வழக்கமாக சென்னை ஈ.சி.ஆர் சாலைதான் இளைஞர்களின் ஆதர்சன பைக் ரேஸ் சாலை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். வார இறுதி நாள்களில் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக சி.சி கொண்ட காஸ்ட்லி பைக்குகளில் ரோடும், பைக் டயர்களும் தேய தேய ஆக்ஸிலேட்டர்களை முறுக்கியபடி பைக் ரேஸ் போவார்கள். ஆனால், அந்த பைக் ரேஸ் மோகம் கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி இளைஞர்கள் மத்தியிலும் பரவ, 'குக்கிராமசாலைகளில் அவர்கள் நடத்திய பைக் ரேஸால் அப்பாவி முதியவர் ஒருவர் இறந்துவிட்டார். சிறுமி ஒருவருக்கு கால் முறிந்துவிட்டது. இன்னும் பல விபத்துகள் நடந்து எங்களைப் பதைபதைக்க வைக்கிறது' என்று அஞ்சுகிறார்கள் பள்ளப்பட்டி பகுதி மக்கள்.
இதுபற்றி விசாரித்தோம். நம்மிடம் பேசிய அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர், "பள்ளப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் (சொக்கலாபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, மண்மாரி பகுதிகளில்) பள்ளப்பட்டி பகுதி இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக ரேஸ் விடுகிறார்கள். ஒருவண்டிக்கு 2 முதல் 3 அல்லது நான்கு நபர்கள் என பயணம் செய்வது மட்டுமன்றி 4, 5 வண்டிகளில் பயங்கர சத்தத்துடன் ரேஸ் நடத்துகின்றனர். இவ்வாறு அதிவேகமாக செல்வதால் சாலைகளில் போகும் ஆடு, மாடுகள், வயதான முதியவர்கள் சாலைகளில் செல்ல முடியவில்லை. எப்போது இளைஞர்கள் பைக்குகளில் வருவார்கள், யார் மீது மோதி பரலோகம் அனுப்புவார்கள் என்ற அச்சத்துனடேயே செல்ல வேண்டி இருக்கிறது. கடந்த 15 நாள்களுக்கு முன்பு சொக்கலாபுரத்தைச் சேர்ந்த மருதாநாயக்கர் என்பவரை பள்ளப்பட்டி பகுதி இளைஞர்கள் 3 பேர் ஒரு வண்டியில் வந்து மோதியதில் அந்த முதியவர் இறந்துவிட்டார். அந்த இளைஞர்கள் ஓடிவிட்டனர். மேலும், இரண்டு நாள்களுக்கு முன்பு 3 பேர் அதிவேகமாக வண்டியில் வந்து பாறையில் மோதி கீழே விழுந்து, சம்பவ இடத்திலே பள்ளப்பட்டி பகுதி இளைஞர் ஒருவர் இறந்துவிட்டார். அதேபோல், சில தினங்களுக்கு முன்பு ஆக்ஸ்போர்டு பள்ளி சாலையில் சில இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்த, ஓரமாக சென்ற பள்ளி சிறுமி மீது ஒரு பைக் மோதி, அந்த சிறுமிக்கு கால் எலும்பு முறிந்துவிட்டது. நல்ல வேளையாக அவளுக்கு உயிருக்கு ஒன்றும் ஆகவில்லை. இப்படி, நாங்க இந்தப் பகுதியில் பயந்தபடியே நடமாட வேண்டி இருக்கு. எனவே, அரவக்குறிச்சி காவல் துறை இப்பகுதிகளில் அடிக்கடி வாகனச்சோதனை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து, இளைஞர்களின் பைக் ரேஸ் கலாசாரத்துக்கு மூக்கணாங்கயிறு போட வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்துவோம்" என்று எச்சரிக்கிறார்கள்.