‘கோடமூலா, நீலகிரி கூடலூர் அருகில் உள்ள மலைக்கிராமம். பழங்குடி மக்களின் குழந்தைகள் படிக்கும் இந்தப் பள்ளியின் சுவர்களை, நாங்கள் ஐந்து திருநங்கைகள் சேர்ந்து, எங்களின் கைவண்ணத்தில் அழகாக மாற்றினோம். நன்றிக்குரிய தோழிகள் திருநங்கை சந்தியா, காஞ்சனா, சியாமளா மற்றும் கிருஷ்ணவேணிக்கு அன்பு.’ கவிஞர், ஓவியர், நடிகை மற்றும் `சகோதரி' தொண்டு அமைப்பின் நிறுவனர் திருநங்கை கல்கி சுப்ரமணியம், முகநூலில் பதிந்திருந்த இந்தச் செய்தியும் படங்களும் அதைப் பதிவுசெய்யும் ஆர்வத்தை அதிகரித்தது.
#Wallsofkindness #அன்பின் சுவர்கள் என்னும் ஹேஷ்டேகுடன், கல்கி தொடர்ச்சியாகப் பதிவுசெய்துவரும் செய்திகளையும் படங்களையும் குறித்து கேட்டபோது...
“ ‘சகோதரி’ தொண்டு அமைப்பின் வழியா, திருநங்கைகளுக்கு ஓவியப் பயிற்சி கொடுத்து, அதை அவங்க தொழில்முறைப் பயிற்சி செய்து, வருமானத்துக்கான முயற்சிகள் எடுத்துவர்றோம். இந்த வேலைகளுக்கு நடுவுல, எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குற விதமா, இந்தத் திட்டம் குறித்த யோசனை உதிச்சது. இந்த புராஜெக்ட்டுக்கு, `அன்பின் சுவர்கள்'னு பெயரிட்டு, இதைச் செஞ்சிட்டிருக்கோம். சாதாரணமா எந்த வசதியும் போய்ச் சேராத, மலைவாழ், பழங்குடியினப் பள்ளிச் சுவர்களுக்கு, வண்ண ஓவியங்களைத் தீட்டி புதுமைப்படுத்துறதுதான் எங்க திட்டம். இந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது, மூன்று விஷயங்களைக் குறிக்கோளா வெச்சுக்கிட்டோம்.
1. திருநங்கைகள் குறித்த அருவருப்பு உணர்வு, இனம் புரியாத வெறுப்பு, தவறான எண்ணங்கள்னு ஏற்கெனவே இங்கே ஆழமா வேர்விட்டு வளர்ந்திருக்கிற எண்ணங்களை உடைக்கணும்.
2. பள்ளிகள்தான் எங்களுடைய வேலை களம். குழந்தைகள் எந்தவிதமான முன்தீர்மானமும் இல்லாம எங்ககிட்ட பழகுறப்போ, சகமனிதர்களா எங்களை அணுகுவாங்க. வளரும் தலைமுறைக்கு திருநங்கைகள் குறித்த எண்ணம் நல்லவிதமா இருக்கும்.
3. திருநங்கைகள்ல பலரும் மனஉளைச்சலோடு வாழ்றாங்க. சமூகப் புறக்கணிப்பு, பொருளாதாரச் சூழல், அன்பற்றச் சூழல்னு பலவிதம் இருக்கு. எங்க `சகோதரி' அமைப்பைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் சரி, மற்ற திருநங்கைகளா இருந்தாலும் சரி... மக்களோடு பழகுறதுதான் இந்த டிப்ரெஷனுக்குத் தீர்வுன்னு நினைச்சேன். அதனால, இந்தப் பயணம் அதை செய்யும்னு நம்பினேன்.
அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் குக்கிராமப் பள்ளிகளுக்குப் பயணப்பட்டு, அந்த மக்களுடன் இரண்டு முதல் மூன்று நாள் வரையிலும் தங்கி, அவங்க கொடுக்கிற உணவைச் சாப்பிட்டு அந்தப் பள்ளிகளை அழகாக்கும் வேலைகளைச் செய்றோம். அவர்களுக்காக வேலை செய்யும்போது, மக்களுடைய அன்பு எங்களுடைய மனஉளைச்சலையும் துன்பத்தையும் கரைக்குது. இந்த மூணு நோக்கங்களுமே ரொம்ப அழகா நிறைவேறிட்டு வருது'' என்றவர்,
“இதுவரைக்கும் மூன்று பள்ளிகளைப் புதுமைப்படுத்தும் பணியைச் சிறப்பா செஞ்சிருக்கோம். கடந்த வாரம், கோடமூலா பழங்குடிக் கிராமத்துலதான் `அன்பின் சுவர்கள்' குழுவுக்கு வேலை. ரொம்ப அன்பான மக்கள் அங்கே இருக்காங்க. அந்தக் கிராமத்துல மின்சார வசதிகூட சரியா இல்லை. அந்தப் பள்ளியில பிரதீபாதான் ஆசிரியர். யானைகள் உலவும் அந்த அபாயகரமான சாலைகள்ல ஏழு கிலோமீட்டர் பயணிச்சு, குழந்தைகளுக்குப் பாடம் எடுக்குறாங்க. 7,000 ரூபாய் சம்பளமே வாங்கினாலும் பிரதீபா டீச்சர், அவங்களுடைய வேலையை ஆத்மார்த்தமாவும் மகிழ்ச்சியாவும் செய்றாங்க.
கோடமூலா கிராமத்துல கப்பம்கிழங்கை வேகவிட்டு, காய்கறிகளோடு ஏதாவது இறைச்சியைச் சேர்த்துச் சமைக்கிறதுன்னு எளிய உணவுகளா இருந்தது. அவ்வளவு அருமையான சுவையோடு சமைச்சுக் கொடுத்தாங்க மக்கள். எங்களுக்காக, ஸ்பெஷலா சுடுசோறும் குழம்பும்கூட செஞ்சுக் கொடுத்தாங்க. நாங்க ஐந்து திருநங்கைகள் போய், எங்க திட்டத்தைப் பத்திப் பேசினபோது, முதல்ல தயங்கினாலும் எங்க வேலைகளைப் பார்த்து நெருக்கமாகிட்டாங்க. அன்பு, நிச்சயமா எல்லாரையும் இணைக்கும். முயற்சிதான் வேணும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் கல்கி.
‘அன்பின் சுவர்களோடு நிறைவான வேலையில ஒரே ஒரு உதவிதான் எங்களுக்குத் தேவை. பல ஊர்கள்ல இருந்தும், `எங்க பள்ளிகளையும் அழகா புதுப்பிக்க வாங்க’னு அழைப்பு விடுக்குறாங்க. இதுவரைக்கும் புதுப்பிச்சப் பள்ளிகளுக்குச் சிறந்த தரத்திலான பெயின்ட்டுகள்தான் பயன்படுத்தியிருக்கோம். இனியும் செய்வோம். பெயின்ட்டுகளுக்கு, 4,000 முதல் 8,000 ரூபா வரை தேவைப்படுது. இந்த மாதிரி வேலைகளுக்கு, அந்தந்த கிராமங்களில் இயங்குற அமைப்புகள் உதவினா, இன்னும் மகிழ்ச்சியாயிருக்கும்'' என்னும் அழைப்பையும் வைக்கிறார் கல்கி.
திருநங்கைகள், பணம் பறிப்பவர்கள், வரம்பு மீறி நடந்துகொள்பவர்கள் என்பதுதான் பொதுவாக இருக்கும் எண்ணம். ஆனால், திருநங்கைகளின் இயல்பு அவையல்ல. ஆணைப்போல, பெண்ணைப்போல திருநங்கைகளும் மற்றொரு பாலினம். ஆனால், அவர்களை ஓர் உயிரினமாகக்கூட மதிக்காத சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது நிதர்சனமான கசப்பு. இன்று பலர், திருநங்கைகள் குறித்த ஸ்டீரியோ டைப் எண்ணங்களை உடைத்து, அடுத்த நிலைக்கு நகர்ந்திருக்கிறார்கள். திருநங்கைகளுக்கு சமூகம் அளிக்கும் மனஉளைச்சலையும் தாண்டி முன்நகர்ந்து, மற்ற திருநம்பிகளுக்கும் நம்பிக்கையைப் பரிசளிக்கிறார்கள். அத்தகையதொரு நம்பிக்கையாளர்தான் கல்கி.