வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உதவியாக, ஜெயலலிதா அறிவித்த இருசக்கர வாகனத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள், இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவிகித மானியம் அல்லது 25,000 இவற்றில் எது குறைவோ, அத்தொகையை அரசு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தால் பயனடையும் பெண்கள், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருக்க வேண்டும், தமிழகத்தில் வசிப்பவராகவும் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அவர்களின் தனி ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின்மூலம் பயன்பெறும் பெண்கள், பதிவுசெய்யப்பட்ட அரசு மற்றும் பொதுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவர்கள், தனியார் தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பல்வேறு அரசுத் திட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், சுயமாகத் தொழில் செய்திடும் களவிளர்கள், சமுதாய அமைப்புகளான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்க நிர்வாகிகள், சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் இத்திட்டத்தின்மூலம் பயனடையலாம். இதற்கான விண்ணப்பங்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகங்களில் இலவசமாகக் கிடைக்கும். ஆன்லைனில் http://www.tamilnadumahalir.org/tnatws.html என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்களை, அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இன்று (திங்கள்கிழமை) முதல் பிப்ரவரி 5-ம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவுத் தபால் மூலமோ சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அளிக்க வேண்டும்.