மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர் : காதல் போயின் சாதல்...!

சுபா. ஓவியம் : பாரதிராஜா

த்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எளிய இஸ்லாமியக் குடும்பத்தில், சையத் மோதி, தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் 1962-ல் பிறந்தான். இளம் வயதிலேயே பாட்மின்டன் விளையாட்டில் சிறந்து விளங்கினான். 14 வயதில் தேசிய ஜூனியர் சேம்பியன் பட்டத்தை வென்றான். 

இந்தச் செய்தியை வானொலியில் கேட்டு அவனுடைய தாய் நெகிழ்ந்து அழுதார்.

“உங்கள் தம்பியின் திறமையை உலகே அறிய வேண்டும். அவனுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் நீங்கள் அளிக்க வேண்டும்” என்று தன் மூத்த மகன்களிடம், கண்ணீருடன் சத்தியம் வாங்கிக்கொண்டார்.
சையத் மோதி, 1980 முதல் தொடர்ந்து எட்டு முறை தேசிய சேம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்தான். ஆஸ்திரேலிய சேம்பியன்ஷிப், ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றிகள் என உலகளவில் சையதின் சாதனைகள் தொடர்ந்தன.

சையத் மோதியின் 19-வது வயதில், இந்திய அரசு, விளையாட்டுத் துறையின் மதிப்புவாய்ந்த அர்ஜுனா விருதை வழங்கி கௌரவித்தது. ரயில்வே துறையில் பதவியும் வழங்கியது.

குற்றம் புரிந்தவர் : காதல் போயின் சாதல்...!

சீனாவுக்குச் சென்ற இந்திய பாட்மின்டன் அணியில் மோதியுடன், மும்பையைச் சேர்ந்த அமிதா குல்கர்னி என்னும் பெண் வீராங்கனையும் இடம்பெற்றிருந்தார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
மோதி ஏழ்மையான இஸ்லாமியர். அமிதா உயர்குலத்தைச் சேர்ந்த இந்து மராட்டியப் பெண். இரு குடும்பத்தினரும் அவர்களது காதலை எதிர்த்தார்கள். ஆனாலும் காதல் வென்றது. இருவரும்
1984-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 1988-ம் ஆண்டு மே மாதம் அவர்களுக்கு ஆகாங்க்ஷா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.  

அன்பான குடும்பம், அனைவரும் வியக்கும் சாதனை வாழ்க்கை என நிறைவாக வாழ்ந்து வந்த சையத் மோதியின் வாழ்க்கை திடீரென்று கொடூரமாக முடிவுக்கு வந்தது.
ஜூலை 28, 1988.

குற்றம் புரிந்தவர் : காதல் போயின் சாதல்...!

லக்னோவில் மாலை நேர பாட்மின்டன் பயிற்சியை முடித்துக்கொண்டு, சையத் மோதி, தன் ஸ்கூட்டரில் ஏறி வீடு நோக்கிப் புறப்பட்டார். 10 அடி தூரம் கடந்திருப்பார். இரண்டு இளைஞர்கள் வழிமறித்தனர்.
அவர்களில் ஒருவனின் கையில் துப்பாக்கி. சையத் மோதி திகைத்தார். யார் இவர்கள்? வழிப்பறிக்காரர்களா? மேற்​கொண்டு யோசிப்பதற்குள் துப்பாக்கியிலிருந்து ஐந்து குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பாய்ந்து மோதியின் உடலைத் துளைத்தன.

சையத் மோதி ரத்த வெள்ளத்தில் பிணமாகச் சரிந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்று உணர்வதற்கு முன்னால், காத்திருந்த காரில் தப்பிச் சென்றனர் கொலையாளிகள்.
மோதியின் கொலை நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உலகளவில் புகழ்பெறத் தொடங்கியிருந்த அந்த இளம் விளையாட்டு வீரருக்கு, 26 வயதில் நேர்ந்த அந்தக் கொடூர முடிவை ஜீரணிக்க முடியாமல் விளையாட்டுச் சமூகமே திணறியது. அந்த திடீர் கொலைக்கான காரணம் என்னவென புரியாமல் குழம்பியது போலீஸ்.

“அமைதியானவராயிற்றே.. பொதுவாக யார் வம்புக்கும் போகமாட்டாரே? பகைவர்களே கிடையாதே... அவரைக் கொலை செய்ய யாருக்கு மனம் வந்தது?” என்று இரண்டு மாதக் குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு, மோதியின் காதல் மனைவி அமிதா கதறி அழுதாள். திரண்டிருந்த நண்பர்களும், ரசிகர்களும் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தனர்.

