மாண்டவனா, மீண்டவனா..?

நவம்பர் 6, 1930. லண்டனில் நார்த்தாம்டன் பகுதி. விடியலுக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்க, வெளிச்சம் குறைவான பொழுது. முந்தின இரவு நடந்த பார்ட்டி ஒன்றிலிருந்து, இரண்டு இளைஞர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் நடையில் நடனமாடிய களைப்பு.
அப்போது கார் ஒன்று அவர்களை வேகமாகக் கடந்தது. சற்றுத் தொலைவில் இருந்த சிறிய தெரு ஒன்றில் திரும்பியது.
அந்தத் தெருமுனைக்குச் சென்றதும், தற்செயலாக இருவரும் பார்க்க.. இருட்டில் அந்தக் கார் நின்றிருந்தது. மழைக்கோட்டுடன் ஒருவன் காரைவிட்டு விலகிச் சென்று கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு சிறிய பெட்டி.
காரில் திடீரென்று தீப்பிழம்பு ஒன்று எட்டிப் பார்த்தது. விரைவில், தீ பெருங்கோளமாய் எழுந்தது. உடனே இருவரும் காரை நோக்கி ஓடினார்கள்.
மழைக்கோட்டு மனிதனோ நெருப்பிலிருந்து விலகி நண்பர்கள் இருவரும் இருந்த திசை நோக்கி ஓடி வந்தான்.
இவர்களைக் கடந்து ஓடுகையில், 'குளிருக்காக யாரோ கணப்பு போட்டிருக்கிறார்கள். அதுதான் தீப்பற்றி எரிகிறது..' என்று சொல்லியவாறே அவன், ஓடி இருளில் மறைந்தான்.
கார்தான் எரிந்துகொண்டிருந்தது என்று, கார் அருகிலிருந்து வந்த அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் அவன் வேறு என்னவோ உளறிக் கொட்டுகிறானே! அது மட்டுமில்லாமல் எரிந்து கொண்டிருந்த காரை அணுகி, தன்னால் ஆன உதவியைச் செய்யாமல் விலகி வேறு ஓடிப்போகிறானே?
நண்பர்கள் இருவருக்கும் அவனது செய்கை அதிர்ச்சி அளித்தது. நெருப்பை நெருங்கினார்கள். கார் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. காருக்குள் ஓர் ஆணின் உடல் அசைவற்றுக் கிடந்தது.
நெருப்பை அணைக்க முடியாமல், அவர்கள் காவல் நிலையத்துக்கு போன் செய்தனர். போலீஸ் வந்தது. ஆராய்ந்தது.
காரில் பெரும் பகுதி கருகிப்போயிருந்தாலும், அதன் பின்புற நம்பர் பிளேட் சிதையாமல் இருந்தது. அது ஒரு மோரிஸ் மைனர் கார். அதன் பதிவு எண்ணை வைத்து காரின் சொந்தக்காரரையும் முகவரியையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.
லண்டனில் ஃபின்ச்லே பகுதி.
சமையலறையில் இருந்த லில்லி மே ரௌஸ், அந்த இளம் காலையில் தன் வீட்டுக் கதவு தட்டப்பட்டதும், சென்று திறந்தாள். லில்லி 30 வயது இளம்பெண்.
வெளியே மஃப்டியில் இரண்டு போலீஸ்காரர்கள்.
'மேடம்... ஆல்ஃப்ரெட் ஆர்தர் ரௌஸ்?''
'எனது கணவர்தான்'
'மோரிஸ் மைனர் கார்.. விஹி 1468?'
'அவருடையதுதான். அதில்தான் அவர் வெளியே போனார். ஏன்?' என்று பதற்றத்துடன் கேட்டாள்.
'நீங்கள் எங்களுடன் ஓர் உடலை அடையாளம் காட்ட வரவேண்டும்.'
'ஐயோ, அவருக்கு என்ன ஆயிற்று..?'
அவளைப் பார்த்தால், காவலர்களுக்குப் பரிதாபமாக இருந்தது. ஆனால், விஷயத்தைப் போட்டு உடைத்துத்தானே ஆகவேண்டும்?
'அந்த கார் எரிந்து கிடக்கிறது.. உள்ளே ஓர் ஆணின் உடல் கருகிய நிலையில் கிடைத்திருக்கிறது.'
லில்லி விக்கித்துப் போனாள்.
