இந்திய ராணுவத்தில், 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவப் பிரிவுகளை வழிநடத்தும் கர்னல்களாக முதன்முறையாக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.
பெண்கள் இன்று பல துறைகளிலும் கோலோச்சுகின்றனர், முக்கியப் பொறுப்புகளை அலங்கரிக்கத் தொடங்கி இருக்கின்றனர். எனினும் பணியிடத்தில் பாலினப் பாகுபாடு என்பது தொடர்கிறது. பல்வேறு காரணங்களைக் காட்டி பெண்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவை மறுக்கப்படுகின்றன.

இந்திய ராணுவம், பாலினப் பாகுபாட்டினை போக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, 108 கர்னல் பதவிகளுக்கு பெண் ராணுவ அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதில், 1992-ம் ஆண்டு முதல் 2006 வரையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஜினீயர்கள், ராணுவ வான்பாதுகாப்பு, புலனாய்வு படை , ராணுவ சேவைப்படை, ராணுவ ஆயுதப்படை உள்ளிட்ட பிரிவுகளில் 108 கர்னல் காலிப் பணியிடங்களுக்கு 244 பெண் லெப்டினன்ட் கர்னல்கள் பதவி உயர்வுக்காக பரிசீலிக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் 108 பேர் நியமிக்கப்படுவர் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த செப்டம்பர் 2020-ல், முதல்முறையாக ஐந்து பெண் அதிகாரிகள் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் படிப்பு (DSSC) மற்றும் பாதுகாப்பு சேவைகள் தொழில்நுட்ப பணியாளர்கள் பாடநெறி (DSTSC) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றனர். ஒரு வருட கால பயிற்சிக்குப் பின்னர் பணி நியமனங்களுக்குப் பரிசீலிக்கப்பட்டனர். இந்தியாவில் காலாட்படை, கவசப்படை போன்ற படைப்பிரிவுகளுக்கு பெண் அதிகாரிகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.