Published:Updated:

கிசான் சம்மான்: 80 பேர் பணி நீக்கம், 110 கோடி ரூபாய் முறைகேடு? - அதிர வைக்கும் போலி விவசாயிகள்

கிசான் சம்மான் முறைகேடு
கிசான் சம்மான் முறைகேடு

கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சுமார் ரூ.110 கோடி முறைகேடு நடந்திருக்கலாம் என்று தமிழக வேளாண்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருக்கிறார்.

சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் நிதியுதவித் திட்டத்தை (PM-Kissan) 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 100% மத்திய அரசின் நிதியுடன் கடந்த 01.12.2018 முதல் செயல்படத்தொடங்கிய இந்தத் திட்டத்தில், தமிழகம் முழுக்க போலி விவசாயிகளை இணைத்து கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதையடுத்து முறைகேடு செய்த போலி விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி
நா.ராஜமுருகன்

மேலும் முறைகேடுகளில் ஈடுபட்ட, அதற்கு துணைபோன வேளாண்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, ``கிசான் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கணிப்பொறி மேலாளர்கள் உள்ளிட்ட 80 பேரை பணி நீக்கம் செய்திருக்கிறோம். விவசாயிகளின் பெயர்களைப் பதிவேற்றும் உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தத் தனியார் முகவர்கள் போலியான பெயர்களைப் பதிவுசெய்து மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் 1,000 கோடி ஊழல்!

தமிழகம் முழுக்க இதுவரை 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 110 கோடி ரூபாய் அளவில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று கணித்திருக்கிறோம். விசாரணையின் முடிவில் தவறு செய்த அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதேபோல இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரி, ``வேளாண்துறை மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்ட கணக்கெடுப்பில் கடலூர் மாவட்டத்தில் 80,737 பேர் இந்தத் திட்டத்தில் இணைந்திருக்கின்றனர். அதில் 3,483 உண்மை பயனாளிகள் இருக்கின்றனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி
கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி

அவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 70,709 போலி விவசாயிகள் முறைகேடாகப் பணத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டிய தொகை ரூ.14.26 கோடி.

அதில் இன்றைய தேதிவரை ரூ.5 கோடிவரை பறிமுதல் செய்திருக்கிறோம். மீதமிருக்கும் 9.26 கோடி ரூபாயை பறிமுதல் செய்வதற்கான பணியைச் செய்துகொண்டிருக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு