விகடன் வரவேற்பறை
##~## |
நெஞ்சில் ஒளிரும் சுடர்
சுந்தர ராமசாமிபற்றிய நினைவுகள்
கமலா ராமசாமி
வெளியீடு: காலச்சுவடு அறக்கட்டளை, 669, கே.பி.சாலை, நாகர்கோவில்-1. பக்கங்கள்: 160 நன்கொடை

100
சு.ரா-வோடு இணைந்து வாழ்ந்த 50 ஆண்டு காலத்தை யும் தன் இளம் பருவ நினைவுகளையும் எழுதியிருக்கிறார் கமலா அம்மையார். சு.ரா. பெண் பார்க்க வந்தது, எழுத்தாளனாகச் செயல்பட்ட விதம், சுகவீனமுற்று படுக்கையில் இருந்தது எனப் பதிவுகள் எல்லாமே எழுத்தாளரின் வண்ணம் படாத எழுத்துக்கள். நிச்சயமாக கமலா அம்மையாரின் கடைசிப் பக்கங்கள் கண்ணை நிறைக்கும். இக்காலத் தம்பதியினர் தவறவிடுகிற சுகமான தாம் பத்யத்தின் இனிய பதிவு!
உண்ணும் உணவில் என்ன உண்டு?
www.desidieter.com
டயட் பற்றிய கட்டுக்கதைகளில் இருந்து சமீபத்திய உணவுப் பழக்கங்கள் உண்டாக்கும் பலவீன நிலவரங்கள் வரை டிப்ஸ் தெளிக்கும் தளம். குழந்தை பெற்ற தாய்மார்கள், பெரியவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்குத் தனித்தனியே உணவு வகைகளைப் பரிந்துரைப்பது என வாசகர்கள் மேல் முழு அக்கறை காட்டும் தளம்!

மயக்கம் என்ன இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
வெளியீடு: ஜெமினி ஆடியோ விலை:

99
செல்வராகவன் இரண்டு பாடல்கள், தனுஷ் இரண்டு பாடல்கள், இருவரும் இணைந்து ஒரு பாடல் எழுதிவிட்டு, ஒரு பாடலை இருவரும் இணைந்து பாடவும் செய்திருக்கிறார்கள். ஆச்சர்ய மாக... எளிமையாக... இனிமையாக... சுவாரஸ்யம் சொல்கின்றன ஒவ்வொரு வரிகளும்! 'நான் சொன்னதும் மழை வந்துச்சா’ பாடலில் வரிகளும் இசையும் மனதுக்குள் மழைத் தாளம் எழுப்புகிறது. 'பிறை தேடும் இரவிலே’ பாடலின் உருக்கமான வரிகளுக்கு ஜீவன் சேர்க்கிறது சைந்தவியின் குரல்! செல்போனில் ரகசியம் பேசும் குரலில் தனுஷ் பாடியிருக்கும் 'ஓட ஓட ஓட’ பாட்டு சிம்பிள் சிக்ஸர். பாடலின் வரிகளில் அத்தனைக் குறும்பு. அண்ணன் - தம்பி இணைந்து காதல் ஆறுதல் சொல்லும் 'காதல் என் காதல்’ ஆல்பத்தின் அக்குறும்பு ஹிட். 'அடிடா அவளை... உதைடா அவளை...’ எனக் காதலியைப் பலிபோடத் துடிக்கும் போதை வரிகள். நிச்சயம் பசங்க மனதில் பச்சக் இடம் பிடிக்கும் பாடல். மயக்குகிறது ஆல்பம்!
கோப்பை இயக்கம்: மில்லர் வெளியீடு:அக்னஸ் ஃபிலிம்ஸ்
தேநீர் கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர் பேப்பர் கப்பில் டீ கேட்கிறார். ''ஆமா! மத்தவன்லாம் நோயாளி... இவரு சுத்தம்'' என்று முனகியபடியே பேப்பர் கப்பில் டீ போட்டுத் தருகிறார் டீ மாஸ்டர். டீயைக் குடித்து விட்டு, அந்த வாடிக்கையாளர் சொல்லும் தகவல், அதிர்ச்சி க்ளைமாக்ஸ். விழிப்பு உணர்வு சொல்லும் கதையை நிறைய விவரணைகளோடு சொல்லிய விதத்தில் அசத்தல்!
தெருக்கூத்து பார்க்கலாமா?
http://maatrunatakam.blogspot.com
நாடக ஆர்வலரும் கலைஞருமான கி.பார்த்திபராஜாவின் வலைப்பூ. 'தெருக்கூத்து கற்றுக்கொள்ளப் போனேன்’ என்று தான் தெருக்கூத்தைக் கற்றுக்கொண்ட அனுபவத்தைச் சொல்வதில் எழுத்து நயம் பிரகாசம். தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி, நாடக அறிஞர் பாதல் சர்க்கார் ஆகியோர் பற்றிய அஞ்சலிக் கட்டுரைகள் மொழி, கலை ஆகியவற்றின் அன்றைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவுகிறது!