
இன்பாக்ஸ்

• 34 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சாம்பியன் டிராஃபி ஹாக்கி போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறது இந்தியா. சமீபத்தில் லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி போட்டிக்கு, பெரிய நம்பிக்கை எதுவும் இல்லாமல்தான் போனது இந்தியா. ஆனால் இங்கிலாந்து, தென்கொரியாவுடனான போட்டிகளில் வெற்றி பெற்றதோடு, பலம் வாய்ந்த ஜெர்மனி அணியுடன் 3-3 என போட்டியை டிராவிலும் முடித்து இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மோதியது. இறுதிவரை இரு அணிகளுமே கோல் அடிக்காத நிலையில் பெனால்ட்டி ஷூட் அவுட் மூலம் சாம்பியன்ஷிப்பை வென்றது ஆஸ்திரேலியா. `இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பான இந்தப் பதக்கம், எங்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது’ எனப் பரவசமாகியிருக்கிறார் இந்தியாவின் கேப்டன் சர்தார் சிங். மீண்டு வாங்க வீரர்களே!
• எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறார் இந்தியாவின் மிக முக்கியமான மாற்று சினிமா இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். 2008-ம் ஆண்டில் வெளியான `ஒரு பெண்ணும் ரெண்டானும்' படத்துக்குப் பிறகு ஓய்வில் இருந்தவர், இப்போது `பின்னேயும்' படத்தின் மூலம் வந்திருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கும் 12-வது படம் இது. திலீப் - காவ்யா மாதவன் நடித்திருக்கும் இந்தப் பட ஷூட்டிங்கை, 23 நாட்களில் முடித்திருக்கிறார். படத்தின் பட்ஜெட்டும் சில லட்சங்கள்தானாம். சொல்லித்தாங்க சார்!
• வெளிநாட்டுப் பயணங்கள் தவிர தமிழ்நாடு, கேரளா... என, இந்தியாவின் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் இந்தியில் மட்டுமே பேசுவது என்ற கொள்கை முடிவில் இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும்கூட இந்தியில் பேசுவதைத்தான் மோடி விரும்புகிறாராம். இதனால் மோடியிடம் இந்தியில் பேசிப் பாராட்டு வாங்க, சமீபத்தில் நடந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் மாநாட்டில் கிட்டத்தட்ட எல்லா அதிகாரிகளுமே இந்தியில் பேசியிருக்கிறார்கள். `இங்கே பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்தாலும், அருமையாக இந்தி பேசுகிறீர்கள். உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்' எனப் புகழ்ந்திருக்கிறார் மோடி. இந்தி வித் மோடி!

• இந்தியப் போர் விமானங்களை, பாவனா காந்த், மோகனா சிங், அவனி சதுர்வேதி என்கிற மூன்று பெண்கள் முதன்முறையாக இயக்கப்போகிறார்கள். `போர் விமானங்களை பெண்களும் இயக்கலாம்’ என, கடந்த அக்டோபரில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. உடனே, `விமானிகளாக நாங்க ரெடி' என நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்வமாக வந்தனர். மொத்தம் ஆறு பெண்கள் பயிற்சிபெற்றுவந்த நிலையில், இந்த மூன்று பேர்தான் இறுதியாகத் தேர்வாகியிருக்கிறார்கள். அடுத்ததாக நவீன ஜெட் விமானங்களை இயக்கும் பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. சல்யூட் கேப்டன்ஸ்!

• விராட் கோஹ்லி என்ன சாதனை செய்தாலும், அதை அடுத்த ஆளாக வந்து உடைக்கிறார் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் ஆம்லா. `157 இன்னிங்ஸில் 23 சதங்கள் அடித்தவர்' என்ற சாதனையை தன் வசம் வைத்திருந்தார் கோஹ்லி. அதை இப்போது `132 இன்னிங்ஸில் 23 சதம்' என முறியடித்திருக்கிறார் ஆம்லா. இதற்கு முன்னர் மிகக் குறைந்த இன்னிங்ஸில் 6,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார் கோஹ்லி. அதையும் உடைத்தவர் ஆம்லாதான். பிரேக்கர் ஆம்லா!

• `லகான்’ படத்தை இயக்கிய அஷுதோஷ் கெளரிகர், அடுத்ததாக சிந்துசமவெளி நாகரிகம் பற்றி `மொஹஞ்சதாரோ' என்னும் படத்தை இயக்கியிருக் கிறார். ஹ்ருத்திக் ரோஷன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர், வெளியான சில நிமிடங்களிலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது. போஸ்டரில் பூஜா ஹெக்டே செம மாடர்னாக இருந்ததுதான் காரணம். `ஹரப்பாவின் பெண்கள், சிவப்பு நிறம் கிடையாது; கறுப்பு நிறம். அதோடு அவர்கள் தலையில் சிறகுகள் வைத்துக் கொள்கிறவர்கள் அல்லர். அந்தக் காலத்தில் எந்தப் பெண்ணும் கால்களுக்கு வாக்ஸிங் செய்துகொண்டதும் இல்லை. நம் குழந்தைகளுக்கு, தவறான வரலாற்றைக் கற்றுக்கொடுத்து விடக் கூடாது' என விமர்சகர்கள் சவுக்கைச் சுழற்ற... `மொஹஞ்சதாரோ’ படக் குழுவோ கப்சிப். வரலாறு முக்கியம் கெளரிகர்!
• `அவதார்’ பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இப்போது சிசிலி, மால்டா, சான்டோரினி, சார்டினியா... போன்ற ஸ்பெயின் கடல் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய தேடல், அட்லான்டிஸ் தீவைத் தேடி. பிளாட்டோ தன் புராணப் படைப்பில் கிரேக்கத்தில் இருந்ததாக எழுதியிருந்த கற்னைத் தீவு, நிஜமாகவே இருந்ததாக மர்மமான பல தியரிகள் சுற்றிக்கொண்டிருந்தன. அதைத் தேடித்தான் களத்தில் இறங்கியிருக்கிறார். இந்த முயற்சியை ஆவணப்படமாகவும் எடுத்துவருகிறார் கேமரூன். மர்மத் தீவுகள்!