மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் 'புரிந்தவர் ! '

மாறியது நெஞ்சம், மாற்றியது யாரோ.. !

என் கதையை என்னைத் தவிர வேறு யார் சொன்னாலும் சரியாக இருக்காது.

நான் ஆல்பர்ட் ஃப்ரெட்ரிக் நுஸ்பாம் (Albert Frederick Nussbaum) சுருக்கமாக ‘ஆல்’. பிறந்தது 1934, ஏப்ரல் 9.

பள்ளிக்கூடத்தில் என் தேவதையைச் சந்தித்தேன். அலிஸியா. புத்திசாலி. திறமைசாலி. பார்த்த கணத்தில் அவளுடைய நீல நிற விழிகளில் என்னை இழந்தேன்.  “என்னைத் திருமணம் செய்துகொள்வாயா..?” என்று மண்டியிட்டு ரோஜாவை நீட்டினேன்.

திடுக்கிட்டாள். “17 வயதில் திருமணமா? வாய்ப்​பேயில்லை..” என்று கத்தரித்தாள்.

நான் அவளைக் கத்தரிக்கவில்லை. ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்தேன். கலையாத காதலைத் தெரிவித்தேன்.

குற்றம் 'புரிந்தவர் ! '

இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தேன், எங்கிருந்தேன் என்பது பற்றி அவளிடம் சொல்லவில்லை. என்னைப் பற்றிய சில உண்மைகளை இப்போது உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
இயற்கை எனக்கு சில திறமைகளை வழங்கியிருந்தது. எப்பேர்ப்பட்ட பூட்டாக இருந்தாலும், சிதைக்காமல் என்னால் திறக்க முடியும். கேமரா, துப்பாக்கி, ரசாயனம், எலக்ட்ரானிக்ஸ் எல்லாவற்றிலும் தேர்ச்சி. சின்ன இயந்திரங்கள் முதல் விமான இன்ஜின் வரை எதையும் பிரித்து, முறையாகப் பழுதுபார்த்து, சரிசெய்வது பொழுதுபோக்கு.

இத்தனைத் திறமைகள் இருந்தும், சிறு வயதிலிருந்தே திருடுவதில்தான் எனக்குக் கிளர்ச்சி கிடைத்தது. 16-வது வயதில், ஒரு காரைத் திருடினேன்.

17-வது வயதில் எப்படியோ ஒரு துப்பாக்கியைச் சம்பாதித்தேன். ஒரு நகைக்கடையில் புகுந்து, துப்பாக்கியால் மிரட்டி கொள்ளையடிக்க முயன்றேன். கடை முதலாளி ரகசிய பொத்தானை அழுத்த, எதிர்பாராத நேரத்தில் போலீஸ் வந்தது. என்னை கைது செய்தது.

இளம் வயது என்பதால், பெரும் தண்டனை விதிக்கப்படவில்லை. கடும் எச்சரிக்கைகளுடன் விடுதலையானேன்.

சில நாட்கள் ராணுவத்தில் பணியாற்றினேன். வேலை செய்யாத துப்பாக்கிகளை ராணுவத்தில் ஏலம்விட்டபோது, வாங்கினேன். பழுதுபார்த்தேன். அந்த ஆயுதங்களை மற்ற மாநிலங்களுக்குக் கடத்தி விற்பனை செய்தேன். ஒரு முறை மாநில எல்லையில் மடக்கப்பட்டேன். கைது செய்யப்பட்டேன்.

ஒஹையோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். அங்கேதான் பாபி வில்காக்ஸனைச் சந்தித்தேன்.


பாபி, செல்லாத காசோலையைக் கொடுத்து, காரை வாங்கிய குற்றத்துக்காக தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தான். நண்பர்களானோம். பாபியின் ஒரு கண் செயற்கைக்கண்.
விடுதலையானதும், பஃபலோ நகரத்துக்குத் திரும்பினேன்.

இந்த ஃப்ளாஷ்பேக்கை எப்படி என் அலிஸியாவிடம் சொல்லமுடியும்?

