கடந்த இரண்டு வாரங்களாக தலைநகர் சென்னையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டுவருகின்றனர்.
வடகிழக்குப் பருவமழைக்காலமான தற்போது சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்துவரும் மழையானது, அதிக பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது. சென்னை நகரத்தில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் ஒரு வாரம் முழுவதுமாக முடக்கப்படும் அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களான வியாசர்பாடி கன்னிகாபுரம், ஓட்டேரி போன்ற பகுதிகளுடன், தென்சென்னைக்குத் தெற்கே உள்ள பகுதிகளில் இரண்டடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உண்டாக்கப்பட்ட செயற்கைப் பேரிடரைப் போல, வீடுகள் மீண்டும் தண்ணீரில் மூழ்கடிக்கப்படுமோ எனப் பொதுமக்கள் அச்சமடைந்தனர். குறிப்பாக, முடிச்சூர் பகுதியில் அதிகமான தண்ணீர் தேங்கி, ஒரு வாரத்துக்கும் மேல் அதன் பாதிப்பு நீடித்தது. இதற்கிடையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வடிகால்கள் அடைக்கப்பட்டதால் மழைநீர் சாலைகளிலேயே தேங்கிநின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெருத்த அவதிக்கு ஆளாகினர்.
சாலையின் நடுவிலும் ஓரங்களிலும் அங்குமிங்குமாக அமைக்கப்பட்டிருக்கும் சாக்கடைக் (man holes) குழிகள், உயிர் அபாயத்தைத் தருவதாக மாறியுள்ளன. பொதுவாக முறையில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வட்டக்குழிகள், மழைக்கு முன்னர், ஓரளவுக்குச் சாலையின் மட்டத்துக்கு இணையாக இருந்தன. கடும்மழையின்போது சாலையில் பெருகியெடுத்த வெள்ளநீருக்கு, இந்த வட்டக்குழிகள் வசதியான போக்குவசதியாக அமைந்தன. பெருமழையின் வேகத்தைத் தாக்குப்பிடிக்கமுடியாத வட்டக்குழிகளின் சிமென்ட் மூடிகள், துருத்திக்கொண்டும் மேலெழும்பியபடியும் உள்ளன.
மேலும், ஆங்காங்கே மழைநீரால் அரிக்கப்பட்ட சாலைகளில் திடீர் மேடுபள்ளங்களும் உருவாகியுள்ளன. வாகனங்களைச் சறுக்கிவிழ வைக்கும்படியாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலை முழுவதும் இறைத்துவிட்டதைப்போல குருணையாகக் கிடக்கின்றன. இத்துடன் சீராக இருந்த சாலைகளில் திடீர் மேடுபள்ளம் ஏற்பட்டு வாகனங்களின் வேகத்தை மட்டுப்படுத்துகின்றன. இதனால் வாகனங்கள் உரிய வேகத்தில் செல்லமுடியாமல் ஊர்ந்து போகவேண்டிய நிலை உண்டாகியுள்ளது. நெரிசல் நேரங்களில் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து பின்தொடரும் வாகனங்கள் ஒன்றையொன்று முட்டிமோதி சாலையிலேயே சண்டைகள் நடப்பது சர்வசாதாரணம் ஆகிவிட்டது.
இப்போது மீண்டும் மழை தொடரும்நிலையில் அண்ணா சாலை, பெரியார் ஈ.வெ.ரா. சாலை உட்பட நகரின் முக்கியச் சாலைகளிலும் இதைப் பார்க்கமுடிகிறது. காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் வேலையிடங்களுக்குச் செல்லும் நேரத்தில், வழக்கத்தைவிட அதிக நெரிசல் உண்டாகிறது. வட்டக்குழிகள், ஆள்விழுங்கிப் பள்ளங்களாக மாறிநிற்கின்றன. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் முன்பாகவும் இப்படியான அபாய வட்டக்குழி ஒன்று, வாகன ஓட்டிகளின் உயிருக்கு அபாயம் ஏற்படுத்தும்வகையில் காணப்படுகிறது.
அமைச்சர்கள், அரசுத் துறைகளின் செயலாளர்கள், பிற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் என அதிகாரத் தரப்பில் முக்கியமானவர்கள் அன்றாடம் இந்தச் சாலைகளைக் கடந்துசென்றாலும், இந்தப் பிரச்னை கவனிக்கப்பட்டதாகவே தெரியவில்லை.
பொதுவாக, அனுமதியின்றி விதிகளை மீறி நட்டநடுச் சாலையிலும் தனியார் நிறுவனங்களின் கேபிள் பதிப்பதற்காக, கண்டபடி வெட்டி எடுக்கப்படும் சாலை எதுவும் பழையபடி சரிசெய்து தரப்படுவதில்லை. இதைக் கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகராட்சி சாலைத்துறையோ, கைகட்டி வேடிக்கைதான் பார்க்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது. ஆளும்கட்சியினரின் நிர்பந்தப்படி செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என அவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.
எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை நீடிப்பதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால், அந்தந்தப் பகுதி மாநகராட்சிப் பொறியாளரே பொறுப்பு என ஆக்கவேண்டும்; அவர்களின் பணிப்பதிவேட்டிலும் இதைப் பற்றிக் குறிப்பிடவேண்டும்; தொடர்ச்சியாக இதில் மோசமாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு போன்றவற்றை நிறுத்திவைக்கவேண்டும் என குடிமைச்சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அவர்களின் எதிர்பார்ப்பு நடைமுறைக்கு வந்தால், சிறப்புதான்!