குற்றம் ‘புரிந்தவர் : கொன்றுவிட்டு வா.. !
மார்ச் 13, 1964.
வின்ஸ்டன் மோஸ்லி தன் வீட்டில் படுத்திருந்தான்.
“எழுந்திரு. போ, கொல்..! ஒரு பெண்ணை உடனடியாகக் கொல்” என்று அவன் மண்டைக்குள் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. திடுக்கிட்டு விழித்தான். கடிகாரத்தைப் பார்த்தான். இரவு மணி 2.00.
பக்கத்தில் அவன் மனைவி சுருட்டிப் படுத்துக்கொண்டு நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
“யோசிக்காதே. இன்று நீ கொலை செய்ய வேண்டிய தினம்” மோஸ்லியின் மண்டைக்குள் மீண்டும் அந்தக் குரல் கேட்டது. அவ்வப்போது அவனுக்குள் இந்தக் குரல் கேட்கும். “புறப்படு. இன்று பூட்டிய வீட்டுக்குள் நுழைந்து நீ திருட வேண்டும்” என்று கட்டளையிடும். அதன் ஆணைப்படி அவன் சில வீடுகளில் திருட்டுத்தனமாக நுழைந்து களவாடி வருவான்.
அவனை மிரட்டி உறக்கத்திலிருந்து எழுப்பிய அந்தக் குரல், அதன் ஆணையை நிறைவேற்றும் வரை ஓயாது என்று அவனுக்குத் தெரியும்.
மோஸ்லி ஒலியெழுப்பாமல் படுக்கையறையிலிருந்து வெளியில் வந்தான். கதவைச் சாத்திவிட்டு, வீட்டின் இன்னோர் அறைக்குச் சென்று, மெல்லக் கதவைத் திறந்து பார்த்தான். அவனுடைய இரண்டு குழந்தைகளும் கரடி பொம்மைகளைக் கட்டிப்பிடித்தபடி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தனர்.
மோஸ்லி கிச்சனுக்குச் சென்று கூரான ஒரு கத்தியைத் தேர்ந்தெடுத்தான். கார் சாவியை எடுத்துக்கொண்டான். காலணிகளை அணிந்துகொண்டான்.
அவனுடைய வேட்கையைத் தணிக்க ஒரு பெண் கிடைக்க மாட்டாளா என்று இரவு வேட்டைக்குப் புறப்பட்டான்.
கேதரின் ஜெனோவிஸ்க்கு (Catherine Genovese), 28 வயது. எளிமையான தோற்றம். நீள்வட்ட முகம். குட்டையாக வெட்டப்பட்ட கூந்தல். நீண்ட கழுத்து. தோழிகளும் நெருக்கமானவர்களும் அவளை ‘கிட்டி’ என்று செல்லமாக அழைப்பார்கள். அவள் பொதுவாக அமைதியானவள். யாரிடமும் அதிர்ந்துகூட பேசமாட்டாள். இரவு நேர மதுவிடுதியில் மேனேஜராகப் பணி புரிந்துகொண்டிருந்தாள்.

மோஸ்லி பெண் வேட்டைக்குக் கிளம்பிய அதே மார்ச் 13. ஜெனோவிஸ் அன்றைய பணிகளை முடித்துவிட்டு, மது விடுதியை மூடினாள். வீசிய குளிர்க் காற்று காதுகளை விறைக்க வைத்தது. வீட்டுக்குப் போய் கனமான போர்வைக்குக் கீழ் கிடைக்கப் போகும் வெப்பத்தை எண்ணியபடியே, தன் காரில் ஏறினாள். வீடு நோக்கி செலுத்தினாள்.
நேரம் இரவு 3:15. இருள் அடர்ந்த மரங்களில் பனி இறங்கிக்கொண்டிருந்தது.
தன்னுடைய அபார்ட்மென்ட் இருந்த கட்டடத்துக்கு 100 மீட்டர் தொலைவில் காரை பார்க் பண்ணிவிட்டு ஜெனோவிஸ் இறங்கினாள். அவளுடைய கார் வந்து நிற்பதை இருட்டில் இரண்டு கண்கள் நோட்டமிட்டுக்கொண்டிருந்ததை அவள் உணரவில்லை.
எங்கெங்கோ சுற்றிவிட்டு தன் வேட்டைக்கு ஒரு பெண் கிடைக்காமல் எரிச்சலும் வெறுப்புமாக மோஸ்லி நம்பிக்கையிழந்திருந்த நேரத்தில், ஒரு கார் நிற்பதையும் அதிலிருந்து ஒரு பெண் இறங்கி இருட்டில் தனியே நடப்பதையும் கவனித்தான். தன் காரிலிருந்து பாம்புபோல் நழுவி இறங்கினான்.
ஜெனோவிஸ் தன் அபார்ட்மென்ட் நோக்கி நடந்துகொண்டிருந்தபோது, குறுக்கிட்டான் வின்ஸ்டன் மோஸ்லி.
தனிமை. இரவின் அமைதி. திடீரென்று குறுக்கிடும் ஓர் ஆண். இருட்டில் அவன் கைகளில் பளபளத்த கத்தியைப் பார்த்த கணத்திலேயே ஜெனோவிஸ் ஆபத்தை உணர்ந்தாள். அவள் இதயம் தன் துடிப்பைத் தவறவிட்டது. மிரண்டாள். சட்டென்று தன்னுடைய அபார்ட்மென்ட் இருந்த கட்டடத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
மோஸ்லி அவளுக்குப் பின்னாலேயே ஓடினான். அவளை வெகு விரைவில் எட்டிப் பிடித்தான். அந்த வேகத்திலேயே கையில் இருந்த கத்தியால் அவளுடைய முதுகில் இரு முறை குத்தினான்.
“ஹெல்ப்.. ஹெல்ப்..” என்று ஜெனோவிஸ் அலறினாள். கத்தியால் குத்தப்பட்டதில், ஜெனோவிஸின் நுரையீரல்கள் சிதைக்கப்பட்டன. அதன் காரணமாக அவளால் பெருங்குரலெடுத்து கத்த முடியவில்லை.
குளிர் மிகுந்த இரவு. அக்கம் பக்கத்தில் கதவுகளும் ஜன்னல்களும் மூடியே இருந்தன. அவற்றைத் தாண்டி உள்ளே இருப்பவர்களுக்கு அவளுடைய பலவீனமான குரல் எட்டியதா, இல்லையா என்றே புரியவில்லை.
உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்த ராபர்ட் மோசர் என்ற நபர் மட்டும், யாரோ உதவி கேட்டு கத்துவதைக் கண்டு எழுந்தார்.
ஜன்னலைத் திறந்து பார்த்தார். இருட்டில் ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தாக்குவதுபோல் பனித் திரையைத் தாண்டி நிழலுருவமாகத் தெரிய.. “ஏய்.. அந்தப் பெண்ணைவிடு..” என்று கத்தினார்.
அந்தக் குரல் கேட்டதும், மோஸ்லி திடுக்கிட்டான். அவருக்குத் தன் முகத்தைக் காட்டாமல் அங்கிருந்து ஓடினான்.
ராபர்ட் மோசர் குளிருக்கு பயந்து ஜன்னலை மறுபடியும் மூடிக்கொண்டார். காவல் துறைக்கு போன் செய்தார். “ஒரு பெண்ணை யாரோ ஒருவன் தாக்கினான். அவள் காயப்பட்டு தள்ளாடிக்கொண்டு தன் வீடு நோக்கி நடக்கிறாள்” என்று சொன்னார்.

தாக்கப்பட்டிருந்த ஜெனோவிஸ் அங்கிருந்து தன் வீட்டின் பின்வாசலை நோக்கி தளர்வாக நடந்தாள்.
ராபர்ட் மோசரைத் தவிர இன்னும் பலருக்கும் ஜெனோவிஸின் பலவீனமான அலறல் அந்த நேரத்தில் கேட்டது. அந்த நேரத்தில் குடித்துவிட்டு தாமதமாக வீடு திரும்பும் சிலர் சச்சரவில் ஈடுபடுவதும் காதலர்கள் சண்டை போட்டுக்கொள்வதும் நண்பர்கள் கூச்சல் போடுவதும் சகஜம் என்பதால், இதையும் அதைப் போன்ற ஓர் ஒலி என்றே அவர்கள் நினைத்துவிட்டார்கள். வெளியே வந்து அவளைக் காப்பாற்ற வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை.
