மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் ‘புரிந்தவர் : காசேதான் கடவுளடா...!

குற்றம் ‘புரிந்தவர் : காசேதான் கடவுளடா...!

வங்கியில் மேனேஜர் ஞானசம்பந்தம் அருகில் அமர்ந்து உதவிக்கொண்டிருந்த லக்ஷ்மிராஜ் ஷெட்டி, தற்செயலாகக் கவனித்தான். பாதுகாப்பு அறையின் இரண்டாவது சாவியைத் தன் மேஜை அறையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தார் சந்திரசேகர ஹோல்லா. அந்த மேஜையறையின் சாவியும் லக்ஷ்மிராஜ் ஷெட்டியின் கண்களில் பட்டது.

சற்றுநேரம் கழித்து, ஞானசம்பந்தம் கழிப்பறைக்குச் சென்றார்.

வங்கியில் வவுச்சர்களைத் தைப்பதற்கு தடிமனான, நீண்ட கோணி ஊசிகள் பயன்படுத்தப்படும். அந்த ஊசியை எடுத்துக்கொண்டான், லக்ஷ்மிராஜ். மேனேஜர் வைத்திருந்த டவலையும் எடுத்துக்கொண்டான். ஒரு வெறியுடன் கழிப்பறைக்குள் நுழைந்தான். ஞானசம்பந்தம் அவனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தார்.

லக்ஷ்மிராஜ் சற்றும் தாமதிக்காமல் கோணி ஊசியால் அவரது பின்மண்டையில் குத்தினான். அவர் நம்ப முடியாமல் அவனைப் பார்க்க, ஒரு தந்தையைப்போலத் தன் மீது அன்பு செலுத்தியவரின் முகத்திலும் கழுத்திலும் இரக்கமின்றி சரமாரியாகக் கோணி ஊசியால் குத்தினான். ரத்தம் சுவரிலும் தரையிலும் பீய்ச்சி அடித்தது.

கையிலிருந்த முரட்டு டவலை அவருடைய கழுத்தைச் சுற்றிப் போட்டு, இறுக்கினான்.

ஞானசம்பந்தம் வயதானவர், உடல் தளர்ந்தவர். லக்ஷ்மிராஜ் வலுவானவன். அவனது தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், அவர் கீழே சரிந்தார். விழிகள் பிதுங்கின. ஒருமுறை அமானுஷ்யமாய்க் கனைத்துப் பின் நிரந்தரமாக மௌனமானார்.

லக்ஷ்மிராஜ் வேகமாகச் செயல்பட்டான். அவரிடமும், ஹோல்லாவின் டிராயரிலும் இருந்த சாவிகளைக் கைப்பற்றினான். பாதுகாப்பு அறையைத் திறந்தான். கவுன்ட்டருக்குப் பணத்தைக் கொண்டுவருவதற்கு ஒரு பெட்டி இருந்தது. கொள்ளையடித்த பணத்தை வைக்க அது போதவில்லை. பாதுகாப்பு அறை சாவிகளைப் பத்திரப்படுத்திக்கொண்டான். தெருவுக்கு வந்தான். கதவைப் பூட்டினான்.

சற்றும் எதிர்பாராத வகையில் பூக்காரி கனகா எதிர்ப்பட்டாள். கனகா, வங்கிக்கு அருகே பூ விற்பவள். வியாழன், வெள்ளி இரு தினங்களிலும் வியாபாரம் இரவு நெடுநேரம் வரை தொடரும். அந்த நாட்களில் வீடு திரும்பாமல் வங்கி வாசலிலேயே படுத்துக்கொள்வாள்.

ஷெட்டியின் துரதிர்ஷ்டம், அன்று வெள்ளிக்கிழமை. மேனேஜரும் ஷெட்டியும் சேர்ந்தே வங்கியைப் பூட்டிவிட்டுச் செல்வதை அவள் பலமுறை பார்த்திருந்தாள்.

“பெரிய ஐயா வரல்ல..?” என்று கேட்டாள்.

