Published:Updated:

சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுமிகளை, எஸ்.ஐ ஆக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்!

சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுமிகளை, எஸ்.ஐ ஆக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்!
News
சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுமிகளை, எஸ்.ஐ ஆக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்!

சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுமிகளை, எஸ்.ஐ ஆக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்!

Published:Updated:

சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுமிகளை, எஸ்.ஐ ஆக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்!

சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுமிகளை, எஸ்.ஐ ஆக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்!

சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுமிகளை, எஸ்.ஐ ஆக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்!
News
சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுமிகளை, எஸ்.ஐ ஆக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்!

டலூரை சுனாமி தாக்கியதில், கடற்கரை மீனவக் குப்பங்கள் சிதைந்துபோயின. வீடு, வாசல், உற்றார், உறவினர்களை இழந்தவர்கள் கதறினர். பெற்றோரை இழந்து ஆதரவின்றியும் ஆகாரமின்றியும் வெவ்வேறு இடங்களில் சில சிறுமிகள் தவித்துக்கொண்டிருந்தனர். கண்ணீருடன் திரிந்த இந்தச் சிறுமிகளைக் கண்ட மாரியப்பன் மனம் நொந்தார். `இனி இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்... மீதி காலத்தை எப்படிக் கழிக்கப்போகிறார்கள்?' என்று அவரின் உள்மனம் கேட்டது. கிட்டத்தட்ட 50 சிறுமிகள் புதுக்குப்பத்தில் தாயையோ, தந்தையோ அல்லது இருவரையுமோ பறிகொடுத்திருந்தனர். 

மாரியப்பன், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர். சிறந்த கால்பந்து வீரரும்கூட. இந்தச் சிறுமிகளுக்காக அவரின் எண்ணத்தில் உதித்ததுதான் இந்திரா காந்தி விளையாட்டு அகாடமி. சரி... அகாடமி உருவாக்கினால் மட்டும் போதுமா, அதை இயக்க நிதி வேண்டாமா? தனக்கு வந்த பென்ஷன் தொகையை வைத்து அகாடமியை நடத்தினார் மாரியப்பன். சிறுமிகளை கொஞ்சம் கொஞ்சமாக கால்பந்து விளையாட்டுக்குப் பழக்கினார். ஐந்து வயதில் கால்பந்து விளையாட ஆரம்பித்தால், எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். இந்த வயதில் கால்பந்தில் கால் வைத்தால் ball control எளிதாக வரும். மாரியப்பன் கைவசம் இருந்த சிறுமிகளும் இந்த வயதில்தான் இருந்தனர். 

கால்பந்து விளையாட்டைப் பொறுத்தவரை, இன்னொரு விஷயமும் இருக்கிறது. நீங்கள் மைதானத்தில் இருக்கும் ஒன்றரை மணி நேரமும் உங்களுக்கு வேறு எந்தச் சிந்தனையும் வராது. பந்து மீது மட்டும்தான் இலக்கு இருக்கும். கவலைகளை  நெருங்கவிடாத சக்தி, கால்பந்துக்கு உண்டு. வண்ணாரப்பாளையத்தில் உள்ள மைதானத்தில்தான் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் சிறுமிகளுக்குப் பயிற்சி அளிப்பார் மாரியப்பன். இவரின் அகாடமி குறித்து அறிந்த நல்ல உள்ளங்கள், அவருக்கு நிதி அளித்தனர். 

பெற்றோரை இழந்த அந்தச் சிறுமிகள், வேதனைகளை மறந்து கால்பந்து விளையாடத் தொடங்கினர். தனக்குத் தெரிந்த அத்தனை கலைகளையும் சிறுமிகளுக்கு சொல்லிக்கொடுத்தார். பாஸ் செய்வது, ஃப்ரீ கிக் எடுப்பது, டிரிப்ளிங் செய்வது, பெனால்டி அடிப்பது எப்படி போன்ற அத்தனை உத்திகளையும் கற்றுக்கொடுத்தார். காலம் செல்லச் செல்ல, அவர்கள் தேர்ந்த கால்பந்து வீராங்கனைகளாக  மாறியிருந்தனர்.  சிறுமிகளுக்கு தன்னால் முடிந்தவரை பால், முட்டை போன்ற சத்தான உணவுகளை அளித்து வளர்த்தார். புரதச்சத்து மிகுந்த உணவு வகைகள் வழங்க, முடிந்தவரை முயற்சித்தார் மாரியப்பன். 

