இன்பாக்ஸ்
• பாலிவுட் கி ராணி கங்கணா ரனாவத்தின் சம்பளம் 11 கோடியாம். 'நான் நடித்த கேரக்டர்களை எல்லோராலும் பண்ணிவிட முடியாது. நான் அத்தனை அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறேன். அதற்கு, இது சரியான சம்பளம். ஹீரோக்களுக்குச் சமமாக சம்பளம் வாங்கும் நிலை ஹீரோயின்களுக்கு வர வேண்டும். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்’ எனத் தீர்க்கமாகப் பேசுகிறார் கங்கணா. அசத்து புள்ள!

• உலக பாட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம், தர வரிசையில் மீண்டும் முதல் இடம் என, சாய்னா செம ஹேப்பி. 'கடந்த வருடம் நான் சந்தித்த தோல்விகளால் ஓய்வுபெற்றுவிடலாமா என்றுகூட நினைத்தேன். மாற்றம்வேண்டி விமல்குமாரை பயிற்சியாளர் ஆக்கினேன். இன்று இந்த வெற்றிகள் அனைத்தும் அவரால் கிடைத்தவை. உலகக்கோப்பை வெற்றி, எனக்கு மிக முக்கியமானது; என் விளையாட்டின் மீதான புத்துணர்ச்சியை அதிகரித்திருக்கிறது’ என்கிறார் சாய்னா. அடுத்து ஒலிம்பிக் மெடல்தான்!
• 'ஸ்ரீமந்துடு’ ஹிட்டான சந்தோஷத்தில் மகேஷ்பாபு 'ஃபேஸ்புக்கில் ரசிகர்களுடன் சாட்டிங்’ என அறிவிக்க, குவிந்தன கேள்விகளும் வாழ்த்துகளும். ' 'ஸ்ரீமந்துடு’ மாதிரி நாங்களும் ஓர் ஊரைத் தத்தெடுக்கலாம்னு இருக்கோம்’ என ரசிகர்கள் கூற, 'லவ் ஸ்டோரில நடிங்க, லவ்வர் பாய் மகேஷைப் பார்க்க வீ ஆர் வெயிட்டிங்’ என ரசிகைகள் ரெக்வெஸ்ட் தட்டியிருக்கிறார்கள். இன்னொரு ரசிகர் 'நீங்களும் ஸ்ருதியும் 'ஸ்ரீமந்துடு’ ஆடியோ லாஞ்ச்ல மொபைல் பார்த்துச் சிரிச்சிட்டிருந் தீங்களே, என்ன விஷயம்?’ என விசாரணையைப் போட, 'என் மகள் சித்ரா ஒரு பாட்டுக்கு அழகா டான்ஸ் ஆடினதைப் பார்த்துச் சிரிச்சோம்’ என சென்டிமென்டாக முடித்தார் மகேஷ். என்னாமா நோட் பண்றாங்க!

• ஆந்திராவில் ஹிட் ஹூரோயின் அந்தஸ்து, தமிழில் அஜித், விஜய்யுடன் தலா ஒரு படம், இந்தியில் ஜான் ஆப்ரஹாமோடு ஒரு படம் என பஹுத் பிஸியாக இருக்கிறார் ஸ்ருதி. 'ஒரு ஹீரோயின் தன் கேரியர் எப்படியிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பாரோ, அப்படியிருக்கிறது எனக்கு. சினிமாவுக்கு தேங்க்ஸ்... தேங்க்ஸ்’ என நெகிழ்கிறார். கமலுக்கு தேங்க்ஸ்!
• 'தீபிகா படுகோனின் சமூக அக்கறை, நேர்மை, புரட்சிகர சிந்தனைகளை எல்லோரும் பின்பற்ற வேண்டும். அவர்தான் இன்றைய இளைஞர்களுக்கு பெர்ஃபெக்ட் ரோல்மாடல்’ - இப்படிச் சொல்லியிருப்பது, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி. மும்பை சேவியர் கல்லூரி மாணவர்கள் இடையே உரையாற்றும்போதுதான் தீபிகாவை இப்படிப் புகழ்ந்திருக்கிறார். 'செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதில் வெற்றிபெற வேண்டும், தீபிகாவைப்போல. எனக்கு அவரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என நாராயணமூர்த்தி பேசிய பேச்சுக்கு லைக் கொட்டுகிறது. சபாஷ் தீபிகா!

• கடையில் பணிபுரியும் ஒரே ஒரு பெண்ணால் பிசினஸ் பிச்சிக்கிச்சு என்றால் நம்புவீர்களா? தாய்வானில் உள்ள ஒரு மெக்டோனால்ஸ் உணவகத்தின் கேஷியர்தான் வைவை (Weiwei). எப்போதோ வந்த ஒரு கஸ்டமர் இவருடன் எடுத்த செல்ஃபியை, அவரின் ப்ளாகில் அப்லோடி 'இந்தப் பொண்ணு பார்க்கிறதுக்கு பொம்மை மாதிரி இருக்குய்யா’ என எழுத, வைவை வைரல் ஆனாள். இவளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவே இளசுகளின் படை இப்போது பறந்துவருகிறதாம். பார்ட் டைம் வேலை செய்யும் காலேஜ் கேர்ள் வைவை, ஓசி பாப்புலாரிட்டி என பொம்மையைப்போலவே அழகாகச் சிரிக்கிறாள். வைவை வைரல்!

• உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை எல்லா படங்களுக்கும் நம்பகமான விமர்சனத்துக்குப் பெயர்போனது 'இன்டர்நெட் மூவி டேட்டா பேஸ்’ எனப்படும் ஐ.எம்.டி.பி. இதில் அதிக மார்க் எடுத்து லீடிங்கில் இருப்பது கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா இயக்கி நடித்து, சமீபத்தில் பாக்ஸ் ஆபீஸைச் சிதறடித்த 'உப்பி-2’. ரசிகர்கள் பார்த்த படங்களுக்கு ஐ.எம்.டி.பி-யில் ஸ்டார் ரேட்டிங் அளிக்கலாம். இப்படி அனைவரும் அளிக்கும் ஸ்டார் ஆவரேஜ்தான் அந்தப் படத்தின் ரேட்டிங். 'உப்பி-2’ எடுத்த 9.7-ஐ இதுவரை உலகின் எந்தப் படமும் எடுத்தது இல்லை என்பதுதான் ஆச்சர்ய அதிர்ச்சி. இதெல்லாம் உபேந்திரா ரசிகர்களின் வேலை என முணுமுணுக்கிறார்கள் மற்ற ரசிகர்கள். என்னா ஒரு வெறித்தனம்!
• தாஜ்மஹால் என்றால் காதல், ஷாஜகான், மும்தாஜ் மட்டும் அல்ல... ட்விட்டரும்தான். ஆம், தாஜ்மஹாலுக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கை, சுதந்திர தினம் அன்று தொடங்கிவைத்திருக்கிறார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ். ட்விட்டர் கணக்கு தொடங்கியிருக்கும் முதல் வரலாற்றுச் சின்னம் எனப் பெருமைபெற்றுள்ளது தாஜ்மஹால். சமீபத்தில் தாஜ்மஹால் உடனான உங்களது ஞாபகத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என புகைப்படங்களை ஷேர் செய்யவைத்து #MyTajMemory ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கியிருக்கிறார்கள். ஒரு தாஜ்மஹாலும் பல ரீ-ட்வீட்களும்!
• மார்க்கெட் இழந்த நடிகைகள் சீரியலில் நடிப்பது உலக வழக்கம். ஆனால், பீக்கில் இருக்கும்போதே சீரியலில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா. அழுகாச்சி சீரியல் அல்ல. இது ஓர் அமெரிக்கன் த்ரில்லர். 'க்வான்டினோ’ எனப் பெயரிடப்பட்ட அந்த சீரியலில் ஆக்ஷன், ரொமான்ஸ், லிப்லாக் என வேற லெவல் பெர்ஃபாமென்ஸ் கொடுத்திருக்கிறார் பிரியங்கா. இந்த சீரியல் இந்தியாவிலும் ஒளிபரப்பாகும். சீரியஸ் சீரியல்!

• மாடலிங் உலகின் கறுப்புப் பக்கங்களை 'ஃபேஷன்’ படத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மதுர் பண்டார்கர். நடிகைகளின் பிரச்னைகளை மையமாகவைத்து 'ஹீரோயின்’ படத்தை இயக்கியவர், அடுத்து கையில் எடுத்திருப்பது, காலண்டர் மாடல்களின் கதையை. பெயரும் புகழும் வாய்ப்புகளும் பெற்றுத் தரும் காலண்டர் கேர்ள்ஸை வைத்து உலகில் நடக்கும் விஷயங்களை மையமாக 75 சதவிகித நிஜமும் 25 சதவிகிதக் கற்பனையும் கலந்து கதை எழுதியிருக்கிறார் மதுர். ஐந்து நாடுகளில் இருந்து வரும் ஐந்து மாடல்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. அவார்டு ரெடி!
• 'தில்வாலே’, 'ஃபேன்’, 'ராயீஸ்’ படங்களின் ஷூட்டிங்கில் ஷாரூக் செம பிஸி. அதற்குள் அடுத்த பட அறிவிப்பு என ஸ்வீட் ஷாக் தந்திருக்கிறார். அந்தப் படத்தில் ஷாரூக் உடன் நடிப்பது குட்டிப்பொண்ணு அலியா பட். 'படத்தில் ஷாரூகிற்கு அலியா ஜோடி இல்லை. ஆனால், இது ஒரு காதல் கதை. ஷாரூக் - அலியா காதல் கதை அல்ல. இது காதலைப் பற்றிய காதல் கதையாக இருக்கும்’ என ட்விஸ்ட் வைக்கிறார் படத்தின் இயக்குநர் கௌரி ஷிண்டே. பால்கியின் மனைவியும், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ பட இயக்குநருமான கௌரிக்கு, இது இரண்டாவது படம். லவ் அண்ட் லவ் ஒன்லி!