ஓசி சவாரி உலகை விட்டே...!
காரில் ஒருவனை வைத்து எரித்துக் கொன்றதாகத் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு வலுவானது அல்ல என்பதை ரௌஸ் நன்றாகவே அறிந்திருந்தான். எனவே, துணிச்சலுடன் நீதிமன்றத்தில், தனக்கு ஆதரவாக தானே வாதாடினான்.
ரௌஸைக் குற்றவாளி என்று நிரூபித்து, அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு அரசு வழக்கறிஞர் நார்மன் பிர்கெட் மீது விழுந்தது. குற்றவாளிக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, இருக்கும் சாட்சிகள் மூலம்தான் குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று முடிவு செய்தார், அவர்.
முதலில், சம்பவ நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்த இரு இளைஞர்களை முக்கியச் சாட்சிகளாக முன் நிறுத்தினார்.
காரும், அதில் இருந்த மனிதனும் எரிந்து போவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல், அங்கிருந்து தப்பி ஓடியது ரௌஸ்தான் என்று அவர்கள் அடித்துக் கூறினர்.

அடுத்து, காரில் இருந்த மனிதனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் சாட்சி கூறினர். தீப்பற்றி எரிய ஆரம்பித்தபோது காரில் இருந்த மனிதன் உயிருடன்தான் இருந்தான். அவனது ரத்தத்தில் மதுவும், மயக்க மருந்தும் கலந்து இருந்தன, அதனால் நினைவிழந்து இருந்தான் என்று அவர்கள் கூறினர். கழுத்துப் பகுதி அழுத்தப்பட்டு, அவன் மயக்கமாகி இருக்க வேண்டும் என்றும் சாட்சியம் அளித்தனர்.
அடுத்து, கார் இயந்திர நிபுணர் ஒருவரை சாட்சியாகக் கொண்டு வந்தார் வக்கீல். தீப்பற்றி எரிந்துபோன ரௌஸின் கார் இஞ்சின் தானாகப் பழுதாகவில்லையென்றும், யாரோ வேண்டுமென்றே பழுதாக்கியதுபோல் இருந்தது என்றும் அவர் சொன்னார்.
போலீஸ்காரர்கள் ரௌஸைப் பற்றி தாங்கள் சேகரித்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். ரௌஸ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களுடன் உறவு வைத்துக்கொண்டிருந்தான் என்பதை அவர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.
கிட்டத்தட்ட 80 பெண்களுடன் அவனுக்குத் தொடர்பு இருந்ததாக அவனிடமிருந்த பட்டியல் ஒன்று காட்டிக்கொடுத்தது. அவன் மூலம் கருத்தரித்திருந்த ஒரு பெண், ரௌஸ் கைதான தினத்தில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
“அன்பான மனைவி உயிருடன் இருக்கும்போதே, பல பெண்களுடன் நீ கூடிக் குலாவலாமா?” என்று நீதிபதி கேட்டார்.
“அவள் என் மகிழ்ச்சிக்குத் தடை விதித்ததே இல்லை. ஆகவே என் விருப்பப்படி வாழ்க்கையை அனுபவித்தேன். அது தவறா?” என்று பதில் கேள்வி கேட்டான் ரௌஸ்.
ஒரு கட்டத்தில், “காரில் நெருப்புவைத்துவிட்டு, நீயே அந்த மனிதனை அதில் வீசி இருக்கிறாய்!” என்று அரசு வக்கீல் ரௌஸின் மீது குற்றம் சுமத்தினார்.
“அவனை நான் எதற்காகக் கொல்ல வேண்டும்? அப்படியே இருந்தாலும், வேறு பல புத்திசாலித்தனமான வழிகள் இருக்க, என் காரையே எரிக்க நான் ஒன்றும் முட்டாள் அல்ல..!” என்றான் ரௌஸ் திமிருடன்.
வழக்கின்போது அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையுடன் இருந்ததால், சாட்சிகள் கூறியவற்றை அடிப்படையாகக்கொண்டு கேட்கப்பட்ட குறுக்குக் கேள்விகளுக்கு ரௌஸ் ஆணவத்துடனேயே பதில் அளித்தான். அந்த ஆணவம் காரணமாக, போலீஸிடம் கொடுத்த வாக்குமூலத்துக்கு முரணாகவும் பேசத் தொடங்கினான்.