குற்றம் 'புரிந்தவர் ! '

1960, ஜூலை 23. கத்தோலிக்க தேவாலயத்தில் எங்கள் திருமணம் இனிதே நடந்தது. அப்போது, அலிஸியாவுக்கு 23 வயது. எனக்கு 26 வயது.

திருமண வாழ்வும் இனித்தது. இடையில் எங்களுக்கு ஆலிஸான் என்று ஒரு குட்டி தேவதை பிறந்தாள்.

டிசம்பர் 1961. எதிர்பாராத அந்த அசம்பாவிதம் நேர்ந்தது.

ப்ரூக்லின் வங்கியைக் கொள்ளையடிக்கப் போயிருந்தோம். பாபியும், பீட்டரும் வங்கிக்குள் சென்றிருந்தனர். வெளியில் காரில் காத்திருந்தேன். திடீரென்று வங்கிக்குள் அடுத்தடுத்து துப்பாக்கி சுடப்படும் ஒலி கேட்டது. ஏதோ விபரீதம் நிகழ்ந்துவிட்டது என்று புரிந்தது. சற்று நேரத்தில் பாபியும், பீட்டரும் கொள்ளையடித்த பணத்துடன் வெளியில் ஓடிவந்தார்கள்.

அவர்கள் பாய்ந்து ஏறியதும், காரைக் கிளப்பினேன்.

“வங்கியின் வாயிற்காவலன் துப்பாக்கியைத் தூக்கிவிட்டான். வேறு வழியின்றி சுட வேண்டியிருந்தது..” என்று பாபி சொன்னான்.

“செத்துவிட்டான்...” என்றான் பீட்டர்.

யாரோ தகவல் கொடுத்து, எங்களை மடக்குவதற்கு போலீஸ் வந்துவிட்டது. பாபி, ஒரு போலீஸ்காரரையும் சுட்டுக் காயப்படுத்தினான். காரை விரட்டினேன். தப்பித்தோம்.

இதையெல்லாம் குடும்பத்தில் யாருடனும் பகிர்ந்துகொண்டதில்லை. கொள்ளையோடு ஒரு கொலையும் சேர்ந்துவிட்டதால், போலீஸின் கண்களிலிருந்தும், FBI-யின் தேடுதல்களிலிருந்தும் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் நேர்ந்தது. தலைமறைவானோம்.

1960 முதல் 1962 வரை மூன்று வருடங்களில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் டாலர்களை வங்கிகளில் கொள்ளையடித்திருந்தோம்.

பீட்டர் கர்ரி எப்படியோ போலீஸிடம் சிக்கினான். நாங்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தான்.

பாபியின் காதலி ஜாக்கி ரோஸ். அவளும் எங்களோடு தலைமறைவாக வாழ்ந்தாள். தலைமறைவாயிருந்தபோதும், மூன்று கொள்ளைகளில் ஈடுபட்டோம். ஒரு கட்டத்தில், எனக்கும் பாபிக்கும் கருத்து வேறுபாடு வந்தது. இருவரும் அவரவர் வழியில் பிரிய முடிவு செய்தோம்.

திடீரென்று தனிமைப்படுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். மனைவியையும் இளம் மகளையும் சந்திக்க வேண்டும் என்று பேராவல் கிளர்ந்தது.

நவம்பர் 3, 1962. அலிஸியாவுக்கு போன் செய்தேன். ரகசியமாக வெளியில் வரச்சொன்னேன். அவள் காரில் ஏறியதும், நயாகரா நீர்வீழ்ச்சி வரை காரில் சென்று திரும்பினோம். வழியெங்கும் மனம் திறந்து பேசினேன்.
“FBI எனக்காக வலைவிரித்துக் காத்திருக்கிறது. அவர்களிடம் சிக்க விரும்பவில்லை. ஆனால், உன்னையும் நம் இரண்டு வயதுக் குழந்தை ஆலிஸனையும் பிரிந்து இருக்க முடியவில்லை. என்னுடன் வா. தென் அமெரிக்காவுக்குப் போய்விடுவோம்” என்று அழைத்தேன்.

அலிஸியா தயங்கினாள்.

“நம் சின்னஞ்சிறு குழந்தைக்குத் துரோகம் செய்ய நான் விரும்பவில்லை..”

