ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
விகடன் வாசகர்களுக்கு பவா செல்லதுரையின் பிரியமான வணக்கம்...
'எழுத்தாளர்’ என்பதைவிட 'ஒரு விவசாயி’ என என்னை அடையாளப்படுத்திக்கொள்வதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இத்தனைக்கும் கடந்த
10 ஆண்டுகளாக நான் மேற்கொள்ளும் இயற்கை வேளாண்மை, மீண்டும் மீண்டும் நஷ்டத்தையே பரிசாக அளிக்கிறது. ஆனாலும் நான் விடாமல் மல்லுக்கட்டிக்கொண்டே இருக்கிறேன்.
அந்த அனுபவங்கள் மூலம் இயற்கை வேளாண்மை முறையில் விளைந்த காய்கறிகளை, சுலபமாக விற்க ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன். அதைப் பற்றி சொல்கிறேன்!
ஒரு நாளை ஒரு கவிதையோடு தொடங்குவது என் பழக்கம். அப்படி மகுடேசுவரன், ஒரு மனிதனைப் பற்றி எழுதிய ஒரு கவிதை அந்த நாளை வேறுவிதமாக மாற்றியது. அந்தக் கவிதை பற்றி, ஒரு நல்ல விஷயத்துடன் ஒரு நாளைத் தொடங்கினால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பற்றி சொல்கிறேன்.

கடந்த வாரம் திருவண்ணாமலையில் 'மலைவாழ் மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெரிய பேரணி நடந்தது. விதவிதமான வாத்தியக் கருவிகள் முழங்க மலைவாழ் மக்கள் நகர் பகுதியைக் கடந்துகொண்டிருந்தார்கள். அந்த மக்களின் வசிப்பிடங்களைத்தான் 'புலிகள் சரணாலயம்’ என்றும், 'யானையின் வழித்தடங்கள்’ என்றும், 'காப்புக் காடுகள்’ என்றும் சொல்லி, வனத்தில் இருந்து அவர்களைப் பிய்த்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டோம். நாம் வனத்தில் இருந்து வெளியேற்றவேண்டியது, இந்த மனிதர்களை அல்ல; வனத்தில் கட்டும் காங்கிரீட் கட்டடங் களையும், பசுமை வளங்களைக் கொள்ளை யடிக்கும் நபர்களையும்தான். வன மனிதர்கள் இந்த உலகத்துக்குச் செய்யும் நன்மைகள் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை நிறைய இருக்கின்றன!
என் நண்பர் ஒருவர் புகைப்படக் கலைஞர். அவர் எடுத்த ஒரு புகைப்படம் சமீபத்தில் ஏழு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டதாக அறிந்தேன். 'ஏழு லட்சம் ரூபாய்க்கு விற்கும் அளவுக்கு ஒரு புகைப்படத்தில் என்ன இருக்கிறது?’ எனக் கேட்கலாம். வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த போரை, ஆடை இல்லாமல் ஓடிவந்த ஒரு சிறுமியின் புகைப்படம்தான் நிறுத்த உதவியது. அப்படி வரலாறுகளை உருவாக்கும், வரலாற்றைப் பதிவுசெய்யும் திறன் புகைப்படங்களுக்கு இருக்கிறது. நம் குழந்தைகளை திரைப்படங்களற்ற, புகைப்படங்களற்ற, ஓவியங்களற்ற, வெறும் பாடப்புத்தகங்களை மட்டுமே படிக்கும் ஒரு தலைமுறையாக உருவாக்க இருக்கிறோமா? இது நாம் கவலையோடு கவனிக்க வேண்டிய விஷயம். அடுத்த தலைமுறையை ரசனையிலும் முதிர்ச்சியிலும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
15-10-15 முதல் 21-10-15 வரை 044-66802911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். நல்ல பல விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்!
அன்புடன்,
பவா செல்லதுரை.