சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பு மாநாடு இன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆகியோர் கூட்டாக இணைந்து தலைமை தாங்கினர்.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் அன்டோனியோ கெடரெஸ், வெனிசூலா ஜனாதிபதி நிக்கோலா மடோரோ மற்றும் வங்கதேச தலைவர் அப்துல் ஹமீத் உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். 2015-ம் ஆண்டில் பாரிஸ் பருவநிலை மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து சூரியசக்தி கூட்டமைப்பை உருவாக்கின.
சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் நாடுகளில், எரிபொருள்களுக்குப் பதில் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில், உரையாற்றிய பிரதமர் மோடி, 'சூரிய சக்தி தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைப்பது குறித்து நாம் முதலில் உறுதி செய்ய வேண்டும். எரிசக்தி கலவைகள் மற்றும் சூரிய சக்தி விகிதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும், முன்நோக்கிச் செல்லும் வழியினை சிந்திப்பது மிகவும் அவசியம் என்றார். இந்தியா மட்டுமின்றி உலகிற்கே சூரிய மின்சக்தி அதிகம் தேவை. அதனால், சூரிய சக்தி தொழில்நுட்பத்தில் புதுமைகளை நாம் ஊக்குவிப்பது அவசியம் என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.