மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் ‘புரிந்தவர் : யாருக்கோ,என்னவோ நடக்கட்டும்...!

குற்றம் ‘புரிந்தவர் : யாருக்கோ,என்னவோ நடக்கட்டும்...!

எங்கோ ஒரு கதவு திறக்கப்படும் ஒலி கேட்டதும், ஜெனோவிஸை அப்படியே விட்டுவிட்டு, மோஸ்லி சட்டென இருட்டில் நழுவிக் கலந்துவிட்டான்.

ஜெனோவிஸின் முனகல் ஒலி கேட்டு, கதவைத் திறந்து பார்த்தவள், சோஃபியா என்ற பெண்மணி. ஜெனோவிஸ் அலங்கோலமாகக் கிடப்பதைப் பார்த்ததும், வெளியில் ஓடிவந்தாள். அந்தக் கணத்தில், ஜெனோவிஸைத் தாக்கியவன் அங்கே இருட்டில் ஒளிந்திருக்கலாம் என்றுகூட அவள் யோசிக்கவில்லை.

ஜெனோவிஸ் தன்னுடைய இறுதி நிமிடங்களில் இருந்தாள். போலீஸுக்கு மீண்டும் போன் போனது. இந்த முறை போலீஸ் வந்தது.

சற்று நேரம் கழித்து, ஆம்புலன்ஸ் வந்தது. ஜெனோவிஸை அள்ளிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தது. ஆனால், வழியிலேயே அவள் இறந்துபோனாள்.

போலீஸ் அக்கம் பக்கத்தில் விசாரித்தது. கிட்டத்தட்ட 30 பேர் அந்த நேரத்தில் ஜெனோவிஸின் அவலமான குரலைக் கேட்டிருந்தனர். பலர், கணவன்-மனைவிக்கு இடையில் நடக்கும் சச்சரவு என்று அதை நினைத்துக்கொண்டார்கள். அங்கு ஒரு கொலை நடக்கிறது என்று பலருக்குத் தெரியவில்லை.

‘ஜெனோவிஸ் குடியிருந்த கட்டடம் அமைக்கப்பட்டிருந்த விதம் காரணமாகவும் தாக்குதல் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்ததாலும் தாக்குதலை முழுமையாகப் பார்த்தவர்கள் யாருமே இல்லை’ என்று காவல் துறை கையைப் பிசைந்தது. 

குற்றம் ‘புரிந்தவர் : யாருக்கோ,என்னவோ நடக்கட்டும்...!

காவல் துறையினரின் அலட்சியமான போக்கும் அக்கம்பக்கத்து மக்களின் பொறுப்பற்ற தன்மையும் பத்திரிகைகளைக் கொந்தளிக்கச் செய்தன.

இதுபற்றி எழுதிய பத்திரிகைகள், ஒரு பெண் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, அதைத் தடுப்பதற்கோ, அதில் குறுக்கிடுவதற்கோ எண்ணம் வராமல் யாருக்கோ என்னவோ நடக்கிறது என்று அக்கம்பக்கத்தில் விட்டேற்றியாக இருந்தவர்களைச் சாடின. 

“சட்டத்தை மதிக்கும் மரியாதைக்குரிய குடிமக்கள், மற்றவருக்கு பாதிப்பு ஏற்படும்போது, சற்றும் அதைப் பற்றி பொறுப்பெடுத்துக்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது” என்று கடுமையாக விமர்சித்து எழுதின.
பத்திரிகைகள் இந்தக் கொலை வழக்கைக் கிளறி, பூதாகரமாக ஆக்கியதும், அது மனநல ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் முக்கியமான ஒரு சம்பவமாகப் பார்க்கப்பட்டது.
ஒரு குற்றம் நடக்கும்போது, அதைத் தடுக்க நினைக்காதவர்களின் மனநிலை என்ன என்று உளவியல் நிபுணர்கள் ஆலோசித்தனர். ‘The bystander effect’ அல்லது ‘வேடிக்கை பார்க்கும் மனப்பான்மை’ என்று மனவியல் நிபுணர்கள் புதிதாக ஒரு மனநிலையை வர்ணித்தார்கள்.

ஜெனோவிஸ் இறந்து ஆறு நாட்களாகியிருந்தன.

வின்ஸ்டன் மோஸ்லி தூக்கத்திலிருந்து குரலால் எழுப்பப்பட்டான்.

“இன்று நீ களவாட வேண்டிய தினம்.”

மோஸ்லி பூட்டிய ஒரு வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைய முற்பட்டான். சற்றும் எதிர்பாராத விதமாக அலாரம் ஒலித்து வீட்டிலிருந்தவர்களும் அக்கம்பக்கத்தவரும் விழித்தனர். தப்பித்து ஓடப் பார்த்தபோது, அவன் பிடிபட்டான்.