“நேரம் எடுத்துக்கொள். நாளை மீண்டும் சந்திப்போம். உன் முடிவைச் சொல்..” என்று அவளை இறக்கிவிட்டு, காரில் விரைந்தேன்.
 
மறுநாள். நவம்பர் 4. இரவு மணி ஒன்று. ஸ்டேட்லர் ஹில்டன் ஹோட்டல். அங்கேதான் அலிஸியாவைச் சந்திப்பதாக ஏற்பாடு. காரை பார்க்கிங்கில் நிறுத்தப்போனபோது, அலிஸியாவை கவனித்தேன்.
அவள் முகத்தில் கலவரம்.

“ஓடு.. தப்பித்து ஓடு..” என்று குரல் கொடுத்தாள்.

குற்றம் 'புரிந்தவர் ! '

முந்தின நாள் அலிஸியா யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் என்னுடன் நயாகராவுக்கு வந்திருந்த சில மணி நேரங்களில் அவள் கடத்தப்பட்டாளோ என்று பயந்து, அவளுடைய அம்மா FBI-க்கு போன் செய்திருக்கிறாள். அலிஸியா வீடு திரும்பியபோது, அவளுக்காக FBI அதிகாரிகள் காத்திருந்தனர்.

வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டதை விட, கடமையைச் செய்த ஒரு மனிதர் சுட்டுக் கொல்லப்பட்டது அலிஸியாவின் மனதை மாற்றியிருந்தது. நாங்கள் மறுநாள் சந்திக்கவிருந்தது பற்றிச் சொல்லிவிட்டாள் என்று பிற்பாடு அறிந்தேன்.

என் மீது வைத்திருந்த அபரிமிதமான பிரியம் காரணமாக, அலிஸியா கடைசி நிமிடத்தில் என்னை எச்சரித்திருக்கிறாள்.
 
காரை முழு வேகத்தில் செலுத்தினேன். FBI கார்கள் துரத்தின. பனி பொழிந்த இரவில், வழுக்கும் ஈரமான சாலைகளில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை விரட்டினேன். ஒரு கட்டத்தில் எதிரில் வந்த போலீஸ் கார் மீது என்னுடைய கார் மோதியது. கைகளை உயர்த்தினேன். சரணடைந்தேன்.

ஆறே நாட்களில், பாபியும் அவனுடைய காதலியும் கைதானார்கள்.

நீதிமன்றத்தில் குற்றங்களை ஒப்புக்கொண்டோம். 40 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அலிஸியா, என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவள். என்ஆசை மகளைப் பெற்றெடுத்தவள். அவளே என் குற்ற வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கும் முற்றுப்புள்ளி வைத்தாள்.

ஆனால், நான் கைதான பிறகு, அவள் கடினமான வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. எனவே எங்கள் இளம் மகள் முறையாக வளர்க்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுடன் அவள் மறுமணம் செய்துகொண்டாள். அவளை மணந்தவன், என் மகள் ஆலிஸானை மகிழ்ச்சியுடன் தத்தெடுத்துக்கொண்டான்.

எட்டு வருடங்கள் கழித்து, 1970.

பரோலில் விடுதலையான பிறகு, கலிஃபோர்னியாவுக்குத் திரும்பினேன். இளம் வயதிலிருந்தே மர்மக் கதைகள், குற்றக் கதைகள் படிப்பதில் ஆர்வம் இருந்த எனக்கு, ஏன் ஒரு எழுத்தாளனாக மாறக் கூடாது என்று தோன்றியது. ஒரு குற்றவாளியின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த என்னைவிட சிறப்பாகக் குற்றக் கதைகள் யார் எழுத முடியும்..?

வெவ்வேறு புனைப் பெயர்களில் சிறுகதைகள் எழுதினேன். அவை பிரசுரமாயின. அடுத்த 25 வருடங்களுக்கு கதைகளாக எழுதித் தள்ளினேன். என்னுடைய புத்தகங்களை இப்போதும் நீங்கள் புத்தகக் கடைகளில் பார்க்கலாம்.

இப்போது புரிகிறதா என் முதல் வாக்கியத்தின் அவசியம்?