இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அமலில் இருந்து வரும் இந்த ஊரடங்கால் பல துறைகளும் பாதிப்படைந்துள்ளன. இதனால், மக்கள் பலரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அதிகளவில் பாதிப்படைந்த துறைகளில் விவசாயமும் ஒன்று. இந்நிலையில், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் சுமார் 109 விவசாயிகள் மராத்வாடா பகுதியில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுரங்காபாத் டிவிஷனல் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ள தரவுகளின்படி, கடந்த நான்கு மாதங்களில் அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் சுமார் 231 விவசாயிகள் அப்பகுதியில் தற்கொலை செய்துள்ளனர். சராசரியாக ஒருநாளைக்கு இரண்டு விவசாயிகள் வீதம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முறையே 73 மற்றும் 36 பேர் தற்கொலை செய்துகொண்டதாக அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் உள்ள இந்த மராத்வாடா பகுதியில் சுமார் 1.87 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் விவசாயிகள் சங்க தலைமை அமைப்பான ஷெட்காரி சங்கடனாவின் தலைவர் அனில் கன்வத் இதுதொடர்பாகப் பேசுகையில், ``விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும். கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடியின் தாக்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விவசாயத் துறையில் தொடரும். விவசாயிகள் இன்னும் அதிகமான துன்பத்திற்குத் தள்ளப்படுவார்கள். உற்பத்திப் பொருள்களுக்குச் சந்தை இல்லை. இந்த ஊரடங்கு காலத்தில் விவசாயிகளின் விளைபொருள்களில் பத்து சதவிகிதம்கூட விற்பனை ஆகவில்லை. இதனால், தொடர்ந்து விவசாயம் செய்யவும் தங்களது குடும்பங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர்களிடம் பணம் இல்லை” என்று கூறியுள்ளார்.

ஊரடங்கில் விவசாயிகளுக்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் சகஜமாக வெளியே வர முடியாத நிலை இருந்ததால் விவசாயிகள் இன்னும் கடுமையாகப் பாதிப்படைந்தனர். தொடர்ந்து விளைபொருள்களின் விலை ஏறியும் இறங்கியும் இருந்தன. விவசாயம் செய்வதற்குத் தேவையான பொருள்களை விற்கும் கடைகள் மூடப்பட்டிருந்ததால், விவசாயப் பணிகளைத் தொடர முடியாமல் நாட்டின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகளும் தவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு மகாராஷ்டிரா அரசு அளித்த தகவலின்படி, 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2014-ம் ஆண்டு டிசம்பர் வரை அம்மாநிலத்தில் சுமார் 6,268 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த எண்ணிக்கை 2015 மற்றும் 2018-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து 11,995 ஆக உள்ளது.