குற்றம் ‘புரிந்தவர் :  காசேதான் கடவுளடா...!

லக்ஷ்மிராஜ் பதில் சொல்லாமல் வேகமாக நடந்தான். அருகிலிருந்த பர்மா பஜாருக்குச் சென்றான். ஒரு பெரிய பெட்டியையும் பயணப்பையையும் வாங்கிக்கொண்டு திரும்பினான். கொள்ளையடித்த பணத்தை அவற்றில் நிரப்பிக் கொண்டான். மீண்டும் வெளியே வந்தான். வங்கியைப் பூட்டினான்.

ஒரு ஆட்டோவைக் கூட்டி வந்தான். பையையும் பெட்டியையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றான். இதையெல்லாம் கனகா பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் தங்கியிருந்த விடுதியில் லட்சக்கணக்கான ரூபாய்களை வைக்க அவனுக்குத் தைரியமில்லை. ஐந்து நட்சத்திர ஹோட்டலான சோழா ஷெரட்டானில் மோகன்ராஜ் என்ற பெயரில் அன்றிரவு தங்கினான்.

21-ம் தேதி அதிகாலை. தங்கியிருந்த விடுதிக்குச் சென்று, குளித்து  உடைமாற்றினான். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, வழக்கம்போல வங்கிக்குச் சென்றான்.

வங்கி வாசலில் கூட்டம். ஒரு சிதைந்த அரைவட்ட வியூகத்துக்குப் பின்னால் ஆர்வமாய் நிறைய முகங்கள்.

வங்கிக்கு எதிரே போலீஸ் வாகனங்கள். இரண்டு கான்ஸ்டபிள்கள், லத்திகளைச் சுழற்றி அத்தனை பேரையும் ஓர் எல்லைக்குப் பின்னாலேயே நிறுத்தி வைத்திருந்தார்கள்.

“முகமூடிக் கொள்ளைக்காரங்களாம்.. கேஷியரைக் கொன்னுட்டு அத்தனை பணத்தையும் அள்ளிப் போட்டுக்கிட்டுப் போயிட்டாங்களாம்..” என்று அவனிடமே ஒரு பொதுஜனம் வம்பளந்தார்.

லக்ஷ்மிராஜ் கூட்டத்தை விலக்கிக்கொண்டு போனான்.

“யாராவது ஒரு ஸ்டாஃப், பாடியை ஐடண்டிஃபை பண்ண வாங்க..” என்று இன்ஸ்பெக்டர் கூப்பிட்டார்.

“நான் வரேன் சார்..” என்றான் லக்ஷ்மிராஜ்.

ஞானசம்பந்தம் உயிரற்று லேசாக உப்பியிருந்தார்.

“மை காட்!” என்றான். நிஜமாகவே அதிர்ச்சியாயிருந்தது. “மேனேஜர்தான்..” என்றான் குரல் நடுங்க. ‘நல்ல பிள்ளையாக’ குமுறி அழுதான். மெதுவாய் வாசலுக்கு வந்து மற்றவர்களோடு நின்றான்.

“ஷெட்டி பார்த்தியா? மர்டர்தானா?” என்று சக ஊழியர்கள் அவனைச் சூழ்ந்தனர். சோகமாகத் தலையை அசைத்தான். புதிதாக வந்த வாகனத்திலிருந்து போலீஸ் நாய்கள் இறங்குவதைப் பார்த்ததும், லக்ஷ்மிராஜ் பின்வாங்கினான். “வாந்தி வர மாதிரி இருக்கு” என்று சொல்லிவிட்டு விலகினான்.

அடுத்த நாள் கொள்ளையடித்த பணத்துடன் மங்களூருக்கு ரயில் ஏறினான்.

அவன் கொண்டு வந்திருந்த பணத்தைப் பார்த்து அவன் தந்தை அதிர்ந்தார்.