கடைசியில் தன் இறுதி வாதத்தை முன்வைத்தார் சர்க்கார் வக்கீல்.
“ரௌஸுக்குப் பல ஆசை நாயகிகள். பல குழந்தைகள். பல குடும்பங்கள். இதனால் விளைந்த பிரச்னைகளையும், செலவுகளையும் அவனால் சமாளிக்க முடியவில்லை. இவற்றிலிருந்து தப்பிக்க நாடகம் ஒன்றை நடத்தி இருக்கிறான். அவனைப்போல் உள்ள ஒருவனைக் கடத்தி, காரில் வைத்து, அடையாளம் தெரியாதபடி எரித்துவிட்டான். ‘விபத்தில் ரௌஸ் இறந்துவிட்டான்’ என்று எல்லோரும் நம்புவார்கள். மனைவியும் நம்புவாள். இன்ஷூரன்ஸ் பணம் அவள் கைக்கு வரும். பின்னர் அவளைச் சந்தித்து, இன்ஷூரன்ஸ் பணத்தைப் பறித்துக்கொண்டு ஏதோ ஓர் ஊருக்குப் போய், வேறு பெயரில் புது வாழ்க்கை வாழலாம். இதுதான் ரௌஸின் திட்டம். தன் சுயநலத்துக்காக ரௌஸ் ஓர் அப்பாவியைக் கொடூரமாகக் கொன்றிருக்கிறான். ஆகவே இவனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்” என்று வாதத்தை முடித்தார் வக்கீல்.
ரௌஸோ, தான் குற்றவாளி இல்லை என்றே அப்போதும் வாதாடினான்.
ஜனவரி. 1931. வாதங்கள், குறுக்கு விசாரணைகள் விரைவாக நடந்தேறியிருந்தன. தீர்ப்பு நாள் வந்தது. முடிவு செய்ய ஜூரர்கள் குறைவான நேரமே எடுத்துக்கொண்டனர்.
நீதிபதி தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். ரௌஸ் பெண்கள் விவகாரத்தில் எப்படியோ இருந்திருக்கலாம். ஆனால் கொலை செய்ததற்கான சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவன் விடுதலை செய்யப்படுவான் என்று காவலர்களும், அரசு வக்கீலும் நினைத்தனர்.

நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
“வழக்கில் மூன்று முக்கிய விஷயங்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
ஒன்று... தீயில் மாட்டி, உயிருக்குப் போராடிய மனிதன் மீது ரௌஸ் கருணை காட்டவில்லை. அவனைக் காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாகத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அந்த இடத்திலிருந்து அவன் விலகி ஓடிப் போயிருக்கிறான்.
இரண்டு... ஓர் அப்பாவி மனிதனின் கோர மரணத்துக்குத் தெரிந்தோ, தெரியாமலோ ரௌஸ் காரணமாகி இருக்கிறான். ஆனால் அதற்காக அவன் வருத்தமோ, பச்சாதாபமோ தெரிவிக்கவே இல்லை.
மூன்று... அப்பாவி மனைவி ஆட்சேபிக்கவில்லை என்பதை சாதகமாக்கிக்கொண்டு, ஊரெல்லாம் ஆசை நாயகிகளை வைத்துக்கொண்டிருக்கிறான். மனைவியைக் கேவலமாக நடத்தியிருக்கிறான்.
ரௌஸ், மனசாட்சி இல்லாத இரக்கமற்ற அரக்கன் என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன. கொலைக்கான நேரடி சாட்சியமோ, ஆதாரமோ இல்லாதிருக்கலாம். ஆயினும், அவனது இயல்பையும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளையும் சீர்தூக்கிப் பார்த்து, அவனைக் குற்றவாளி என்று தீர்மானித்து ரௌஸுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்...” என்று நீதிபதி டால்பேட் தனது தீர்ப்பை வாசித்து முடித்தார்.
தீர்ப்பைக் கேட்டவுடன் அனைவர் முகங்களும் மலர்ந்தன. ஆனால் அதைச் சற்றும் எதிர்பார்க்காத ரௌஸ் அதிர்ந்துபோனான்.
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தான். ஆனால், அது தள்ளுபடி செய்யப்பட்டது. அவனது மரண தண்டனையை உயர் நீதிமன்றம் ஊர்ஜிதம் செய்தது.
தூக்குக்கான நாள் நெருங்கியது. இனிமேல் தான் தப்பிக்கவே முடியாது என்ற நிலையில் “அந்தக் கொலையைச் செய்தது நான்தான்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தான் ரௌஸ்.
