குரங்கணி வனப்பகுதியில் உரிய அனுமதி பெற்ற பின்னரே மலையேற்ற பயிற்சிக்குச் சென்றதாகச் சென்னை ட்ரெக்கிங் கிளப் விளக்கம் அளித்துள்ளது.
தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றபோது காட்டுத் தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மலையேற்றப் பயிற்சிக்கு, சென்னை ட்ரெக்கிங் கிளப் என்ற அமைப்பே ஏற்பாடு செய்திருந்தது. அந்த அமைப்பினர் உரிய அனுமதி பெறாமல் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல், சென்னை ட்ரெக்கிங் கிளப் அமைப்பின் முக்கிய நிர்வாகியான பீட்டர் தலைமறைவானதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றதாக சென்னை ட்ரெக்கிங் கிளப் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ``குரங்கணி வனப்பகுதியில் மகளிர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலையேற்றப் பயிற்சியின்போது காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.
அந்த மலையேற்றப் பயிற்சியை அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் நிஷா மற்றும் திவ்யா ஆகியோர் அருண், விபின் ஆகியோரின் உதவியுடன் ஒருங்கிணைத்தனர். அவர்கள் 27 பேர் கொண்ட குழுவினரை 2 நாள்கள் மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றனர். கடந்த மார்ச் 10-ம் தேதி குரங்கணி மலையடிவாரத்தில் வனத்துறை செக் போஸ்டில் பணம் செலுத்தி உரிய அனுமதிச் சீட்டை அவர்கள் பெற்றனர். குரங்கணி மலையடிவாரத்திலிருந்து கொழுக்குமலை வரை உள்ளூர் மக்கள் மற்றும் மலையேற்றப் பயிற்சி வீரர்கள் ஏற்கெனவே உருவாக்கிய பாதையில் ட்ரெக்கிங் பயிற்சி செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை (10.3.2018) காலையில் மலையேற்றப் பயிற்சியைத் தொடங்கியபோது காட்டுத் தீ பிடித்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அன்றைய தினம் மாலையில் கொழுக்குமலை உச்சிக்குச் சென்று அங்கு முகாமிட்டனர்.
குரங்கணியிலிருந்து கொழுக்குமலை சென்ற அதேபாதையில் ஞாயிற்றுக்கிழமை காலைவேளையில் அவர்கள் கீழிறங்கத் தொடங்கினர். மலையிலிருந்து பாதியளவுக்கு அவர்கள் கீழிறங்கிவிட்டனர். விவசாயப் பணிகளை முடித்த விவசாயிகள், நிலத்தில் மிச்சமிருப்பவற்றைத் தீ வைத்து அழிப்பது வழக்கம். அந்த வழக்கத்தின்படி ஞாயிற்றுக்கிழமையன்று மலையடிவாரத்தில் விவசாயிகள் நிலத்தில் தீ வைத்ததாகத் தெரிகிறது. போடி பகுதியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், அந்தப் பகுதியில் பயங்கரக் காற்று வீசியது. இதனால், மலையடிவாரத்தில் வைக்கப்பட்ட தீ, மலைப்பகுதியில் மிக வேகமாகப் பரவியது. மலையில் கீழிருந்து மேல்பகுதி நோக்கி தீ பரவத் தொடங்கியது.
இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சிலர், `தீ மிக வேகமாகப் பரவியதால் அதிலிருந்து தப்புவதற்கு அதிக நேரம் கிட்டவில்லை’ என்றனர். காட்டுத் தீ பரவுவதைக் கண்ட குழுவினர் தீயிலிருந்து விலகிச் செல்ல முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பிச் சென்ற திசையின் எதிர்திசையிலும் தீ பரவி அவர்களை வழிமறித்தது. இதுதொடர்பாக அந்தக் குழுவில் இருந்து உள்ளூர் பயண வழிகாட்டிகள் இருவரை சென்னை ட்ரெக்கிங் கிளப் சார்பில், ஞாயிற்றுக்கிழமை மதியம் அழைத்து அவர்கள் இருக்கும் பகுதியைக் கேட்டறிந்தோம். இதையடுத்து, அவர்களை மீட்கும் நோக்கில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் அவர்கள் இருக்கும் பகுதி குறித்த தகவல்களை வனத்துறையினரிடம் பகிர்ந்தோம். அவர்களுக்கு உதவும் வகையில் பயிற்சி பெற்ற குழு ஒன்றை தேனிக்கு நாங்கள் அனுப்பி வைத்தோம்.
மலையேற்றப் பயிற்சியை ஒருங்கிணைத்த அருண் மற்றும் விபின் ஆகியோர் மலையேற்றத்தில் நன்கு பயிற்சி பெற்று, நாடு முழுவதும் உள்ள மலைகளில் கடந்த 7 ஆண்டுகளாக ட்ரெக்கிங் சென்று கொண்டிருந்தவர்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ட்ரெக்கிங் நிகழ்வுகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை அவர்கள் வென்றுள்ளனர். அதேபோல், கடினமான சூழல்களை எதிர்க்கொள்வதில் அவர்கள் பயிற்சி பெற்றவர்கள். இந்த விபத்தில் அவர்கள் உயிரிழந்துவிட்டனர் என்ற தகவலை நம்பமுடியவில்லை. குழுவினரைக் காக்க அவர்கள் இறுதிவரை முயற்சி செய்திருப்பார்கள். அதேபோல், மலையேற்றப் பயிற்சிக் குழுவில் ஈடுபட்டிருந்த திவ்யா முத்துக்குமாரன் என்பவர், 3 பேரைக் காப்பாற்றியுள்ளார். பின்னர், மற்றவர்களையும் காப்பாற்றுவதற்காகச் சென்ற திவ்யா, மீண்டும் திரும்பி வரவேயில்லை. குழுவினரை மீட்கச் சென்றபோது, அவர் உயிர்த் தியாகம் செய்துள்ளார். இந்த விபத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.