குற்றம் ‘புரிந்தவர் : சாட்சி உண்டு... ஆனால், சாட்சி இல்லை..!
அமெரிக்கா. மிசௌரி. 1981. ஜூலை 10. சுமார் 300 பேர் வாழும் ஸ்கிட்மோர் என்ற சிற்றூரின் ஷெரீஃப், வெளியூர் நோக்கி வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவருடைய ஒயர்லெஸ் கரகரத்தது.
“ஸ்கிட்மோரில் ஒரு கொலை. உடனே வாருங்கள்.”
கொலை என்றதும், மெக்கல்ராயின் முகம்தான் அவர் மனதில் வந்தது. அவன்தான்துப்பாக்கியோடு அலைபவன். கொலை மிரட்டல் விடுபவன். மிரட்டியதுபோலவே, மெக்கல்ராய் கொலை செய்துவிட்டானா என்ற எண்ணம் மனதில் ஓட, ஊரைப் பார்த்து வண்டியைத் திருப்பினார், ஷெரீஃப்.
ஸ்கிட்மோரில், தனது பெற்றோருக்கு 15-வது குழந்தையாகப் பிறந்தவன், மெக்கல்ராய்.
ஐந்தாம் வகுப்போடு, பள்ளிப் படிப்பைவிட்டான். மற்றவரை அச்சுறுத்தி தனக்குத் தேவையானதைப் பெறுவது அவனுக்கு வாடிக்கையானது. திருடுவான். அடிதடியில் ஈடுபடுவான். பெண்களை வன்புணர்ச்சி செய்வான். நீதிமன்ற தண்டனையிலிருந்தும் தப்பிப்பான். எப்படி?

புகார் கொடுத்தவர் வீட்டுக்கு எதிரில் தன் வாகனத்தைக் கொண்டுபோய் நிறுத்துவான். அவர்கள் வீட்டையே வெறித்துக்கொண்டு இருப்பான். துப்பாக்கியை எடுத்து அவர்கள் கண்ணெதிரில் சுத்தம் செய்வான். வானத்தை நோக்கிச் சுடுவான். இந்த அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து, அவனுக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்களே புகார்களை வாபஸ் வாங்குவார்கள். கோர்ட்டில் சாட்சி சொல்ல வந்தவர்கள், பின்வாங்குவார்கள்.
அந்த ஊரே அவனுக்குப் பயந்து நடுங்கியது. தானியம், பெட்ரோல், மது எதுவாக இருந்தாலும் அவன் விருப்பப்பட்டு விட்டால், அது அவனுடையதாகிவிடும். ஆடுகள், மாடுகள், கோழிகள் என்று எதுவானாலும் அவன் கவர்ந்து சென்றால், தட்டிக் கேட்க முடியாது.
மெக்கல்ராய்க்கு பெண்கள் என்றால் பெரும் சபலம். வெவ்வேறு பெண்கள் மூலமாக 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவனுக்கு இருந்தன.
இந்த நிலையில், 12 வயதே ஆன ட்ரேனா என்பவள் மீது அவன் பார்வை விழுந்தது. வற்புறுத்தி இழுத்துப் போனான். அவளோடு உறவு வைத்துக்கொண்டான். 14 வயது நிரம்பியபோது, அவள் வயிற்றில் குழந்தை உருவானது.
ட்ரேனா வேறு வழியின்றி பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, மெக்கல்ராயுடன் வாழ ஆரம்பித்தாள். ஏற்கெனவே அந்த வீட்டில் ஆலிஸ் என்று அவனுடைய முதல் மனைவி இருந்தாள். இருவரும் அடி, உதை எல்லாம் தினந்தோறும் அனுபவிக்க வேண்டியிருந்தது.
ட்ரேனாவுக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 16 நாட்கள் ஆகியிருந்தன. அவனிடம் அடிவாங்கி முகம் வீங்கிய நிலையில், ஆலிஸ் அழுகையுடன் கேட்டாள்: “இன்னும் எத்தனை நாளைக்கு இவனுடைய அடாவடித்தனங்களுக்கு நாம் பணிந்துபோவது..?”
“என் பெற்றோர், நம் இருவருக்கும் அடைக்கலம் கொடுப்பார்கள்” என்றாள் ட்ரேனா.

கைக்குழந்தையுடன் வந்த மகளையும் அவள் தோழியையும் ட்ரேனாவின் பெற்றோர் அரவணைத்தனர்.