காவல் துறை புலன் விசாரணையைத் தொடங்கியது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள், மோதிக்குத் தெரிந்தவர்கள் எனப் பலரை விசாரித்தது. துப்பு துலங்கவில்லை. வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. 
சி.பி.ஐ களத்தில் இறங்கியது. இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்பட்டது. அந்தக் கொலையை நேரில் பார்த்த ஒரு சாட்சியைக் கண்டுபிடித்தது. அந்த சாட்சி மூலம் மோதியைச் சுட்டவன் பகவதி சிங் என்பது தெரியவந்தது.

பகவதி சிங் கைது செய்யப்பட்டான். அவனிடம் ‘தீவிர’ விசாரணை நடந்தது. மோதியின் கொலையில், அவர் மனைவி அமிதாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அவன் வெளியிட்ட தகவல்களைக் கேட்டு, சி.பி.ஐ அதிர்ச்சியில் உறைந்தது. பின்னணியில் ஒளிந்திருந்த பெரும் அரசியல் பிசாசு இப்போது தலைதூக்கியது.

உத்தரப்பிரதேச மாநில அரசில் அமைச்சராகப் பதவி வகித்த சஞ்ஜய் சிங், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். மாநிலத்திலும், மத்திய அரசாங்கத்திலும் மிகவும் செல்வாக்கு உடையவர்.

மோதி - அமிதா காதல் வளர்ந்த காலம். சையத் மோதியைச் சந்திக்க அமிதா அடிக்கடி வரத்தொடங்கியபோது, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சஞ்சய் சிங்கின் பார்வை அவள் மீது விழுந்தது. சையத் மோதியின் நெருங்கிய நண்பராயிருந்தவர் அமிதாவுக்கும் நெருங்கிய நண்பராக மாறினார். அவரது இல்லத்தில்தான் சையத் - அமிதா ஜோடியின் திருமணமே நடைபெற்றது.

சஞ்சய் சிங் அமிதாவைவிட வயதில் மிக மூத்தவர். ஏற்கெனவே திருமணமாகி, குழந்தைகள் உள்ளவர். ஆனாலும், சஞ்ஜய் சிங்குக்கும் அமிதாவுக்கும் எப்படியோ ரகசியத் தொடர்பு ஏற்பட்டது. அமிதாவின் மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம் வந்ததும், அமிதாவின் கணவன் சையத் மோதி ஓர் இடையூறாகத் தெரிந்தார்.

குற்றம் புரிந்தவர் : காதல் போயின் சாதல்...!

பணம், அடியாட்கள், அரசியல் என்று பலவித வலிமையான பலங்கள் சஞ்சய் சிங்கிடம் இருந்தன. யானையின் பாதையில் குறுக்கிடும் எறும்புபோல் மாட்டினார், சையத் மோதி.

சஞ்சய் சிங் இந்தக் கொடூரமான வேலையை, பழி பாவத்துக்கு அஞ்சாத அகிலேஷ் சிங் என்ற மற்றோர் அரசியல்வாதியிடம் ஒப்படைத்தார். அகிலேஷ் தனது அடியாட்களைக் கொண்டு மோதியைக் கொலை செய்யும் திட்டத்தை அப்பழுக்கின்றி நிறைவேற்றினான்.

சி.பி.ஐ-யின் கண்டுபிடிப்புகள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டன. கைதானவன் கொடுத்த தகவல்களைத் தவிர, சி.பி.ஐ மேலும் சில ஆதாரங்களைக் கண்டுபிடித்தது. ‘அமிதா பெற்றெடுத்த குழந்தையின் உண்மையான தந்தை மோதிதானா?’ என்று சந்தேகத்தை வெளிப்படுத்தி அவளுடைய தாய் எழுதிய கடிதம், சஞ்சய் சிங் - அமிதா தொடர்பு குறித்து சந்தேகப்பட்டு, மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டுவிடுவதாக மோதி எழுதிய கடிதம், அமிதாவின் சில கடிதங்கள் போன்றவற்றை சி.பி.ஐ கைப்பற்றியது.

கொலையாளியான பகவதி சிங்கின் வாக்குமூலம், மற்றுமுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், சையத் மோதி கொலை தொடர்பாக சஞ்சய் சிங்கையும், அமிதாவையும் சி.பி.ஐ கைது செய்தது. கள்ளக்காதல் காரணமாக, சையத் மோதியைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாக, சஞ்சய் சிங் மற்றும் அமிதா மீது குற்றச்சாட்டு எழுப்பியது. கொலையில் தொடர்புடையவர்கள் என்று மொத்தம் ஏழு பேரைக் கைது செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு தொடர்ந்தது.

