Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

மேசான் தளம் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை 'அதுக்கும் மேல’ கொண்டுசென்ற அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெஃப், இப்போது இன்பச் சுற்றுலாவை 'பூமிக்கும் மேல’ கொண்டுசெல்லும் திட்டத்தில் இருக்கிறார். 'ப்ளூ ஆரிஜின்’ (BLUE ORIGIN) என்ற நிறுவனத்தை தொடங்கி, சோதனை முயற்சியாக ஒரு ராக்கெட் ஏவியிருக்கிறார் ஜெஃப். வெற்றி! 'இந்த ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால், அதற்கு இன்னும் சில விஷயங்கள் சேர்க்க வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் சரிசெய்த பிறகு, யாரும் எவரும் பூமிக்கு வெளியே ஒரு ஜாலி ட்ரிப் அடித்துவிட்டு வரலாம்!’ என்கிறார் ஜெஃப். பின்னாடி தீ வெச்ச மாதிரி வேலை செய்றீங்களே மக்கா!

இன்பாக்ஸ்

* டயானாவின் 'பேர் சொல்லும் பேத்தி’யாகப் பிறந்திருக்கிறாள் சார்லெட் எலிசபெத் டயானா! இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் வில்லியம்ஸ் -கேத் மிடில்டன் தம்பதிக்குப் பிறந்த குட்டி இளவரசிக்கு... தாத்தா சார்லஸ், பாட்டி டயானா மற்றும் இரண்டாம் எலிசபெத் ஆகிய மூவரின் பெயரில் இருந்தும் பெயர் உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த 200 வருடங்களில் அரசக் குடும்பத்தில் யாருக்கும் 'சார்லெட்’ எனப் பெயர் சூட்டப்பட்டது இல்லையாம். 'பெண் குழந்தை பிறந்தால் 'ஆலிஸ்’ என்றுதான் பெயர் சூட்டுவார்கள்’ என்ற உச்சத்தில் இருந்ததாம் பெட்டிங். ஆரம்பத்திலேயே அதிரடிக்கிறாள் இளவரசி!

* இந்திய அணியின் அடுத்த புது மாப்பிள்ளை ரோஹித் ஷர்மா! தன் பால்யகாலத் தோழியும் இப்போதைய மேனேஜருமான ரித்திகாவுடன் சீக்கிரமே டும்டும்டும். பல வருடப் பிரிய நட்பு. 11 வயதில், தான் முதன்முதலில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய மும்பை போரிவ்லி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் மைதானத்துக்கு சமீபத்தில் ரித்திகாவை அழைத்துச் சென்றிருக்கிறார். நள்ளிரவு 12 மணிக்கு அந்த மைதானத்தில் ரித்திகாவை நிறுத்தி, 'இங்குதான் என் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பித்தது. இங்குதான் என் குடும்ப வாழ்க்கையும் ஆரம்பிக்க வேண்டும். என் காதலை ஏற்றுக்கொள்வாயா?’ எனப் புது மோதிரத்தை நீட்டியிருக்கிறார் ரோஹித். ரித்திகா முகம் இன்னும் புன்னகைப்பதை நிறுத்தவில்லை. ஓகே ரித்திகா! 

இன்பாக்ஸ்

* 'ஒரு வருஷம்... ஒரு படம்’ எனச் சொல்லியடிக்கும் வித்யா பாலனின் அடுத்த கில்லி... 'ஹமாரி அதுரி கஹானி’. உண்மைக் கதையை அடிப்படையாகக்கொண்ட படம். ஆனால், இது ஜாலி கதை. பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் பெற்றோரின் காதல்தான் படத்தின் கதையாம். அதாவது அலியா பட் தாத்தா-பாட்டியின் காதல் கதை. அதை இப்போதைய வைரல் யுகத்துக்கு ஏற்ப பட்டி, டிங்க்கரிங் பார்த்திருக்கிறார்கள். 'ஆம்பள சிலுக்கு’ இம்ரான் ஹாஷ்மியுடன் 'டர்ட்டி பிக்சருக்கு’ப் பிறகு வித்யா நடிப்பதால், கொதித்துக் கிடக்கிறது எதிர்பார்ப்பு. அப்போ அலியாவுக்கு பாட்டி வித்யாவா?

இன்பாக்ஸ்

*  இந்த ஐ.பி.எல்., பல வெளிநாட்டு பிளேயர்களுக்கு இந்தியாவைப் புகுந்தவீடு கணக்காக ஆக்கிவிட்டது. ஜான்டி ரோட்ஸ் தன் மகளுக்கு 'இந்தியா’ எனப் பேர் வைக்க, ஆஸ்திரேலியா பிளேயர் பிரெட் லீ, இந்தி சினிமா ஒன்றில் ஹீரோவாகிவிட்டார். படத்தின் பெயர் 'அன்இந்தியன்’ (UN INDIAN). கணவனைப் பிரிந்து, ஒற்றைக் குழந்தையுடன் வசிக்கும் ஹீரோயினைக் கண்டதும் காதல்கொள்கிறார் பிரெட். ஆனால், ஹீரோயின் இந்திய சம்பிரதாயங்களைச் சொல்லி, கல்யாணத்துக்கு மறுக்கிறார். அவரைச் சம்மதிக்கவைக்கும் காமெடி களேபரம்தான் படமாம். இதற்காக இந்தியாவின் விசேஷப் பண்டிகைகள், சம்பிரதாயங்களில் பங்கெடுத்து ஹோம்வொர்க் செய்துகொண்டிருக்கிறாராம் லீ. வீட்ல எலீ... வெளியில புலீ? 

இன்பாக்ஸ்

* 'யூ டூ புரூட்டஸ்..?’ - அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியிருக்கிறார் லியோனார்டோ டி காப்ரியோ. பார்ட்டி, 'டிண்டர்’ எனும் டேட்டிங் அப்ளிகேஷனுக்கு அடிமையாகிவிட்டாராம். 'எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, நான் என் ஒரிஜினல் பேர்ல இல்லை. சும்மா யார் எல்லாம் பக்கத்துல இருக்காங்க... அதுல யார் எல்லாம் என் மேல ஆர்வம் காட்டுறாங்கனு தெரிஞ்சுக்கத்தான் இருக்கேன். நான் மட்டும் அல்ல... பல ஹாலிவுட் ஹீரோக்கள் ஃபேக் ஐ.டி-யில் அதுல இருக்காங்க!’ என்கிறார் குறும்பாக. போறபோக்குல போட்டுக் கொடுத்துட்டாப்ல!

* 'மற்ற பிளேயர்கள், தங்களது குறைகளைக் கண்டுபிடிக்க அவர்கள் விளையாடிய வீடியோ பதிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்க, நான் அவ்வப்போது விளாசிய பௌண்டரிகளை ரசிக்க வீடியோ பார்க்கிறேன்’ என்கிறார் ஷேவாக். 'முன்பெல்லாம் பந்து பௌலர் கையில் இருந்து வெளிவந்ததுமே, அதன் திசை, விசையைக் கணித்துவிடுவேன். ஆனால், கண்களில் மைனஸ் 0.5 பவர் வந்துவிட்டதால் முன்புபோல பந்தைத் துல்லியமாகக் கணித்து விளையாட முடியவில்லை. கான்டாக்ட் லென்ஸ் அணிந்தும் பலன் இல்லை. அதனால் கண்ணாடி அணிந்து ஓரளவு சமாளிக்கிறேன். ஆனாலும்... சிரமமாக இருக்கிறது. 'சீக்கிரமே பந்தைக் கணி... சீக்கிரமே பந்தைக் கணி’ என்பதுதான் பிட்ச்சில் என் மந்திரமாக இருக்கிறது. மனநிறைவு தரும் அளவுக்கு ஆடிவிட்டு ஓய்வுபெற வேண்டியதுதான்’ என்கிறார். கவலையை முதல்ல விளாசுங்க! 

* அனைவருக்கும் கல்வியறிவு அளிக்கவேண்டியதுதான்... அதற்காக இப்படியா? ஜம்மு - காஷ்மீர் பாலிடெக்னிக் ஒன்றின் நுழைவுத் தேர்வில் பங்குபெற பசு மாடு ஒன்றுக்கு ஹால் டிக்கெட் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கல்லூரியின் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்ட, அப்துல் என்பவர் தன் பசு கஷீர் கவ் பெயரில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார். கஷீரின் தந்தையாக காளை மாடு குராவைக் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு வால், கால் அங்க அடையாளங்களையும் கொடுக்க, வீடு தேடி வந்துவிட்டது கஷீர் கவ்வுக்கான ஹால் டிக்கெட். பசு படத்துடனான ஹால் டிக்கெட் சந்தி சிரிக்கவும், அசடு வழிந்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். ஆனாலும் விடாப்பிடியாக, 'நுழைவுச்சீட்டு கொடுத்துட்டாங்கள்ல... என் பசுவை எக்ஸாம் எழுதவைச்சே தீருவேன்’ என அப்துல் அடம்பிடிக்கிறார். எக்ஸாம்ல ஜெயிச்ச பிறகு, 'சமூகத்துக்குச் சேவை செய்ய ஆசை’னு சொல்லுமோ கஷீர்?!

இன்பாக்ஸ்

*  ஆஹா... நம்ம மோடியை அடக்கவே முடியாது! டிரெண்டிலும் டிரெண்டிங்கிலும் மனிதர் கில்லியாக இருக்கிறார். இந்திய சமூக வலைதளங்களைக் கைப்பற்றிய சந்தோஷத்தோடு, கட்டுப்பாடுகள் நிறைந்த சீன சமூக வலைதளமான 'வெய்போ’வில் மவுஸ் பதித்திருக்கிறார் மோடி. தன் சீன சுற்றுப்பயணம் குறித்து உற்சாகம் தெரிவித்துவிட்டு, 'சீன நண்பர்களே... இனிமேல் நாம் அடிக்கடி பேசலாம்’ என 'வெல்கம்’ போஸ்ட் போட்டிருக்கிறார் மோடி. சீன ஊடகங்கள் ஆச்சர்யத்துடன் இந்த முயற்சியை வாழ்த்தியிருக்கின்றன. ஆனா, அங்கே லைக்ஸ், ஷேர்ல கள்ளக் கணக்கு காட்ட முடியாதே!