மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் ‘புரிந்தவர் : உயிர் விலையானது, பணம் பறிபோனது...!

குற்றம் ‘புரிந்தவர் : உயிர் விலையானது, பணம் பறிபோனது...!

சென்னை. சுறுசுறுப்பான பாரிமுனை. மக்கள் புழக்கம் நிறைந்த தம்புச்செட்டித் தெரு. கர்நாடகா வங்கியின் சென்னை நகரத் தலைமைக் கிளை. 1983. மே 21. சனிக்கிழமை. காலை 8.15. செக்யூரிடி மல்லையா, வழக்கம்போல வங்கிக் கிளையின் கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தார். மேனேஜர் ஆசனத்துக்கு மேலே மின்விசிறி பேய் வேகத்தில் சுழன்றுகொண்டு இருந்தது. நிறுத்தினார்.

மேஜை மீது மேனேஜரின் கைக்கடிகாரம், பேனா, பாஸ்-புக் போன்றவை கிடந்தன. லெட்ஜர் ஒன்று திறந்து கிடந்தது.

வங்கியைப் பெருக்கிச் சுத்தம் செய்யும் லக்ஷ்மி உள்ளே நுழைந்தாள்.

“மேனேஜர் எல்லாத்தையும் அப்படியே மறந்து வெச்சிட்டுப் போயிருக்காரு. எதையும் தொடாதே..” என்று அவளை எச்சரித்துவிட்டு, டீ குடிப்பதற்காக வெளியே சென்றார் மல்லையா.
சில நிமிடங்கள் கழித்து வங்கியின் உள்ளேயிருந்து லக்ஷ்மி, “கொலை.. பாத்ரூம்ல பொணம்...” என்று அலறியபடி ஓடிவந்தாள்.

கழிப்பறைக்கு ஓடினார் மல்லையா. அங்கே, தரையில், ரத்த வெள்ளத்தில் மேனேஜர் ஞானசம்பந்தத்தின் உயிரற்ற உடல் அலங்கோலமாகக் கிடந்தது. அப்போதுதான் வந்து சேர்ந்த இரண்டொரு வங்கி ஊழியர்கள் அந்த விபரீதத்​தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். போலீஸுக்கும், வங்கி உயர் அதிகாரிகளுக்கும் தகவல் பறந்தது. 

இன்ஸ்பெக்டர், போ​லீஸ் புகைப்படக்காரர், கைரேகை நிபுணர் என காவல் துறை குழு வந்து சேர்ந்தது. போலீஸ் நாய்கள் வந்தன.வங்கியில் இளம் எழுத்​தராகப் பணி​புரிந்த லக்ஷ்மிராஜ் ஷெட்டி பாத்ரூமில் கிடந்த உடலை அடையாளம் காட்டினான்.

குற்றம் ‘புரிந்தவர் :  உயிர் விலையானது, பணம் பறிபோனது...!

“ஐயோ, இது மேனேஜர் ஞானசம்பந்தம்தான்” என்றான். குமுறிக் குமுறி அழுதான்.

போலீஸ் நாய்களால் எந்த உதவியும் இல்லை.

ஆரம்ப விசாரணை​களுக்குப் பின்னர், உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினார் இன்ஸ்பெக்டர். 

வங்கியில் பணம் வைக்கப்படும் பாதுகாப்பு அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதைத் திறக்கும் இரண்டு செட் சாவிகளும் காணாமல் போயிருந்தன.

மாற்றுச் சாவிகள் வரவழைக்கப்​பட்டன. இரும்பு அறை திறக்கப்பட்டது. முந்தின நாள் வைத்த ரூ.13,97,900/- காணாமல் போயிருந்தது.

பணத்துக்காகத்தான் கொலை நடந்துள்ளது என உறுதியானது. ஆனால், போலீஸ் விசாரணையில் துப்பு எதுவும் துலங்கவில்லை. தடயங்களும் சிக்கவில்லை.    

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தது. முந்தின இரவில், கூர்மையான இரும்புக் கம்பியால் முகத்திலும் கழுத்திலும் பலமுறை ஆழமாகக் குத்தப்பட்டும் கனமான துணி ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டும் மரணம் நேர்ந்திருக்கிறது என்று அது தெரிவித்தது.

குற்றம் ‘புரிந்தவர் :  உயிர் விலையானது, பணம் பறிபோனது...!

வங்கியின் பாதுகாப்பு அறை ஓர்அடி கனம்கொண்ட இரும்புக் கதவால் மூடப்பட்டிருக்கும். ஒருசேர இரண்டு வெவ்வேறு சாவிகளைப் பயன்படுத்தினால் மட்டுமே அதைத் திறக்க முடியும். அவற்றில் ஒரு சாவி, கொலையுண்ட மேனேஜர் வசம் இருந்தது. மற்றொரு சாவி, அக்கவுன்டன்ட் சந்திரசேகர ஹோல்லாவிடம் இருந்தது.

சந்திரசேகர ஹோல்லா, தன் வசம் இருக்கும் சாவியைத் தினந்தோறும் தன்னுடன் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது வங்கியின் விதிமுறை. ஆனால், அவர் அதை தனது மேஜை இழுப்பறையில் வைத்துப் பூட்டிவிட்டு, மேஜை சாவியை மட்டும் எடுத்துக்கொண்டு போவது வழக்கம் என்று போலீஸார் அறிந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, கொலை நடந்த அன்று, அவர் மேஜை சாவியையும் அங்கேயே மறந்துவிட்டுச் சென்றிருந்தார். அதனால், கொலையாளியின் கையில் இரண்டு சாவிகளும் கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. 
போலீஸ் திரட்டிய தகவல்களிலிருந்து ஒரு விஷயம் தெளிவானது. வங்கி நடைமுறைகளை நன்றாக அறிந்த வங்கிக் கிளையின் ஊழியர் ஒருவர்தான் கொலை, கொள்ளைகளை நடத்தி இருக்க வேண்டும். 

‘யார் அந்த ஊழியர்?’

வங்கியின் அக்கம்பக்கத்தில் விசாரணை தொடர்ந்தது.

“வங்கிக்கு அருகில் பல வருடங்களாகப் பூ வியாபாரம் செய்து வரும்  கனகா, சில நாட்கள் இரவு நேரத்தில், வங்கிக்கு வெளியே, நடைபாதையில் தூங்குவது வழக்கம். அவளை விசாரித்தால் கொலையாளி பற்றி ஏதாவது தகவல் கிடைக்கலாம்..” என்று வண்டிக்காரர் ஒருவர் கூறினார். 

பூக்காரி கனகாவைத் தேடி, தரமணியில் இருந்த அவளது வீட்டுக்குக் காவலர்கள் சென்றனர். வீடு பூட்டியிருந்தது. கனகா தனது சகோதரி வீட்டுக்குச் சென்றிருப்பதாகத் தெரியவந்தது. ‘அவள் வந்தால் போலீஸாரைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள்’ என்று கூறித் திரும்பினர் போலீஸ்காரர்கள்.

மே 23. திங்கட்கிழமை. இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மீண்டும் வங்கிக்குச் சென்றார். மூன்று பேர் அன்று வேலைக்கு வரவில்லை என்று தெரிந்தது. மூவர் இருப்பிடங்களுக்கும் சென்றார்.    

இருவர் உண்மையான காரணங்களுக்காக வரவில்லை. மூன்றாவது ஊழியர் லக்ஷ்மிராஜ் ஷெட்டி தங்கி இருந்த விடுதிக்குச் சென்றார். அவர் அறை பூட்டியிருந்தது.

“எங்கு போயிருக்கிறார் என்று தெரியவில்லை” என்றார் விடுதிக் காப்பாளர். கொலை நடந்த மே 20-ம் தேதி இரவு லக்ஷ்மிராஜ் விடுதிக்குத் திரும்பவில்லை என்ற தகவலும் கிடைத்தது.

“21 அதிகாலையில் வந்தார். காலை உணவைக்கூட வேண்டாம் என்று புறப்பட்டுச் சென்றுவிட்டார்..” என்றும் காப்பாளர் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் கழித்து, பூக்காரி கனகாவைக் காவலர்கள் சந்தித்தார்கள்.

“வெள்ளிக்கிழமை ராத்திரி 9 மணிக்கு மேல், வங்கியில் வேலை செய்யும் இளைஞன், கதவுகளைப் பூட்டிவிட்டுச் சென்றான். பெரிய பை, பெட்டி ஆகியவற்றை வங்கியின் உள்ளேயிருந்து வெளியே எடுத்து வந்தான்.
ஆட்டோவில் அவற்றை ஏற்றிச் சென்றான்” என்று தெரிவித்தாள் அவள்.

அந்த வங்கி ஊழியன் லக்ஷ்மிராஜ் ஷெட்டிதான் என்று புகைப்படத்தைப் பார்த்து அடையாளமும் சொன்னாள்.

லக்ஷ்மிராஜ் ஷெட்டி - 24 வயது அழகிய இளைஞன். சிவந்த நிறம். 6 அடி உயரம். கருகரு சுருட்டை முடி. வலுவான உடல். கராத்தே வீரன். 

அவனது தந்தை ஷிவராம் ஷெட்டி ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். கர்நாடகா வங்கியின் மங்களூர் தலைமைக் கிளையில், பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். தாய் மாதவி மங்களூரில் பள்ளி ஆசிரியை. உஷாராணி என்னும் திருமணமாகாத சகோதரி ஒருத்தி, ஹாஸனில் ஸ்டேட் பாங்க் கிளையில் வேலை பார்த்து வந்தாள். நான்கே உறுப்பினர்களைக்கொண்ட சிறிய குடும்பம்.