போலீஸ் அவனுடைய பழைய சரித்திரத்தை ஆராய்ந்தது. அவன் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை. திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் வேறு இருந்தார்கள்.
போலீஸின் சிறைக்காப்பில் இருந்தபோது, அவனிடம் ஓர் அதிகாரி புரட்டிப் புரட்டிக் கேள்விகள் கேட்டார்.

“எதற்காக பூட்டிய வீட்டுக்குள் நுழைந்தாய்?”

“இதற்கு முன்னால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுத்தனமாக நுழைந்து களவாடியிருக்கிறேன்.. குரல் ஆணையிடும்போது, என்னால் மீற முடியாது” என்றான், அவன்.
“குரலா..? யார் குரல்?”

“தெரியாது.. களவாடச் சொன்னால், களவாடுவேன். கொல்லச் சொன்னால் கொல்வேன்” என்று அவன் சொன்னதும், அதிகாரி விறைத்தார்.

“கொலை செய்திருக்கிறாயா..?”

“ஆமாம். இதுவரை மூன்று பேரை..”

குற்றம் ‘புரிந்தவர் : யாருக்கோ,என்னவோ நடக்கட்டும்...!

அந்த பலவீனமான தருணத்தில், மோஸ்லி “சென்ற வாரம் ஜெனோவிஸைக் கொன்றதும் நான்தான்” என்று தானாகச் சொன்னான்.
“கேதரின் ஜெனோவிஸைக் கொன்றது நீயா?”

“ஆமாம்.”

குறிப்பிட்ட நாளில் குரலின் ஆணைக்குக் கட்டுப்பட்டு இருட்டில் காத்திருந்ததையும், தனியே வந்து மாட்டிய ஜெனோவிஸைத் தாக்கியதையும் அவன் தெளிவாக விவரித்தான்.
“அவளுக்கும் உனக்கும் என்ன பகை..?”

“அவளை முன்பின்கூட நான் பார்த்ததில்லை.”

“இன்னும் எத்தனை பேரை இப்படித் தாக்கியிருக்கிறாய்..?”

“சொன்னேனே! மேலும் இரண்டு பெண்கள் என்னால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்..”

“பெண்கள் மீது உனக்கு என்ன வெறுப்பு..?”

“வெறுப்பெல்லாம் இல்லை. பெண்கள் பலவீனமானவர்கள். எதிர்த்துப் போராட இயலாதவர்கள். அவர்களைக் கொல்வது சுலபம்..”

மோஸ்லி மனநல மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டான். அவர்கள் அவனை ஆராய்ந்தார்கள். இறந்துபோன பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வதில் அவனுக்கு இன்பம் கிடைக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
மோஸ்லி, காவல் துறையிடம் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு முதலில் வாக்குமூலம் அளித்திருந்தாலும், வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது, “நான் குற்றவாளி இல்லை” என்று வாதாடினான். ஆனால் அவனுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக அமைந்திருந்ததை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மோஸ்லியின் வழக்கறிஞர், “என் கட்சிக்காரர்  மனநலம் குன்றியவர். அந்த அடிப்படையில் அவருக்கு விடுதலை அளிக்க வேண்டும்..” என்று கோரிக்கை வைத்தார்.

அன்று இரவு நடந்த விவரங்களை முழுமையாகச் சொல்லும்படி மோஸ்லியை, நீதிபதி பணித்தார். 

ஜெனோவிஸை எப்படிக் காத்திருந்து தேடிப் பிடித்துக் கொன்றான் என்பதைப் பெருமையுடன் மோஸ்லி முழுமையாக விவரித்தான்.

ஜூரர்கள் அதிர்ந்து போயினர்.

“இவனா மனநலம் குன்றியவன்? இல்லை. இந்தக் கொலை தற்செயலாக நடந்த விபத்து அல்ல. திட்டமிட்டுக் காத்திருந்து, ஒரு பெண்ணைத் தாக்கியிருக்கிறான். அவன் விலகிப் போயிருந்தால், அவள் பிழைத்திருக்கக்கூடும். அவள் குற்றுயிராகக் கிடந்தபோது, மீண்டும் தேடி வந்து அவளை பல முறை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறான். அவள் சாகக் கிடந்தபோது, சற்றும் இரக்கமில்லாமல் அவளுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கிறான். இவனை விடுதலை செய்வது இயலாது” என்று ஜூரர்கள் முடிவு செய்தார்கள்.

ஜூன் 11, 1964. மோஸ்லி கொலைக்குற்றவாளி என்று தீர்ப்பானது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மோஸ்லி அந்தத் தீர்ப்பைக் கேட்டு சற்றும் அதிரவில்லை.

நீதிபதி பேசும்போது, “பொதுவாக மரண தண்டனைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், இந்த அரக்கனை தூக்கில் தொங்கவிடுவதற்கு நானே தயாராக இருக்கிறேன்” என்று சொன்னார்.
அப்பீலில், அவனுடைய மனநலத்தைக் கருத்தில்கொண்டு, மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

மோஸ்லி சிறைச்சாலையில் சும்மா இருந்துவிடவில்லை. தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டான்.

1968, மார்ச் 18. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான்.

“இதுதான் நீ தப்பிக்க சரியான சந்தர்ப்பம்..” என்று குரல் மண்டைக்குள் ஓங்கி ஒலித்தது.
 
மோஸ்லி வாகனத்தில் அவனுடன் வந்த காவல் அதிகாரியைத் தாக்கினான். அவருடைய ஆயுதத்தைப் பறித்துக்கொண்டு தப்பித்தான். ஓடும் வழியில் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டைப் பார்த்தான்.
“அந்த வீட்டுக்குள் நுழை” என்று அவனுடைய மண்டைக்குள் குரல் ஆணையிட்டது.

பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்தான். மேத்யூ குலாகா என்கிற தம்பதியினரின் வீடு அது. மூன்று நாட்களுக்கு யாரும் வரவில்லை. சமையலறையிலிருந்து உணவை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு, படுக்கையறையில் சுகமாகத் தூங்கிக்கொண்டு, நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருந்தான். 

மூன்று நாட்களுக்குப் பிறகு, வீட்டின் சொந்தக்கார தம்பதியினர் வந்தனர். வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர். அங்கே மோஸ்லியைப் பார்த்ததும் மிரண்டார்கள். மோஸ்லி உடனடியாக அவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டான்.

மேத்யூ குலாகாவைக் கட்டிப்போட்டு, வாயில் துணியை அடைத்தான். அவருடைய மனைவியை அவர் கண்ணெதிரிலேயே கற்பழித்தான். அவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு, அவர்களுடைய காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்தான்.

போகும் வழியில், ஒரு பெண்மணியும் அவளுடைய இளம் மகளும் அவர்களுடைய வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்தான். திடீரென்று அவனுடைய குரல் மீண்டும் ஒலித்தது.

“அந்த வீட்டில் உனக்கான இடம் இருக்கிறது..”

மோஸ்லி காரை நிறுத்தினான். அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தான். பெண்கள் இருவரையும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டான்.

இரண்டு பெண்களும் அச்சத்தில் வெலவெலத்துப் போயினர். அவர்களை அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை அறிய மோஸ்லி குரலுக்காகக் காத்திருந்தான்.

நிமிடம் நிமிடமாக இரண்டு மணி நேரங்கள் ஊர்ந்தன.  அவன் என்ன செய்வானோ என்று அவர்கள் அச்சத்திலேயே கலங்கியிருந்தனர். குரலைக் காணோம். திடீரென்று அவனுக்கு அந்த விளையாட்டு சலித்துப்போனது. காவல் துறைக்கு போன் செய்தான். சரணடைந்தான்.

காவல் அதிகாரியைத் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றதற்காகவும், பணயக் கைதிகளாக பொது மக்களைப் பிடித்து வைத்ததற்காகவும் அவன் மீது மீண்டும் குற்றம்சாட்டப்பட்டது. குற்றத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டான். கூடுதலாக 15 வருட சிறைத் தண்டனை அவனுக்கு விதிக்கப்பட்டது.

“என்னால் தாக்கப்பட்டு இறந்து-போனவர்களுக்குத் துன்பமெல்லாம் அந்த சில நிமிடங்கள் மட்டுமே. ஆனால், என்னுடைய துன்பமோ அதையெல்லாம்விட நீண்டது. உண்மையில் பாதிக்கப்பட்டது அவர்களல்ல, நான்தான்” என்று அவன் சொன்னான்.

பிற்பாடு, சிறைச்சாலையில் நடந்த ஒரு கலவரத்திலும் அவன் பங்குகொண்டான்.

பல முறை பரோலுக்கு அவன் விண்ணப்பித்தபோதும், அவனுடைய மனநலம் முழுமையாகச் சரியாகவில்லை என்று நினைத்த அதிகாரிகள் அவனுக்கு பரோல் தர மறுத்துவிட்டார்கள். மோஸ்லி தன்னுடைய இறுதிக் காலத்தை இன்றளவும் சிறைச்சாலையில் செலவழித்துக்கொண்டிருக்கிறான்.

அடைக்கப்பட்ட சிறைக்கூடத்தில் இப்போதும் அவனுக்கு அந்தக் குரல் கேட்டுக்கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.