“நம்ம உஷா கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தலாம்ப்பா..” என்றான், லக்ஷ்மிராஜ். மகன் மீது கொண்ட பாசத்தால் அவர்,  அவனைக் காட்டிக்கொடுக்காமல் கொள்ளையடித்த பணத்தைப் பத்திரப்படுத்தினார்.

நடந்த விபரீதங்கள் எதுவும் லக்ஷ்மிராஜின் தாய் மாதவிக்கோ, பெற்றோரைப் பார்க்க மங்களூருக்கு வந்திருந்த அவன் சகோதரி உஷாராணிக்கோ தெரியாது. சகோதரி மீது கொண்ட அபாரமான அன்பு காரணமாக பர்மா பஜாரில் வாங்கியிருந்த புத்தம் புதிய பயணப்பையை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தான், லக்ஷ்மிராஜ்.

உஷாராணிக்கு ஒரே சந்தோஷம். அதை ஹாசனுக்கு எடுத்துச் சென்றாள். தன் தோழி ஜஸ்டின் டிகோஸ்டாவிடமும் மற்றவர்களிடமும் பெருமையுடன் காட்டினாள். அந்த பரிசுப் பொருளே பிற்பாடு, அவள் சகோதரனுக்கு எதிரான ஆதாரமாக மாறப் போகும் பயங்கரம் அவளுக்கு அப்போது தெரியவில்லை!

குற்றம் ‘புரிந்தவர் :  காசேதான் கடவுளடா...!

அந்த இக்கட்டான நேரத்தில் தொடர்ந்து வங்கிக்குச் செல்லாமல் இருந்தால் சந்தேகம் வரும் என்று தந்தை அறிவுறுத்த, லக்ஷ்மிராஜ் கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, 29-ம் தேதி ரயிலில் சென்னை திரும்பினான். போலீஸாரிடம் பிடிபட்டான். மீதியிருந்த தொகையுடன் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அவன் தந்தையும் பிடிபட்டார்.
லக்ஷ்மிராஜ் ஷெட்டிதான் கொலைகாரன் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

அதைப் படித்துவிட்டு அவனது தாயும் சகோதரியும் துடிதுடித்துப் போனார்கள். உஷாராணி, லக்ஷ்மிராஜ் தனக்குப் பரிசாக வழங்கிய அந்தப் பையைப் பார்த்தாள். அது தூக்குக்கயிறாகக் காட்சி அளித்தது.
ஹாசனில் இருந்து மங்களூருக்குத் திரும்பினாள். பிரமை பிடித்தாற்போல் இருந்த அம்மாவைப் பார்த்தாள்.

“உஷா... இதெல்லாம் நிஜம்தானாடி? நம்ம லக்ஷ்மிராஜா இப்படிப் பண்ணிட்டான்? அத்தனை பேரும் குத்துற மாதிரி பார்க்கறாங்களேடி..” என்று புலம்பினாள் அம்மா.
மே 30.

உஷா வெறித்த பார்வையுடன் உட்கார்ந்திருந்தாள்.

வெளியில் போகப் பிடிக்கவில்லை. ஊர் முழுக்க தீப்பிடித்த மாதிரி செய்தி பரவியிருந்தது. இனிமேல் எப்படி உலகத்தை எதிர்கொள்ள முடியும்?

ஜானவாச காரில் மாப்பிள்ளை ஊர்வலம். தோழிகளின் கிண்டல்களுக்கு நடுவில் அவள். கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் அம்மா. தலையை ஆதரவாய் வருடும் அப்பா. கைகளை பற்றிப் புன்னகை செய்யும் லக்ஷ்மிராஜ்.

எதுவும் இனிமேல் இல்லை. ஒன்றுதான் மிச்சமிருந்தது.

“நான் கூட்டிட்டுப் போற இடத்துக்கு வரியாம்மா” என்றாள் உஷா திடீரென்று.

“வந்தா?”

“எல்லாக் கேள்வியும் நின்னு போயிடும்.. அழுத மூஞ்சியோட வேண்டாம். அழகா வா... சிரிச்சிட்டே வா...”

