Published:Updated:

“சிறைக்காவலர்கள் 30 பேர் சேர்ந்து என் கணவரை தாக்கியிருக்கிறார்கள்!”

“சிறைக்காவலர்கள் 30 பேர் சேர்ந்து என் கணவரை தாக்கியிருக்கிறார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சிறைக்காவலர்கள் 30 பேர் சேர்ந்து என் கணவரை தாக்கியிருக்கிறார்கள்!”

சமூக சேவகர் பியூஷ் மானுஷ் மனைவி கண்ணீர்அநியாயம்

“என் கணவர் பியூஷை சிறையில்போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் தேம்பித் தேம்பி அழுதார். திருமணம் ஆகி 16 ஆண்டுகளில் அவர் அழுததை நான் பார்த்ததே இல்லை. போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். அவர், சிறையைக் கண்டு அஞ்சுபவரும் கிடையாது. இந்த முறை சிறை அதிகாரிகள் கடுமையாக டார்ச்சர் செய்திருக்கிறார்கள். ‘என்னைச் சிறை அதிகாரிகள் பயங்கரமாகத் துன்புறுத்துகிறார்கள். வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போடச் சொல்கிறார்கள். கமிஷனரிடமும், எஸ்.பி-யிடமும் மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்கள்’ என்று அழுதுகொண்டே சொன்னார். பிறகு, நொண்டியபடி திரும்பிச் சென்றார்” என்று சொல்லிவிட்டு பியூஷ் மானுஷின் மனைவி கதறுகிறார்.

சேலத்தைச் சேர்ந்த பியூஷ் மானுஷ் ஒரு சமூக சேவகர். சுற்றுச்சூழல் சார்ந்து  சேலம் பகுதியில் ஏராளமான நற்பணிகளைச் செய்து வருபவர். அவரைத்தான் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்து உள்ளனர். பியூஷ் மானுஷின் மனைவி மோனிகாவிடம் பேசினோம். 

“சிறைக்காவலர்கள் 30 பேர் சேர்ந்து என் கணவரை தாக்கியிருக்கிறார்கள்!”

‘‘என்ன நடந்தது?’’

“சேலம் முள்ளுவாடி கேட்டில் ரயில்வே பாலம் கட்டுவதாகச் சொல்லி கடந்த 7-ம் தேதி இரவு குழிகள் தோண்டி இருக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிப்படு வதாக ‘மக்கள் குழு’வுக்குத் தகவல் வந்தது. என் கணவர் பியூஷ், கார்த்திக், முத்து ஆகியோர் அங்கு சென்று அங்கிருந்த காவல் துறை யினரிடம், ‘இந்த இடத்தில் பாலம் கட்டும் முன்பு மாற்றுப் பாதையை உருவாக்கிக் கொடுங்கள். பாலம் கட்டும் இந்த இடத்தில் 17 குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்திய பிறகு, வேலைகளை ஆரம்பித்தால் உடனே முடித்து விடலாம். அவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கிவிட்டால் பணிகள் முடங்கிவிடும். பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று கூறினர். இதனால் போலீஸார் கோபம் அடைந்து, ‘பணிகளில் குறுக்கிட்டு ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தல், அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு உத்தரவை மதிக்காமல் நடத்தல், கொலை செய்வதாக மிரட்டல்’ என 4 பிரிவுகளின் கீழ் 3 பேரையும் கைது செய்திருக்கின்றனர்.”

“சிறையில் உங்கள் கணவரைச் சந்தித்தபோது அவர் என்ன சொன்னார்?”

“வழக்கறிஞரை வைத்து 15-ம் தேதி சிறைக்குச் சென்று விசாரித்தபோது 30 சிறைக்காவலர்கள் என் கணவரை ஒரு மணி நேரம் அடித்ததாகவும், சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்வதாகவும் தெரியவந்திருக்கிறது.”

“உங்கள் கணவருக்கு ஏன் ஜாமீன் கிடைக்கவில்லை?”

“கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் 14-ம் தேதி ஜாமீன் கேட்டிருந்தோம். ‘கார்த்தி, முத்து ஆகிய இருவருக்கும் ஜாமீன் கொடுப்பதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ எனக் காவல் துறை கூறியதால் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. ஆனால் பியூஷ் மீது, ‘சேலம் மாநகராட்சி மரங்களை வெட்டியதைத் தடுத்த வழக்கு, ஆனந்தா மேம்பாலம் திறக்கப்படாமல் கிடப்பில் இருந்ததை எதிர்த்து நோட்டீஸ் கொடுத்ததற்கு வழக்கு, ஏரி ஆக்கிரமிப்பை எதிர்த்த வழக்கு எனப் பல வழக்குகள் உள்ளன. அதற்கெல்லாம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதனால் அவருக்கு ஜாமீன் கொடுக்க கூடாது’ என்று நீதிபதியிடம் கூறியதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.”

“சேலம் காவல் துறைக்கு பியூஷ் மீது அப்படி என்ன விரோதம்?”

“மக்கள் சார்ந்த பிரச்னைகள் என்றால் பியூஷ் முன்னாடி நிற்பார். யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பார். இளம்பெண் வினுப்ரியா தற்கொலை விவகாரத்தில் போராட்டம் செய்ததோடு ஃபேஸ்புக்கிலும் அவர் பதிவுகள் போட்டதால் சேலம் காவல் துறையினர் என் கணவர் மீது கோபத்தைக் காட்டி இருக்கிறார்கள்.” 

“சிறைக்காவலர்கள் 30 பேர் சேர்ந்து என் கணவரை தாக்கியிருக்கிறார்கள்!”

“சிறையைவிட்டு வெளியே வந்தால் மீண்டும் பியூஷ், மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவாரா?”

“பியூஷின் அடையாளமே போராட்டம்தான். அவர் தொடர்ந்து அநீதிக்கு எதிராகப் போராடிக் கொண்டுதான் இருப்பார். ஒரு பியூஸின் போராட்டத்தை காவல் துறை அடக்க நினைத்தால் ஆயிரம் ஆயிரம் பியூஷ்கள் போராட வருவார்கள்” என்றார்.

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘சிறைக்குள் பியூஷ் மானுஷ், கார்த்திக், முத்து என 3 பேர் வந்தார்கள். அதில், பியூஷ் மானுஷ் என்பவரை கொஞ்சம் தட்டிவைக்கச் சொல்லி சேலம் காவல் உயர் அதிகாரியிடம் இருந்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு தகவல் வந்தது. செந்தில்குமாருக்கும் ஜெயிலர் மருதமுத்துக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்துவரும் நிலையில் இதைப் பயன்படுத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுபோல ஜெயிலர் அறைக்குள் பியூஷ் மானுஷை அடைத்துவைத்து செந்தில்குமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட சிறைக் காவலர்கள் அடித்து நொறுக்கிவிட்டு பியூஷ் மானுஷை ஜெயிலர் அடித்ததாக வாட்ஸ் அப் மூலமாகத் தகவலையும் அனுப்பிவிட்டார் செந்தில்குமார். ஆனால், பியூஷ் மானுஷ் உள்ளே வந்ததில் இருந்து ஜெயிலர் விடுமுறையில் இருந்துள்ளார்’’ என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்

ஏரிகளின் காவலர்!

பியூஷ் மானுஷ் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது தாத்தா காலத்திலேயே அவர்களது குடும்பம் சேலத்துக்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டார்கள். பியூஷ் மானுஷ் சரளமாக தமிழ் பேசுவார். அநீதிக்கு எதிராகவும், சூழலியல் செயல்பாட்டாளராகவும் இருக்கிறார். 2010-ல் சேலம் மக்கள் குழுவைத் தொடங்கி அழிவின் விழிம்பில் புதர் மண்டிக்கிடந்த 55 ஏக்கர் பரப்பளவு உள்ள மூக்கனேரியை தூர்வாரி ஏரிக்குள் 50-க்கும் மேற்பட்ட தீவுகளை உருவாக்கி அதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டிருக்கிறார். இதேபோல சேலம் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளை மீட்டெடுத்திருக்கிறார். சென்னை, கடலூர் பெருவெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர். இதற்காகக் கடந்த மாதம் சி.என்.என் - ஐ.பி.என் தொலைகாட்சி நடத்திய பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் பாராட்டும் பரிசும் பெற்றுள்ளார்.