சிறுமிகள் வளர வளர, அகாடமியும் வளர்ச்சி கண்டது. மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனைகளாக அதிரடியாக விளையாடத் தொடங்கினர். தமிழகம் மட்டுமல்லாமல் செல்லும் இடமெல்லாம் வெற்றியைக் குவித்தனர். `லேடி மான்செஸ்டர் யுனைடெட்'  என்று செல்லமாக அழைக்கும் அளவுக்கு வெற்றிவாகை சூடினர். 

சிறுமிகள் பள்ளிப் படிப்பு முடித்த பிறகுதான் மாரியப்பனுக்கு சவால் காத்திருந்தது. இந்தச் சிறுமிகளை சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் மாரியப்பனின் ஆசை.  அதற்கு, பட்டப்படிப்பு தேவை. `எந்தக் கல்லூரியாவது இலவசக் கல்வி அளிக்குமா?' என அவர் பல்வேறு கல்லூரி படிகளில் ஏறி இறங்கினார். மாணவிகளின் ஒரே நம்பிக்கை, `அப்பா' என்று வாய் நிறைய கூப்படும் மாரியப்பன்தான். கடலூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரி, மாணவிகளுக்கு அடைக்கலம் கொடுத்து,  படிப்பு, உணவு, விடுதி வசதிகளை இலவசமாகவே வழங்கியது. 

மாரியப்பனுக்கும்  மாணவிகளுக்கும்  தெம்பு வந்தது. திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இன்னும் கொஞ்சம் மாணவிகள் இணைந்தனர். தமிழகத்தில் நடந்துவந்த சி.எம் டிராபி போட்டியில்கூட இந்த அணி தொடர்ந்து பலமுறை சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. இந்த அணியைச் சேர்ந்த மூன்று பேர், இந்திய அணிக்கு விளையாடியுள்ளனர். தமிழக அணிக்கும் நான்கு வீராங்கனைகள் விளையாடியுள்ளனர். கடலூர் மாவட்ட அணியிலும் 10-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றிருந்தனர். 

பட்டப்படிப்பு முடித்த பிறகு, மாரியப்பன் இந்தச் சிறுமிகளை போலீஸ் துறையில் சேர்த்துவிடும் முயற்சியில் ஈடுபட்டார். நல்ல உடல் தகுதியுடன் அவர்கள் இருந்ததால் எளிதாகவே மாரியப்பனின் ஆசை நிறைவேறியது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் வினிதா, இந்துமதி, சரண்யா, தேன்மொழி, பத்மாவதி ஆகியோர் எஸ்.ஐ-க்கு தேர்வாகியதுடன், பயிற்சி முடித்து பணியிலும் சேர்ந்துவிட்டனர். ஐந்து வயதில் மாரியப்பனிடம் தஞ்சமடைந்த  சிறுமிகள், இப்போது எஸ்.ஐ. வாழ்க்கையில் வெற்றிபெற்ற பெருமிதம் அவர்களிடத்தில் தெரிகிறது. போலீஸ் துறையிலும் மகளிர் கால்பந்து அணியிலும் சேர்ந்து கலக்கிவருகின்றனர். 

மாரியப்பனிடம் பேசியபோது, ``இந்தப் பிள்ளைங்க எங்கிட்ட சின்ன வயசுல வந்தாங்க. தொடக்கத்தில் நிதி திரட்ட அவ்ளோ கஷ்டப்பட்டேன். ஸ்பான்சர் கிடைக்காமல் திண்டாடினேன். நண்பர்கள் கொடுக்கும் நிதிதான் உதவியாக இருந்தது. இப்போ, நான் நினைச்ச மாதிரி அஞ்சு பேரையும் சப்-இஸ்பெக்டராக்கிட்டேன். இந்தப் பிள்ளைங்க இன்னும் ஏராளமான சப்-இன்ஸ்பெக்டர்கள், ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உருவாக்குவார்கள்'' என்றபோது அவரிடத்தில் நம்பிக்கை மிளிர்ந்தது. 

மாரியப்பன் போன்றோரால் `அப்பா' என்ற வார்த்தை இன்னும் அர்த்தமுள்ளதாகிறது!