1982 ஆகஸ்ட் மாதம்தான், லக்ஷ்மிராஜ் ஷெட்டி சென்னைக் கிளையில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தான். லக்ஷ்மிராஜ் கடின உழைப்பாளி. விரைவிலேயே மேனேஜர் ஞானசம்பந்தத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான்.
மேனேஜர், தினமும் இரவு 9 மணிவரை வங்கியில் வேலை செய்வது வழக்கம். லக்ஷ்மிராஜ், அவனுடைய பணி நேரத்துக்குப் பிறகும், அவருடைய வேலையில், அவருக்கு உதவி செய்வான். 
தினந்தோறும், அவர்கள் இருவர் மட்டும் இரவு 9 மணிக்கு மேல் வங்கியைப் பூட்டிக்கொண்டுப் போவது வழக்கம்.

மேனேஜர் ஞானசம்பந்தம் வயது முதிர்ந்தவர். லக்ஷ்மிராஜைத் தன் மகன்போலவே கருதி, பாசத்துடன் பழகினார். லக்ஷ்மிராஜ் வங்கியின் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்து கொண்டிருந்தான். போலீஸாரின் விசாரணையில் இதுபோன்ற விவரங்கள் கிடைத்தன.

போலீஸ் முழுமூச்சுடன் லக்ஷ்மிராஜ் ஷெட்டியைத் தேடத் தொடங்கியது. வேலைக்கும் வரவில்லை, விடுதியிலும் இல்லை என்பதால் அவன் சொந்த ஊரான மங்களூருக்குப் போயிருக்கலாம் என்று இன்ஸ்பெக்டர் யூகித்தார். அவருடைய தலைமையில், ஒரு தனிப்படை மங்களூருக்கு விரைந்தது.

26-ம் தேதி இரவு மங்களூர் போய்ச் சேர்ந்த போலீஸார், அவனது பெற்றோர் வீட்டைச் சோதனை இட்டனர். அங்கே அவர்களுக்கு எந்தத் தடயமும் சிக்கவில்லை.

“என் மகன் உடம்பு சரியில்லை என்று மங்களூருக்கு வந்திருந்தான். ஆனால் இப்போது இங்கு இல்லை. எங்கு சென்றான் என்றும் தெரியாது..” என்று அவனது தந்தை சொன்னார்.

மங்களூரில் லக்ஷ்மிராஜின் நண்பர்கள் மற்றும் உறவினர்களது வீடுகள் என்று அவனைத் தேடியும், அவன் சிக்கவில்லை.

போலீஸ் 29-ம் தேதி அதிகாலை சென்னை திரும்பியது. அவன் சென்னையிலேயேதான் எங்கேயோ இருக்கவேண்டும் என்று சந்தேகித்த இன்ஸ்பெக்டர் ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் அவனைத் தேட ஏற்பாடு செய்தார்.

அன்று பிற்பகல் சென்னை பூங்கா ஒன்றில் லக்ஷ்மிராஜைக் கண்டுபிடித்து கைது செய்தது போலீஸ். வங்கிக் கிளையிலிருந்து களவு போன ரூபாய் நோட்டுக்கட்டுகள் சிலவற்றை அவனிடமிருந்து பறிமுதல் செய்தது.
“மிச்சப்பணத்தை எங்கே வைத்திருக்கிறாய்..?”

லக்ஷ்மிராஜ் மிரண்டான்.

“பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தால், உன் தண்டனை குறையும்” என்றார், அதிகாரி.

லக்ஷ்மிராஜ் தன் தந்தைக்கு போன் செய்தான்.

அடுத்த நாளே கொள்ளைப் பணத்துடன் சென்னை வந்து இறங்கிய அவனது தந்தை ரயில் நிலையத்திலேயே கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 12,27,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

லக்ஷ்மிராஜிடம் ‘விசாரணை’யைத் துவக்கியது போலீஸ். நடந்தது அத்தனையையும் கூறத்தொடங்கினான் லக்ஷ்மிராஜ்.

மே 20. வெள்ளிக்கிழமை. இரவு 08.00 மணி. கராத்தே பயிற்சியை முடித்துக்கொண்டு லக்ஷ்மிராஜ் வங்கிக்குத் திரும்பினான். ஞானசம்பந்தம் மட்டும் வங்கியில் இருந்தார்.

லக்ஷ்மிராஜ் வழக்கம்போல் அவருக்கு வேலையில் உதவினான். திடீரென்று அவனது மனதில் ஒரு பேயாட்டம்.

அது பலருடைய வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப் போவது பற்றி அவன் அப்போது உணரவில்லை.

அடுத்த இதழில்...

குற்றம் தொடரும்...