் ஜான்சன் மீது ஒரு மாபெரும் ஊழல் வழக்கும் கிளர்ந்து கொண்டிருந்தது. அதிபராகப் பதவியேற்றால், அதை அடக்கிவிட முடியும் என்று அவர் கருதியிருக்கலாம்’ என்று ஜான்சன் மீதும் சந்தேகம் எழுந்தது.

இது, FBI-யின் திட்டமிட்ட சதி! இல்லை. இது, சோவியத் யூனியனின் திட்டமிட்ட சதி. இல்லவே இல்லை..! க்யூபன் நாட்டினர் கென்னடி மீதுகொண்ட வெறுப்பின் காரணமாக அவரைத் தீர்த்துக்கட்டினார்கள்.

சி.ஐ.ஏ-வின் முக்கியமான பல அதிகாரங்களை அவர்களிடமிருந்து நீக்கி, கென்னடி ராணுவத்தினரிடம் ஒப்படைத்துவிட்டார். அதனால், சி.ஐ.ஏ-வில் உயர் பதவியில் இருந்தவர்கள், கென்னடி மீது கோபம் கொண்டிருந்தனர்.

எல்லாமே தவறு. கென்னடி பதவிக்கு வந்த பிறகு, அவருடைய சகோதரர் மூலம் மாஃபியாவுக்குப் பெரும் தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்தார். மாஃபியாதான் அவருடைய கொலைக்குக் காரணம். இப்படி கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

'அது கம்யூனிஸ்ட் நாடுகளின் சதித் திட்டமா அல்லது கம்யூனிஸ்ட் நாடுகளை அமெரிக்க மக்களின் பார்வையில் எதிரிகளாகக் காட்டுவதற்காகச் செய்யப்பட்ட சதித் திட்டமா?’ என்ற கேள்வியும் எழுந்தது.

இதுபற்றி இறுதியான, உறுதியான, தீர்மானமான எந்தத் தீர்ப்பும் இன்றுவரை எழுதப்படவில்லை.

கென்னடியின் மரணம் இன்று வரை முழுமையாகத் தீர்க்கப்படாத ஒரு மர்மமாகவே நீடிக்கிறது.

- குற்றம் தொடரும்