Published:Updated:

முகங்கள் - ‘யோகா’ வைஷ்ணவி

முகங்கள் - ‘யோகா’ வைஷ்ணவி
பிரீமியம் ஸ்டோரி
News
முகங்கள் - ‘யோகா’ வைஷ்ணவி

முகங்கள் - ‘யோகா’ வைஷ்ணவி

முகங்கள் - ‘யோகா’ வைஷ்ணவி

ந்தோனேஷியாவில் சர்வதேச அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வைஷ்ணவியின் தந்தை சரவணக்குமார் ஒரு டிரைவர். தாய் விமலா, ஒரு பனியன் கம்பெனியில் தினக்கூலித் தொழிலாளி. சிறு வயதிலேயே யோகா போட்டியில் பல பதக்கங்களைக் குவித்துள்ள வைஷ்ணவியிடம் பேசினோம்.

“யோகா மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?”

“நான்காம் வகுப்பு படிக்கும்போதே யோகா கற்க ஆரம்பித்தேன். நன்றாக யோகா பயிற்சிகள் செய்வதாக என் பயிற்சியாளர் பாராட்டினார். யோகா பயிற்சியால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு கிடைப்பதை உணர்ந்தேன். யோகா செய்வதன் மூலம் கவனச்சிதறல் எதுவும் இல்லாமல் படிக்க முடிகிறது. அதேநேரத்தில், யோகா செய்யாத பல மாணவர்களிடம் கவனச்சிதறல் இருப்பதைக் காண்கிறேன். அவர்களையும் யோகா செய்யுமாறு சொல்லி வருகிறேன்.”

முகங்கள் - ‘யோகா’ வைஷ்ணவி

“யோகா போட்டிகளில் எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்கள்?”

“ஏழைகள் என்றால் புறக்கணிக்கப் படுவதும், பணக்காரர்கள் என்றால் முன்னுரிமை வழங்கப்படுவதும் யோகா போட்டிகளில் இருக்கிறது.

அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் வெளிப்படையாக என்னைப் பின்னுக்குத் தள்ளினார்கள். அதுகுறித்து கேட்டபோது, போட்டியில் பங்கேற்காத நிலை ஏற்படும் என்று மிரட்டினார்கள். ஏழைப் பிள்ளைகள் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள். ஆனால், அவர்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள். பணக்காரப் பிள்ளைகளின் பங்களிப்புக் குறைவாக இருக்கும். ஆனால், அவர்கள் முதல் இடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும்போது நம்மைப் பார்த்து, ‘தமிழ்நாடா?’ என்று ஏளனமாகக் கேட்பார்கள். நம் நாட்டில் நடக்கும் போட்டிகளிலேயே இவ்வளவு பிரச்னை என்றால், சர்வதேசப் போட்டிகளில் நிறைய பிரச்னைகள் இருக்கும். இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் ஏராளமான சாதனையாளர்கள் வருவார்கள்.”

“அரசிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?”
 
“ஏழை மாணவர்கள் சாதிக்கும்போது அவர்களை அங்கீகரிக்க வேண்டும். தமிழக அரசின் வாழ்த்துகளை எதிர்பார்த்தேன். ஆனால், இன்றுவரை அப்படி எதுவும் வரவில்லை. தமிழக அரசு, யோகாவை ஒரு பாடமாகக் கொண்டுவர வேண்டும். மற்ற பாடங்களுக்குத் தேர்வு வைப்பது போல இதற்கும் தேர்வுவைத்து பயற்சியும் போட்டியும் நடத்த வேண்டும். அதில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் மாணவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். அது மட்டுமின்றி, யோகா பயிற்சியால் மனவலிமை மற்றும் நினைவாற்றல் கூடுகிறது. எனவே, இதுபற்றிய விழிப்பு உணர்வை மேற்கொள்ள வேண்டும்.’’

முகங்கள் - ‘யோகா’ வைஷ்ணவி
முகங்கள் - ‘யோகா’ வைஷ்ணவி

‘‘போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?’’

‘‘ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் பயிற்சி செய்வேன். போட்டியில் பங்கேற்கும்போது மற்றவர்களைப் பற்றி என்றுமே யோசிப்பது இல்லை. நான் எதிர்கொள்ளும் நபர்களைப் பற்றிக்கூட நான் தெரிந்துகொள்வதில்லை. என் பங்களிப்பு என்ன? அதை நான் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற மனநிலை மட்டுமே இருக்கும். அதேபோன்று வெற்றி தோல்வி, இரண்டையும் சமமாகவே எடுத்துக்கொள்வேன். தோல்வி ஏற்பட்டால், என்னால் ஏற்பட்டதா என்று யோசிப்பேன். என்னுடைய தவறால் தோல்வி ஏற்பட்டதை உணர்ந்தால் அடுத்த போட்டியில் அந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன்.”

“உங்களின் அடுத்த இலக்கு என்ன?”

“ஒலிம்பிக்கில் யோகா சேர்க்கப்பட வேண்டும். அதற்கு அங்கீகாரம் அளித்து முன்னிலைப்படுத்த வேண்டும். அவ்வாறு நடந்தால் அதில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பேன். அது மட்டுமின்றி, உலக கின்னஸ் சாதனை நிகழ்ந்த வேண்டும் என்பது என் எதிர்காலக் கனவு.”

- கே.புவனேஸ்வரி