காங்கிரஸ், ஜனதாதளம், பி.ஜே.பி என்று அடிக்கடி அரசியல் கட்சிகளுக்கிடையில் தாவிக்கொண்டிருந்தவர், சஞ்சய் சிங். அவருக்கு எதிராக சி.பி.ஐ முடுக்கி விடப்பட்டதும், காங்கிரஸுக்குத் திரும்பினார். அரசியல் காய்களை நகர்த்தினார். மத்திய, மாநில அரசுகளின் பெரும் பதவிகளில் இருந்தவர்கள், சஞ்சய் சிங்கையும் அமிதாவையும் காப்பாற்றக் களம் இறங்கினர்.

சி.பி.ஐ-யின் சிறப்பு வக்கீல் குற்றத்தை நிரூபித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அரசியல் தலைவர்கள் முதல் வேலையாக அவரை மாற்ற முயன்றனர். சி.பி.ஐ டைரக்டர் அதற்கு இணங்கவில்லை. அயர்வார்களா அரசியல்வாதிகள்? அரசு மற்றும் சி.பி.ஐ தொடர்பான வழக்குகளில் விசேஷ வக்கீல் வாதாடும் முறையை ஒழித்துக்கட்டும் வகையில் அவசரமாக அரசாணை ஒன்றைப் பிறப்பிக்க ஏற்பாடு செய்தனர்.

குற்றம் புரிந்தவர் : காதல் போயின் சாதல்...!

சி.பி.ஐ-யின் நேர்மையான சிறப்பு வக்கீல் வழக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ஒரு சாதாரண வக்கீல் நியமிக்கப்பட்டார். புது வக்கீல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கினார். சஞ்சய் சிங், அமிதா, அகிலேஷ் போன்றவர்களின் மீது கொலைக்குற்றம் சாட்டும் வாக்குமூலம் திரும்பப் பெறப்பட்டது. பின்னர் மாற்றப்பட்டது. அவர்களுக்கு எதிரான ஆதாரங்களான ஆவணங்கள் நம்பத் தகுந்தவை அல்ல என்று நிராகரிக்கப்பட்டன. வழக்கின் அடிப்படையையே அசைத்துத் தகர்த்தது அரசியல் குறுக்கீடு. விளைவு? சஞ்சய் சிங் மற்றும் அமிதா மீது இருந்த கொலைச்சதிக் குற்றத்துக்கு போதிய ஆதாரம் காட்டப்படவில்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்பட்டது. இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தங்கள் உறவை இனி ரகசியமாக வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தோ என்னவோ, சஞ்சய் சிங்கும், அமிதாவும் சையத் மோதி கொலையுண்ட சில மாதங்களிலேயே ஊரறியத் திருமணம் செய்து கொண்டனர். அமிதாவுக்கும் காங்கிரஸ் கட்சியில் பதவி கிடைத்தது.

மோதி கொலை வழக்கிலிருந்து சஞ்சய் சிங்கும் அமிதாவும் விடுதலையானபின், மிச்சம் இருந்த ஐந்து பேர் என்ன ஆனார்கள்?

வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. பல காலம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில், அரசியல் தாதா அகிலேஷ் சிங்கும், அவனது அடியாள் ஜிதேந்த்ர சிங்கும் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். அமர்பஹதூர் சிங் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இன்னும் ஒருவன் வழக்கு நடக்கும்போதே மரணமடைந்தான். இறுதியில் மோதியைச் சுட்டுக் கொன்ற பகவதி சிங் மட்டும்தான் பிழைத்திருந்தான்.

ஒரு சப்பைக் காரணம் முன் வைக்கப்பட்டு, மோதியைக் கொலை செய்த குற்றவாளி பகவதி சிங் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் திறக்கவே முடியாதபடி சி.பி.ஐ-யின் குரல்வளை நெரிக்கப்பட்டது.

“உண்மையான குற்றவாளிகள் தப்பித்துவிட்டனர். தர்மத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு,  அரசியலில் அடுத்தகட்டங்களுக்கு நகர்ந்துவிட்டனர். கள்ளக்காதல், நம்பிக்கை துரோகம், கூட்டுச்சதி ஆகியவற்றுக்கு பலியான அப்பாவி சையத் மோதியின் மரணத்துக்கு முறையான நியாயம் வழங்க இயலாமல், அரசியலின் வலிய கரங்களில் சிக்கி நீதி தலைகுனிந்துவிட்டது..” என்று சையத் மோதிக்கு நெருக்கமானவர்களால் புலம்பத்தான் முடிந்தது.