“நிலைமை கைமீறுகிறது. மைனர் பெண்ணுடன் உறவுகொண்டதற்காக சட்டப்படி பெரும் தண்டனையை நீ அனுபவிக்க வேண்டிவரும். தப்பிக்க ஒரே வழி, அவளைத் திருமணம் செய். மனைவி என்ற முறையில் உன் மீது அவள் வழக்கு தொடுக்க முடியாது” என்றார், மெக்கல்ராயின் வழக்கறிஞர்.
மைனர் பெண்ணைத் திருமணம் செய்ய அவளுடைய பெற்றோரின் அனுமதி அவசியம். தங்கள் மகளை மெக்கல்ராய்க்குத் திருமணம் செய்துதர ட்ரேனாவின் பெற்றோர் திட்டவட்டமாக மறுத்தனர்.
மெக்கல்ராய் ஆத்திரமுற்றான். துப்பாக்கியை எடுத்துப் போனான். ட்ரேனாவின் வீட்டு நாய் குரைத்துக்கொண்டு வாசலுக்கு வந்தது. ஒற்றைத் தோட்டாவில் நாயைச் சாகடித்தான். பதறியடித்துக்கொண்டு ட்ரேனாவின் பெற்றோர் வந்தனர். “நாய்க்கு நேர்ந்த கதியே உங்களுக்கும் நேரும். இந்த வீட்டில் இந்தப் பெண்கள் குடியிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?” என்றான். ட்ரேனாவின் பெற்றோர் மிரண்டனர். மகளை அவனுக்கே தாரை வார்த்தனர்.
இரண்டு பெண்களும் வேறு வழியின்றி, அவனோடு வாழ்வதற்குத் திரும்பினார்கள்.
அவ்வப்போது, யாராவது புகார் கொடுத்து, 21 குற்றச்சாட்டுகள் அவன் மீது பதியப்பட்டன. மிரட்டலும் அச்சுறுத்தலும் கொண்டே அத்தனையிலிருந்தும் அவன் விடுதலையாகிக்கொண்டிருந்தான்.
1980. உள்ளூரில் ஒரு பெரிய மளிகைக் கடை. அதன் முதலாளி 70 வயது பொவன்கேம்ப். ‘போ’ என்று ஊராரால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அவருடைய கடையில் மெக்கல்ராயின் மகள் ஒருத்தி சாக்லேட் திருடும்போது பிடிபட்டாள். திருடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு, அந்த சாக்லேட் அவளிடமிருந்து பறிக்கப்பட்டது. நியாயம் கேட்க மெக்கல்ராய் வந்தான். திருடியவள் மெக்கல்ராயின் மகள் என்று தெரிந்ததும், ‘போ’வின் மனைவி ‘தவறுதலாக நேர்ந்த சம்பவம்’ என்று சமாதானத்துக்கு வந்தாள். ஆனால், மெக்கல்ராய் தன்னுடைய செல்வாக்குக்கு விடப்பட்ட ஒரு சவாலாக அதைப் பார்த்தான்.
மெக்கல்ராய் இரவு நேரங்களில் அந்த வயதான தம்பதியர் வீட்டுக்கு எதிரில் தன் வாகனத்தைக் கொண்டுபோய் நிறுத்தி, அவர்களுடைய தூக்கத்தைக் கெடுத்தான்.
1980. ஜூலை. ‘போ’ தன் கடையின் சேமிப்புக் கிடங்கில் இருந்தார். மெக்கல்ராய் அங்கு வந்தான். உதவிக்கு இருந்த பையன்களை சோடா வாங்கி வரச்சொல்லி அனுப்பினான். ‘போ’வுடன் சச்சரவில் இறங்கினான். துப்பாக்கியை எடுத்து ‘போ’வைச் சுட்டான். தோட்டா அவர் கழுத்தில் பாய்ந்தது. மெக்கல்ராய் அலட்சியமாகத் திரும்பி நடந்தான். தெய்வாதீனமாக ‘போ’ பிழைத்துவிட்டார்.
மெக்கல்ராய் கைது செய்யப்பட்டான். ‘கொலை முயற்சி’ என்று அவன் மீது வழக்கு போடப்பட்டது. இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்பீலுக்குப் போவதாக அவன் விண்ணப்பித்தான். பெயிலில் வெளியே அனுப்பப்பட்டான்.
தீர்ப்பு வாசிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மெக்கல்ராய், பெரிய ரைஃபிள் ஒன்றை எடுத்துக்கொண்டு உள்ளூர் மது விடுதிக்குப் போனான். ரைஃபிளைச் சுழற்றிக் காட்டினான்.
“இந்த முறை ‘போ’ தப்பிக்கிறானா பார்ப்போம்” என்று மிரட்டினான். பெயிலில் இருக்கும்போது ஆயுதங்களைக் கையாளக் கூடாது என்று சட்டம் சொன்னது. எந்த சட்டத்தை மெக்கல்ராய் மதித்திருக்கிறான்?