மருத்துவமனைப் பிணவறை. காரில் கிடைத்த சடலம் உருக்குலைந்து போயிருந்தது. யார் என்றே தெரியாத அளவுக்கு முகம் கருகியிருந்தது. ஆனால், பிணத்தின் மீதிருந்த உடையின் சில பகுதிகள் எரியாமல் இருந்தன.
'என் கணவர் ரௌஸ் இதே உயரம், இதே பருமன்தான். இது என் கணவரின் உடைதான். இடுப்பு பெல்ட், அதன் உலோக வளையம் எல்லாம் வைத்து அடையாளம் சொல்ல முடிகிறது. இது என் கணவர்தான்...' என்றாள் லில்லி கண்ணீருடன்.
'பிணத்தைப் பிரேத பரிசோதனை முடிந்ததும், ஒப்படைக்கிறோம்...' என்றது, போலீஸ்.
'ஐயோ, இனி எப்படி வாழ்க்கையை நடத்துவேன்..?'
காரில் ஏற்பட்டது தற்செயலான தீ விபத்து என்று எழுத போலீஸ்காரர்களுக்கு உறுத்தலாய் இருந்தது. போலீஸுக்குத் தகவல் கூறிய இளைஞர்கள் பெட்டியுடன் ஓடியவனைப் பற்றிக் கூறியிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்ட அந்த மனிதனின் நடவடிக்கை வினோதமாகப்பட்டது. அவன் யார்? ஏன் அவ்வாறு விலகி ஓடினான்?
வயது 35. உயரம் 6 அடி. சாதாரண பருமன். வட்டமான, அழகிய முகம். கருகருவென்ற சுருட்டை முடி. இளைஞர்கள் கொடுத்த இந்த அடையாளங்களை வைத்து போலீஸ் அவனைத் தேடத் தொடங்கியது.
அவனை எங்கே பார்த்தாலும் விசாரிப்பதற்காக அழைத்து வர வேண்டும் என நாடெங்கும் செய்தி பறந்தது.
மறுநாள். நவம்பர் 7. இரவு 9 மணி.
கார்டிஃப் ரயில் நிலையத்தில், லண்டனுக்குப் போகும் ரயிலில், ஒருவன் ஏறிக்கொண்டிருந்தான். கார் எரிந்த இடத்தில் இருந்தவனின் அடையாளங்களுடன் ஒத்துப்போகும் அடையாளங்கள். அங்கிருந்த போலீஸ்காரர்கள் பாய்ந்து சென்று அவனைத் தடுத்து நிறுத்தினர்.
'யார் நீ? அடையாளங்களைக் காட்டு.'
அவனிடமிருந்த லைசென்ஸை எடுத்துப் பார்த்தார்கள். திகைத்தார்கள்.
அது வேறு யாருமல்ல, எரிந்துபோன காரில் இறந்துபோனதாகக் கருதப்பட்ட ஆல்ஃப்ரெட் ஆர்தர் ரௌஸ் (Alfred Arthur Rouse).
பிணத்தை அடையாளம் காட்டிய லில்லியின் கணவனேதான் அவன்!
போலீஸாரால் ரௌஸ் லண்டனுக்கு அழைத்து வரப்பட்டான்.
விசாரணை துவங்கியது.
'நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை!' என்று கூறினான் ரௌஸ்.
'நவம்பர் 5 ஆம் தேதி. நள்ளிரவு. வேலையை முடித்துவிட்டுக் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த மனிதன் ஒருவன் கை காட்டி லிஃப்ட் கேட்டான். அவன் மேல் பரிதாபப்பட்டு காரில் ஏற்றிக்கொண்டேன். திடீரென்று காரில் பிரச்னை. வேகம் குறைந்தது. பெட்ரோல் தீர்ந்து கொண்டிருக்கிறதுபோலும் என்று நினைத்தேன். காரை ஒரு தெருவில் நிறுத்தினேன். காரில் ஒரு பெரிய கேனில் பெட்ரோல் வைத்திருந்தேன். அதை டாங்க்குக்குள் ஊற்றுமாறு அவனிடம் சொல்லிவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றேன். அப்போது அவன் சிகரெட் பற்ற வைப்பதைப் பார்த்தேன். அடுத்தகணம் காரின் முன்பகுதி தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதிர்ச்சி அடைந்தேன். காரை நோக்கி ஓடினேன். நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. அவனை நெருங்கக்கூட முடியவில்லை. கார் முழுவதும் தீ வேகமாகப் பரவியது. பயத்தில் கை, கால்கள் நடுங்கின. மயக்கம் வரும்போல இருந்தது. முக்கியமான டாக்குமென்ட்களை ஒரு ப்ரீஃப்கேஸில் போட்டு காரின் டிக்கியில் வைத்திருந்தேன். அதை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினேன். பயம்தான் என்னைத் துரத்தியது. நான் வேறு எந்தத் தப்பும் செய்யவில்லை' என்றான் ரௌஸ்.