அவள் எங்கே கூப்பிடுகிறாள் என்று அந்தத் தாய்க்குப் புரிந்தது. உஷா அற்புதமாய் அலங்கரித்துக்கொண்டாள். இருவரும் புறப்பட்டார்கள். குற்றமும் கேலியுமாகப் பார்த்த பார்வைகளை அலட்சியம் செய்து நடந்தார்கள்.
அலைகள் நடனமாட, ‘ஹோ’வென்று ஆர்ப்பரித்தது, அரபிக்கடல்.

“கடல் தாயே, எங்களை ஏற்றுக்கொள்..” என்று இருவரும் அலைகளுக்குள் நடந்தார்கள். சமுத்திரம் அவர்களை சம்மதத்துடன் ஏற்றது.
 
கொலை மற்றும் கொள்ளையடித்த குற்றங்களுக்காக லக்ஷ்மிராஜ் ஷெட்டி மீதும் கொலையாளியைக் காப்பாற்றி, பணத்தைப் பதுக்கி வைத்ததற்காக அவன் தந்தை ஷிவராம் ஷெட்டி மீதும் போலீஸ் வழக்கு தொடர்ந்தது.
பூக்காரி கனகாவை முக்கிய சாட்சியாக முன் நிறுத்தியது. வங்கிக் கிளை ஊழியர்கள், விடுதிக் காப்பாளர், ஆட்டோ ஓட்டுநர், ஹோட்டல் சோழாவின் சிப்பந்திகள், பெட்டி, பைகளை விற்ற பர்மா பஜார் கடைக்காரர், அந்தப் பையின் அடையாளத்தை நன்கு தெரிந்திருந்த சகோதரியின் தோழி போன்ற பலரும் லக்ஷ்மிராஜுக்கு எதிராகச் சாட்சி சொன்னார்கள்.
 
பரபரப்பான அந்த வழக்கின் தீர்ப்பு, 1985-ம் ஆண்டு, அக்டோபர் 28-ம் தேதி வாசிக்கப்பட்டது.

சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், மேனேஜர் ஞானசம்பந்தத்தைக் கொடூரமாகக் கொலை செய்து, பணத்தைக் கொள்ளையடித்த குற்றவாளி லக்ஷ்மிராஜ் ஷெட்டிதான் என்று தீர்மானித்து அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

மேல் முறையீட்டில், லக்ஷ்மிராஜ் ஷெட்டியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

மகனுக்கு உதவிய தந்தை ஷிவராம் ஷெட்டிக்கு மூன்று வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைக்கூண்டு. எட்டாத உயரத்தில் ஜன்னல் சதுரம். உறுதியான கம்பிகள் வெளியுலகத்தின் காற்றுக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தன.
 
லக்ஷ்மிராஜ் சுவர்கள் சேரும் மூலையில் ஒடுங்கிச் சரிந்திருந்தான். எத்தனை இழப்புகள்?

துரோணர் போன்ற ஞானசம்பந்தத்தை வீழ்த்தி அவர் குடும்பத்தைச் சிதறடித்த சோகம். பத்திரப்படுத்த நினைத்த அத்தனை பணமும் மறுபடியும் கைமாறிப் போன துக்கம். கம்பீரமான அப்பாவைத் தலைகுனிய வைத்த பாவம்.

காறி உமிழப்படும் எச்சிலைத் தவிர்க்க வேண்டித் தயங்காமல் சமுத்திர தேவனின் மடியில் தலையைக் கொடுத்துவிட்ட அம்மா, சகோதரி.

குற்றம் புரிந்தது யார்? ஞானசம்பந்தமா? அம்மாவா? உஷாவா? அவர்களுக்கு ஏன் இந்த மரண தண்டனை?

அவனுக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. உஷாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. ஞானசம்பந்தத்தைப் பார்த்து அவர் காலில் விழ வேண்டும்போல் இருந்தது. சீக்கிரமே போய்விட வேண்டும். சீக்கிரமே போய்விட வேண்டும்!

ஆனால், காத்திருப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.