குடும்பப் பிரச்னைகளுக்கு சுமூகமாகத் தீர்வு காண்பதே குடும்ப நீதிமன்றங்களின் நோக்கமாகும் என கரூரில் குடும்ப நீதிமன்றத்தை திறந்துவைத்து உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.
கரூர் மாவட்ட ஆட்சியரகம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நீதிமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் சட்டம், நீதிமன்றம், சிறைதுறை அமைச்சர் சி.வி.சண்முகம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.கோவிந்தராஜ் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் நேற்று( 27.01.2018 ) கலந்து கொண்டனர். அப்போது, குடும்ப நீதிமன்றத்தைத் திறந்து வைத்து பேசிய இந்திரா பானர்ஜி, 'குடும்ப நீதிமன்றங்கள் தொடங்குவதன் நோக்கம் தம்பதியினர்களுக்குள் ஏற்படும் குடும்பப் பிரச்னைகளுக்குத் சுமூகத்தீர்வு காண்பதே ஆகும்.
பெரும்பாலும் தம்பதியர்கள் தங்களது பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும். கோபமான மனநிலையில் இருக்கும்போது எந்த ஒரு முடிவையும் எடுக்க முன்வரக்கூடாது. நீதிமன்றங்கள் பெரும்பாலும் குடும்பப் பிரச்சனைகளை கையாலும்போது நல்லதொரு சுமூகத்தீர்வை வழங்க முன்வரவேண்டும்" என கேட்டுக்கொண்டார்.