Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

** உண்மைச் சம்பவங்களும் வாழ்க்கை வரலாறுகளும்தான் இப்போது பாலிவுட்டின் ட்ரெண்ட் சினிமா. இந்த முறை இவர்கள் கண்வைத்திருப்பது பிரதமர் மோடி மீது. `ஸ்கிரிப்ட் தயார். ஆனால் இன்னும் மெருகேற்ற உழைக்கிறோம். அது முழுமையானதும் படப்பிடிப்பு நடக்கும்’ என்கிறார் இந்தி நடிகர் பரேஷ் ராவல். அமிதாப் பச்சனை மோடியாக நடிக்கவைக்கும் முயற்சியும் நடக்கிறது. தில்வாலே மோடி!

**  தமிழில் பேய் பட சீஸன் ஒழிந்தாலும் ஹாலிவுட்டில் ஒழியாது. பேய் பட ரசிகர்களை தியேட்டரில் வைத்து திகிலடித்து அனுப்பிய ‘காஞ்சூரிங்’ படத்தின் அடுத்த பகுதி ஜூன் மாதம்  வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இதன் டீஸர் இணையத்தைப் பதறவைத்தது. அமெரிக்காவில் அமானுஷ்ய நிகழ்வுகள் பற்றி ஆய்வு செய்யும் எட்வர்டு, லொரைன் என்கிற இருவர் சந்தித்த அமானுஷ்யங்கள்தான் கதை.  இது இன்டர்நேஷனல் காஞ்சனா!

இன்பாக்ஸ்

**  `நானாக்கு ப்ரேமதோ' படத்தில் ஹெப்ஸ்டர் ஸ்டைலில் தாடிவைத்து நடித்திருந்தார் ஜூனியர் என்.டி.ஆர். எங்கே போனாலும் அந்தத் தாடியோடே போனவர், நாகார்ஜுனா நடத்தும் `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' தெலுங்கு வெர்ஷனுக்கு முரட்டுத் தாடி முழுவதையும் ட்ரிம் செய்துவிட்டு வந்தார். ஜூனியரைப் பார்த்ததும் ஷாக்கான நாகார்ஜுனா `தாடியோட வருவீங்கனு எதிர்பார்த்தேன்' எனக் கேட்க, `என் பையன் பிறந்ததில் இருந்து என்னைத் தாடியோடு பார்த்துப் பழகிட்டான். நான் ஒரிஜினலா எப்படி இருப்பேன்னு அவனுக்குத் தெரியணும்ல. அதான் படம் ரிலீஸ் ஆனதும் தாடியை  எடுத்துட்டேன்' என எமோஷனாகி இருக்கிறார்! தாடி இல்லாத டாடி!

**  `அணுகுண்டைவிட பல மடங்கு சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெற்றி கரமாகப் பரிசோதித்துப் பார்த்துவிட்டோம்’ என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது வட கொரிய அரசு. `ஹிரோஷிமா அழிவை ஏற்படுத்திய `லிட்டில் பாய்’ அணுகுண்டைவிட இது மிகவும் சக்திவாய்ந்தது. இந்த முறையில் வெடிப்பை நிகழ்த்தினால், அணுகுண்டால் ஏற்படும் அழிவைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்’என்கிறார்கள் நிபுணர்கள். `மற்ற நாடுகள், எங்கள் நாடு மீது தாக்குதல் நடத்தினால்தான் நாங்கள் இதைப் பயன்படுத்து வோம்' என்கிறார் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன். இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகள் இதற்குக் கண்டனம் தெரிவித்தபடி அதிர்ச்சியில் ஆழ்ந்திருக் கின்றன. அழிவு அரசியல்!

இன்பாக்ஸ்

**  இதுவரை அழகு குட்டி செல்லமாகவே பார்க்கப்பட்ட ஷ்ரதா, இப்போது அதிரடி ஆக்‌ஷன் ஸ்டார். விளம்பரப் படத்துக்காக 32-வது மாடியில் இருந்து குதித்த ஸ்டன்ட் போட்டோஸை, ஷ்ரதா, இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய, `பிராவோ பிராவோ' என கமென்ட்டித் தள்ளி விட்டார்கள் நெட்டிசன்ஸ்.  ஏறு... ஏறு... முன்னேறு!