மோஸ்லி தன்னுடைய காருக்கு வேகமாக ஓடினான். காரை அங்கிருந்து கிளப்பி, இரண்டு தெருக்கள் திரும்பியதும் நிறுத்தினான்.
வீடுகளில் மூடிய கதவுக்கு உள்ளே இருந்தவர்கள் அவனுடைய முகத்தைப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் ஜெனோவிஸ் அவனை நேருக்கு நேராகப் பார்த்திருந்தாள். பிற்பாடு அவனை போலீஸில் அவளால் அடையாளம் காட்ட முடியும்.
“முட்டாள், உன்னைக் கொல்லச் சொன்னால், அவளைத் தாக்கிவிட்டு கோழைபோல் ஓடி வந்துவிட்டாயே?” என்று அவனுள் அந்தக் குரல் அதட்டி மிரட்டியது.
மோஸ்லி காரிலிருந்து இறங்கினான். பின்இருக்கையில் வைத்திருந்த பெரிய தொப்பி ஒன்றை எடுத்து அணிந்தான். தொப்பியின் நிழல் அவனுடைய முகத்தின் பெரும் பகுதியை மறைத்தது.
கார்களை நிறுத்தும் பார்க்கிங் பகுதிகளில் அவளைத் தேடினான். அங்கிருந்த சில கட்டடத்தின் வாயில்கள், பின்வாயில்கள் என்று ஒவ்வோர் இடமாகத் தேடினான்.
ஒரு அபார்ட்மென்ட்டின் பின்வாயில் கதவு திறந்திருப்பதைக் கவனித்தான். நெருங்கினான். இருட்டில் நின்று எட்டிப் பார்த்தான். அவன் முகத்தில் குரூரப் புன்னகை மலர்ந்தது. முதுகில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களால் தளர்ந்து போயிருந்த அவள் ஹாலிலேயே குப்புறக் கிடந்ததை மோஸ்லி கவனித்தான்.
மோஸ்லி உள்ளே நுழைந்தான். ஜெனோவிஸைப் பார்த்தான். அவள் தளர்ந்திருந்தாலும் இன்னும் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள். தன் மீது நிழல் படிந்ததும் திரும்பிப் பார்த்தாள்.
மோஸ்லியைப் பார்த்ததும், “என்னை விட்டுவிடு” என்று ஹீனமாகக் கெஞ்சினாள்.
“இரக்கம் காட்டாதே” என்று அவன் மண்டைக்குள் அதிகாரக் குரல் கேட்டது. மோஸ்லி அந்தக் குரலின் ஆதிக்கத்தில் செயல்பட்டான். கத்தியை உயர்த்தினான். பல முறை அவளைக் குத்தினான். தடுக்கப் பார்த்து ஜெனோவிஸ் கையை உயர்த்தினாள். கத்தி, அவளுடைய கைகளிலும் காயங்களை ஏற்படுத்தியது.
ஜெனோவிஸ் நிறைய ரத்தம் இழந்தாள். போராடும் சக்தியை இழந்தாள். அவள் தளர்ந்து, கைகளும் கால்களும் பரப்பிக்கொண்டு கிடந்தபோது, மோஸ்லி அவளுடைய உடைகளைப் பிய்த்தான். ஒரு வெறியுடன் வன்புணர்ச்சி அங்கு நடந்தேறியது.
எதற்காக அவள் தாக்கப்பட்டாள் என்று போலீஸார் ஆராயக்கூடும். அது, கொள்ளையடித்ததாக இருக்கட்டும் என்று மோஸ்லி நினைத்தான். அவளுடைய பர்ஸைத் திறந்து அதிலிருந்த 49 டாலர்களையும் சுரண்டி எடுத்துக்கொண்டான். மொத்தத் தாக்குதலும் கிட்டத்தட்ட 30 நிமிடங்களில் முடிந்துபோனது.
இந்த நேரத்தில் அந்தக் கட்டடத்தில், பக்கத்தில் இருந்த யாருக்கோ ஜெனோவிஸின் பலவீனமான கதறல் கேட்டிருக்க வேண்டும். எங்கோ ஒரு கதவு திறக்கப்படும் ஒலி கேட்டது. மோஸ்லி திடுக்கிட்டான்.
அடுத்த இதழில்...