“பல பெண்கள், பல குழந்தைகள், பல குடும்பங்கள் என்று என் வாழ்க்கை மிகவும் சிக்கலாகிப் போனது. இவற்றிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்தேன். அப்போதுதான், அந்த அப்பாவி என்னை அணுகினான். ‘நான் ஏழை. அனாதை. சாப்பாட்டுக்காக எனக்கு ஒரு வேலை கொடுங்கள்’ என்று என்னிடம் கெஞ்சினான்.
என் உயரம், என் உடல்வாகு. ஏறக்குறைய என்னைப்போலவே இருந்தான். சட்டென்று அந்த ஐடியா மனதில் பளிச்சிட்டது. இவனைக் காரில் வைத்து எரித்து, அடையாளம் தெரியாதபடி முகமும் உடலும் சிதைந்துபோகும்படி செய்தால் என்ன?
உலகமும் லில்லியும் நான் இறந்துவிட்டதாக நம்பினால், இன்ஷூரன்ஸ் பணம் லில்லிக்குக் கிடைக்கும். அவளிடம் இருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு வேறு எங்காவது சென்று வேறு பெயரில் நிம்மதியாக வாழலாம்.
திட்டம் போட்டேன். அதன்படி நவம்பர் 5-ம் தேதி நள்ளிரவு. ஒதுக்குப்புறமான இடத்தில் அவனைச் சந்தித்தேன். வேலை வாங்கித் தருவதாகக் கூறி, காரில் ஏற்றிக்கொண்டேன். வழியில் மயக்க மருந்து கலந்திருந்த மதுவைக் குடிக்கச் செய்தேன். காருக்குள்ளேயே மயங்கிச் சரிந்தான் அவன். ஒரு தெருவில் காரை நிறுத்தினேன். அவன் சட்டையைக் கழற்றி, என் சட்டையை மாட்டினேன். என் பெல்ட்டை அணிவித்தேன். அவன் கழுத்தில் கையை வைத்து அழுத்தினேன். தொண்டையிலிருந்து ஏதோ சப்தம் வந்தது. இறந்துவிட்டான் என்று நினைத்தேன். தயாராகக் கொண்டு போயிருந்த பெட்ரோலை எடுத்து அவன் மீதும் காரின் மீதும் ஊற்றினேன். பெட்ரோல் டேங்க்கிலிருந்து இன்ஜினுக்குச் செல்லும் குழாயை அங்கங்கே உடைத்து பெட்ரோல் ஒழுகும்படி செய்தேன்...
“என் பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்கினேன். கார் கதவைப் பூட்டினேன். தீக்குச்சியை உரசிப் பற்றவைத்து காரின் மீது எரிந்தேன். கார் பயங்கரமாக எரியத் தொடங்கியது. பெட்டியுடன் அங்கிருந்து ஓடினேன்.
என் துரதிர்ஷ்டம். அந்த நேரத்திலும் இரண்டு பேர் என்னைப் பார்த்துவிட்டனர். பயந்து போனேன். குழப்பத்தில் எங்கெங்கோ அலையத் தொடங்கினேன். அடுத்த நாள் இரவு வீடு திரும்புவதற்காக ரயிலில் ஏறிய நேரத்தில் போலீஸ்காரர்கள் என்னைப் பிடித்தனர். எப்படியோ நான் செய்த கொலைக்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது.”
தன் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டுக் கலங்கிய கண்களுடன் தூக்குமேடையை நோக்கி நடந்தான் ரௌஸ்.
பெட்ஃபோர்ட் சிறைச்சாலை. 1931 மார்ச் 10. தூக்கிலிடப்பட்டான் ரௌஸ். அவனது முகத்தை மூடி, கழுத்தில் கயிற்றை இறுக்கி, தூக்குமேடையின் லீவரை இயக்கினார் தூக்கிலிடும் பணியைச் செய்யும் ஊழியர். ரௌஸின் உடல் துடித்தது. கால்கள் உதறின. அடங்கின.
ரௌஸால் உயிர் துறந்த யாரோ ஒருவன், அவனால் ஏமாற்றப்பட்ட ஏராளமான பெண்கள் இவர்கள் மீது எழுந்த பரிதாபம் காரணமாகவோ என்னவோ, அந்த ஊழியரின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வடிந்தது.