அவனது வாக்குமூலம் நம்பக்கூடியதாகத்தான் இருந்தது. இருப்பினும் அவனைக் காவலில் வைத்தது போலீஸ். அவனைப் பற்றித் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது.
கணவன் உயிர் பிழைத்துவிட்டது குறித்து, மகிழ்ந்தாலும், அவனது மனைவி லில்லி அவனைப் பற்றிப் பேசுகையில் வருத்தத்துடன் சில விஷயங்களைக் குறிப்பிட்டாள்.
ஆல்ஃபிரெட் ஆர்தர் ரௌஸ் ஒரு விற்பனைப் பிரதிநிதி. அன்பான மனைவியுடன், அமைதியாகக் குடும்பம் நடத்தும் கண்ணியமான இளைஞன் என்றுதான் அவனை அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். ஆனால், அந்த முகமூடிக்குப் பின்னால், பழி பாவத்துக்கு அஞ்சாத ஒரு மோசமான மனிதன் ஒளிந்திருந்தது யாருக்கும் தெரியவில்லை.
அப்பாவியான முகம். கவர்ச்சியான உருவம். சாமர்த்தியமான பேச்சுத் திறன். இவற்றை வைத்துக்கொண்டு அவன், இளம் பெண்கள் பலரையும் தன் வலையில் விழ வைத்தான். விற்பனைப் பிரதிநிதி என்பதால் ஊர், ஊராகச் செல்வது அவன் வழக்கம்.
போகும் ஊர்களில் எல்லாம் அழகான, எளிய பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வான். அவர்களிடம் தேனொழுகப் பேசுவான். அதனால் பெண்கள் உருகினார்கள். தங்களையே அவனிடம் கொடுத்தார்கள். அவனால் கருத்தரித்து, குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலரைத் திருமணமும் செய்து கொண்டிருந்தான்.
ஆர்தர் ரௌஸின் காம லீலைகள் இங்கிலாந்தில் மட்டுமின்றி நாடுவிட்டு நாடும் நடந்தன. பாரீசில்கூட அவனுக்கு ஒரு மனைவியும், குழந்தையும் இருந்தனர்.
1920-லிருந்து 1930-க்குள் அவன் ஆடாத ஆட்டம் இல்லை. அவனது அதிகாரபூர்வமான மனைவி லில்லி மே ரௌஸ் உலகம் அறியாதவள். கணவனே எல்லாம் என்று நம்பியவள். காலப்போக்கில், கணவனது தவறான போக்கு அவளுக்குத் தெரிய வந்தது. பல பெண்களை அவன் ஏமாற்றிக் கொண்டிருப்பதை அறிந்து மனம் வருந்தினாள். ஆனால், கணவனை எதிர்த்து அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
'காருக்குள் சிக்கி தீயில் எரிந்துபோன மனிதன் யார்?’ என்று போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. விளம்பரம் செய்தும் அவனைத் தேடி யாரும் வரவில்லை. அவனைத் திட்டமிட்டுக் கொலை செய்தது ரௌஸ்தான் என்று நிரூபிப்பதற்கான சாட்சிகளோ, சாட்சியங்களோ எதுவும் போலீஸிடம் இல்லை. கொலைக்கான வலுவான காரணம் எதையும் அவர்களால் முன்வைக்க முடியவில்லை.
இருந்தாலும், அடையாளம் தெரியாத அந்த மனிதனை எரித்துக் கொன்றது ரௌஸ்தான் என்று போலீஸ்காரர்கள் முடிவு செய்தார்கள். அவன் மீது கொலைக்குற்றம் சாட்டி வழக்கும் தொடர்ந்தார்கள்.
நீதிமன்றத்தில் அந்த வழக்கு பல வினோதமான திருப்பங்களைச் சந்தித்தது.
அடுத்த இதழில்...
- குற்றம் தொடரும்