‘போ’வை அவன் மறுபடி சுடுவான் என்று ஊர் மக்கள் மிரண்டு போயினர். ஷெரீஃபைச் சந்தித்தனர். தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர்.
“மெக்கல்ராயுடன் நேரடியாக மோதாதீர்கள்.. அவனிடமிருந்து விலகியே இருங்கள்” என்று ஷெரீஃப் சொன்னார்.
ஜூலை 10, 1981. நகரத்தின் மையத்தில் இருந்த பொது ஹாலில் மக்கள் கூடினர். மெக்கல்ராயின் அட்டூழியம் பற்றி விவாதித்தனர்.
யாரோ ஒருவன் ஓடிவந்தான். “மெக்கல்ராயும், அவன் மனைவி ட்ரேனாவும் குடிப்பதற்காக மது விடுதிக்கு வந்திருக்கிறார்கள்” என்று அறிவித்தான்.
கூடியிருந்தவர்கள் அனைவரும் மொத்தமாக வெளியில் வந்தனர்.

மதுவிடுதி. மனைவியுடன் பீர் குடித்துவிட்டு, மேலும் ஆறு பாட்டில் பீர் வாங்கிக்கொண்டு வெளியே வந்தான், மெக்கல்ராய். ட்ரேனா அவனைப் பின்தொடர்ந்தாள். இருவரும் அவனுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்தனர்.
“அங்கே பார்” என்றாள் ட்ரேனா. நிமிர்ந்து பார்த்தால், பெரும் கூட்டம் ஒன்று வாகனத்தைச் சூழ்ந்திருந்தது.
மெக்கல்ராய் பயப்படவில்லை. அலட்சியமாக சிகரெட் ஒன்றை எடுத்து உதடுகளில் பொருத்தினான். அடுத்த கணம், துப்பாக்கிகள் இயங்கின. தோட்டாக்கள் சிதறின. ஒரு தோட்டா மெக்கல்ராயின் மண்டையில் நுழைந்தது. ஒரு தோட்டா அவன் கழுத்தைத் துளைத்தது. அவன் உதடுகளிலிருந்து சிகரெட் நழுவியது.
ட்ரேனா மிரண்டாள். அலறினாள். வாகனத்திலிருந்து மறுபுறம் வெளியில் குதித்தாள். ஓடினாள்.
அத்தியாயத்தின் தொடக்கத்தில் சொன்னபடி... ஷெரீஃபுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர் ஸ்கிட்மோர் திரும்பினார்.
ஊரின் மையத்தில், காரில் 47 வயது மெக்கல்ராய் இறந்துகிடந்தான். காரில் அங்கங்கே தோட்டாக்களின் துளைகள்.
“சுட்டது யார்?” என்று கேட்டார், ஷெரீஃப்.
“துப்பாக்கி சத்தம் கேட்டதும், எல்லோரும் தலையைக் குனிந்துவிட்டோம். சுட்டவர்களை யாரும் பார்க்கவில்லை” என்று கூடியிருந்தவர்கள் அத்தனை பேரும் சாதித்தனர். பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் எங்கோ மாயமாகியிருந்தன.
எஃப்.பி.ஐ. தருவிக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் அவர்களும் விசாரணை செய்தார்கள். மொத்த ஸ்கிட்மோர் நகரமும் தன் வாய்க்குப் பூட்டு போட்டுக்கொண்டது.
“சுட்டவன் டெல் க்ளெமெண்ட்” என்று ட்ரேனா சுட்டிக்காட்டினாள். ஆனால், டெல் க்ளெமெண்ட்க்கு எதிராகச் சாட்சி சொல்ல வேறு யாருமே இல்லை. மாறாக, அவன் சுடவில்லை என்று ஆணித்தரமாக சாட்சியம் சொல்லத்தான் ஆட்கள் இருந்தார்கள். எத்தனையோ குற்றங்கள் செய்துவிட்டு, சாட்சி சொல்லவிடாமல் மக்களை மிரட்டிவந்த மெக்கல்ராயின் வார்த்தைகளுக்கு இறுதி மரியாதை தருவதுபோல், அவனைச் சுட்டவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்ல யாரும் முன் வரவில்லை.
‘மெக்கல்ராய் இனி யாரையும் அதட்டி மிரட்ட முடியாது. யாரையும் காயப்படுத்த முடியாது’ என்றே மக்கள் குதூகலித்தனர். சுட்டவர்கள் யார் என்று அந்த ஊர் மக்களுக்கு மட்டுமே தெரியும்.
- குற்றம் தொடரும்...