
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று மாலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 18 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் கார்த்திகை தீப திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம், இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது.
மகா தீபம் ஏற்றுவதை முன்னிட்டு,இன்று அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் அக்னி யாகம் வளர்க்கப்பட்டு அதிலிருந்து பரணி தீபத்தை முத்துக்குமார சிவாச்சாரியார் ஏற்றினார்.
பரணி தீபத்தை சன்னதியில் இருந்து கொண்டு வந்து பக்தர்கள் தரிசனத்துக்காக காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். அதன்பின் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கும் தீபம் ஏற்றப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன், அமைச்சர் கோகுல இந்திரா, கலெக்டர் விஜய் பிங்ளே, இந்து அறநிலையத் துறை ஆணையாளர் தனபால், கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.மாலையில் மகா தீபம் ஏற்றுவதை முன்னிட்டு கோவிலில் சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். முன்னதாக பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வார்கள்.
அதைத் தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடி கோவிலின் கொடி மரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக 6 மணிக்கு அகண்டதீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
##~~## |