பீகார் மாநிலத்தில், இரு பகுதிகளில் நதியில் மூழ்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள மாஸ்டனா காட் என்ற பகுதியிலுள்ள மலைப்பகுதிக்கு சிறுவர்கள், பெண்கள் உள்பட சுற்றுலாப் பயணிகள் 11 பேர் வந்தனர். அங்கு விளையாடிக்கொண்டிருக்கும்போது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கியுள்ளான். அவனைக் காப்பாற்றுவதற்காக உடன் வந்தவர்கள் நீரில் குதித்துள்ளனர். நீரில் மூழ்கிய சிறுவனைக் காப்பாற்றிய அவர்களில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அதேபோல, சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பாக்மதி ஆற்றில் 12 பேருடன் சென்றுகொண்டிருந்த படகு திடீரெனக் கவிழ்ந்தது. இதில் 3 பெண்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம்குறித்து மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தினேஷ் சந்திர யாதவ், 'இந்த விபத்துக்கு பாதிக்கப்பட்டவர்களே பொறுப்பேற்க வேண்டும். நிதிஷ்குமார் அரசு பொறுப்பேற்க முடியாது. ஆறு மிக நீளமானது. எல்லா இடத்திலும் பாதுகாப்புப் பணிக்கு ஆட்களை நிறுத்தமுடியாது' என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.