இன்பாக்ஸ்

** ஜப்பானில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஒரு ரயில் நிலையம் செயல்படுகிறது. நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள Hokkaido என்ற தீவுப்பகுதியில் Kami-Shirataki என்ற ரயில் நிலையம் இருக்கிறது. நகரைவிட்டு தொலைவில் அமைந்துள்ள இதை நிரந்தரமாக மூடிவிட மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரயில்வே துறை முடிவுசெய்தது. ஆனால், இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பள்ளி மாணவி ஒருவர், பள்ளிக்குச் சென்று திரும்புகிறார். இதனால் ரயில் நிலையத்தை மூடும் முடிவைத் தள்ளிவைத்துவிட்டது ஜப்பான் அரசு. ஒரே ஒரு மாணவியின் கல்விக்காக ரயில் நிலையத்தை மூடாமல் நடத்திவரும் ஜப்பான் அரசுக்கு, உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. கோடி லைக்ஸ்!

இன்பாக்ஸ்

** சென்னையில் மழை வெள்ளம் ஓய, ஊட்டியில் வெள்ளை மழை பொழிகிறது. நீலகிரியில் கடந்த வாரம் முழுக்க உறைபனியின் தாக்கம் அதிகரிக்க, பனிப்பொழிவால் காஷ்மீர்போல இருக்கிறது ஊட்டி. அப்பர் பவானி, அவலாஞ்சி, கோரகுந்தா பகுதிகளில் ஜீரோ டிகிரிக்கும் கீழே குளிர் ஊசியாகிக் குத்த நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் ஊட்டிவாசிகள். ஜில்லி!

இன்பாக்ஸ்

** இந்த மூன்று வயது பாட்டி அழகாக இருக்கிறாரா? அதிர்ச்சியடைய வேண்டாம். இந்த குட்டிப் பெண்ணின் அத்தை செய்த மேக்கப் மேஜிக்தான் இது. ‘நான் மேக்கப் போட்டுக்கொண்டிருந்த போது எனக்கும் மேக்கப் போடச் சொல்லிக் கேட்டாள் இவள். எப்படி இருக்கிறது?’ என இந்த போட்டோவை ட்விட்டரில் பகிர, கொஞ்ச நேரத்திலேயே தெறி ஹிட். வைரல் பாட்டி! 

இன்பாக்ஸ்

** ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பாஷ் கிரிக்கெட் லீக் போட்டியின்போது அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், டி.வி வர்ணனையாளரை கொஞ்சம் அளவுக்கு மீறிக் கலாய்க்க, விவகாரம் விபரீதம் ஆனது. பெண் நிருபரிடம் ஓவராகப் பேசினார் என கிறிஸ் கெய்லுக்கு 10,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நாளே, `பார்ட்டிக்குப் போகக் காசு இல்லை. என் பாக்கெட் காலியாக இருக்கிறது. பிராவோதான் இன்றைய பார்ட்டிக்கு ஸ்பான்சர் செய்கிறார்' என இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டைக் கலாய்த்திருக்கிறார் கெயில். கொஞ்சம் ஓவர்டி!

இன்பாக்ஸ்

** டெக்னாலஜி, மனிதர்களை மட்டும் அல்ல... விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற கவலையும் இருக்கும். அவர்களுக்காகத்தான் இந்த WonderWoof BowTie ஜி.பி.எஸ் ட்ராக்கர் பொருத்தப்பட்ட இந்த பெல்ட்டை, செல்லப்பிராணியின் கழுத்தில் கட்டிவிட்டு மொபைல் அப்ளிகேஷன் மூலம் கண்காணிக்கலாம். செல்லப்பிராணி என்னென்ன செய்கிறது, வீட்டைவிட்டு குறிப்பிட்ட தூரத்தைக் கடந்துவிட்டால் எச்சரிக்கை செய்யும் அலாரம், தினமும் அதன் வளர்ச்சி என அனைத்தையும் மொபைலில் பார்க்கலாம். விலை 175 அமெரிக்க டாலர். எல்லாம் டெக் மயம்!

இன்பாக்ஸ்

**  அமெரிக்காவில் மிகவும் மதிப்புமிக்கது `பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருது’. முழுக்க முழுக்க மக்கள் தேர்வுசெய்யும் நபர்களுக்கே விருது. இந்த வருடம் ‘புதுமுகத் தொலைக்காட்சி நடிகைக்கான பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருது நம் ப்ரியங்கா சோப்ராவுக்குக் கிடைத்திருக்கிறது. ‘குவான்டிகோ’ தொலைக்காட்சித் தொடரில் நடித்தற்காக இந்த விருது. பொண்ணு இப்போ செம ஹேப்பி!
பிளஸ் யூ ப்ரியங்கா!