உன்னால் முடியுமா?
அந்தக் காட்டில் வசித்துவந்த யானை, எப்போதும் அடுத்தவரை மட்டம்தட்டிப் பேசும்.
ஒரு முறை அந்த யானை ஓர் அணிலைச் சந்தித்தது. வழக்கம்போல “ஏய் சிறிய அணிலே! உனக்கு இப்படி ஓர் உருவத்தைக் கொடுத்து, கடவுள் ரொம்பவே ஏமாற்றி இருக்கக் கூடாது” என்று சிரித்தது.

அணில் சாதுவாக, ‘‘அப்படி நினைக்காதே நண்பா! நீ செய்வதை போல என்னால் செய்ய முடியாது. அதுபோல, நான் செய்வதை உன்னால் செய்ய முடியாது” என்றது.
இதைக் கேட்ட யானை ‘‘நீ அப்படி என்ன செய்வாய்?” என்று கேலியாகக் கேட்டது.
கிடுகிடு என ஒரு மரத்தில் ஏறிய அணில், தொப் எனக் குதித்தது. ‘‘எங்கே, இது போல நீ குதி பார்க்கலாம்” என்று அணில் சொல்ல, யானை அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து நழுவியது.
செ.சுபஸ்ரீ

பாரி வள்ளல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
சிங்கம்புணரி,சிவகங்கை.
சிறந்த வீரன் யார்!
தனது நாட்டின் சிறந்த வீரன் ஒருவனைத் தேர்ந்தெடுத்துப் பரிசு அளிக்க விரும்பினார் அரசர். அமைச்சருடன் மாறுவேடத்தில் புறப்பட்டார்.
ஓர் இடத்தில், 100 சிலம்பாட்ட வீரர்களின் மத்தியில், கம்பைச் சுழற்றி, அனைவரையும் அடித்து விரட்டினான் ஒருவன்.
‘‘அரசே, இவன் சிறந்த வீரன்” என்றார் அமைச்சர். அரசர் எதுவும் பேசாமல், பயணத்தைத் தொடர்ந்தார்.

ஓர் இடத்தில், 50 வாள் வீரர்களைத் தனி ஒருவனாக நின்று சமாளித்துக் கொண்டிருந்தான் ஒரு வீரன். ‘‘அந்தச் சிலம்பு வீரனைவிட இவன் சிறந்தவன்” என்றார் அமைச்சர்.
அரசர் தனது குதிரையை நகர்த்தினார். வேறு ஓர் இடத்தில், கோயில் யானை ஒன்று மதம் பிடித்து ஓடி வர, மக்கள் பயத்தால் அலறியடித்து ஓடிக்கொண்டிருந்தார்கள்.
அரசரும் அமைச்சரும் குதிரையை ஓரமாக நிறுத்திவிட்டு, நடப்பதைக் கவனித்தார்கள். அப்போது, எங்கிருந்தோ வந்த ஓருவன் அந்த யானையை மடக்கி, மரத்தில் கட்டினான்.
‘‘ஆகா... இவன்தான் மாபெரும் வீரன்” என்றார் அமைச்சர்.

அரசரும் தலையாட்டினார். இருவரும் அரண்மனை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். அப்போது, ஓர் இடத்தில் கூச்சலாக இருந்தது. அங்கே, கூட்டத்தின் நடுவே ஓர் இளைஞன் இருந்தான். அவனுக்கு எதிரில் இருந்தவர், அவனைக் கடுஞ்சொற்களால் திட்டிக்கொண்டிருந்தார்.
ஏதோ, கொடுக்கல் வாங்கல் பிரச்னை என்று புரிந்தது. அந்த இளைஞனோ, முகம் சுளிக்காமல் பதில் சொன்னான். இறுதியில் அமைதி அடைந்த அந்த நபர், ‘‘தம்பி, போனது போகட்டும். சீக்கிரம் பணத்தைக் கொடுத்துவிடு’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
மறுநாள் அரசவைக்கு அந்த இளைஞன் அழைத்துவரப்பட்டான்.
‘‘வா இளைஞனே... நம் நாட்டின் சிறந்த வீரனுக்கான பரிசைப் பெறும் உனக்கு, எனது வாழ்த்துகள். எதிரே இருப்பவர் கடும்சொற்களால் பேசியபோதும் நிதானம் இழக்காமல், தவறான வார்த்தைகளைச் சிந்தாமல், மனதை அடக்கிய நீயே சிறந்த வீரன்” என்று பரிசை அளித்தார் மன்னர்.
அ.தமிழ் அரும்பி

செயின்ட் தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளி,
திருத்துறைப்பூண்டி.