Published:Updated:

யார் இந்த ஜாகிர் நாயக்?

யார் இந்த ஜாகிர் நாயக்?
பிரீமியம் ஸ்டோரி
News
யார் இந்த ஜாகிர் நாயக்?

அலசல்

செய்திகளில் சென்ற வாரம் அதிகம் அடிபட்ட பெயர் ஜாகிர் நாயக். இஸ்லாமிய மதபோதகர். தினமும் பல லட்சம் பேர் இவரது யூடியூப் சேனலையும், தொலைக்காட்சி உரைகளையும் கேட்கிறார்கள். இஸ்லாமிய மதத்தின் பெருமைகளைச் சொல்லி வருபவர் ஜாகிர் நாயக். கடந்த ஜுலை 1-ம் தேதி பங்களாதேஷ் தலைநகரில் குண்டு வெடிப்பு  நிகழ்ந்தது. அதற்குக் காரணமான இளைஞர்கள் ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டவர்கள் என்ற செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்திய ஊடகங்களில் ஜாகிர் நாயக் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறார்.

யார் இந்த ஜாகிர் நாயக்?

மும்பையில் 1965-ல் பிறந்த ஜாகிர் நாயக், கர்நாடகா மாநிலத்தில் மருத்துவம் படித்தவர். இஸ்லாமியக் கோட்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டதால், மருத்துவத் தொழிலைக் கைவிட்டு முழுநேர மதபோதகர் ஆனார். அமெரிக்கா முதல் ஆசியா வரை கண்டம் விட்டுக் கண்டம் பறந்து மதப் பிரசாரம் செய்து வருகிறார். மாற்று மதத்தினரை இஸ்லாத்துக்கு அழைத்து வருவதும், மற்ற மதங்களின் கோட்பாடுகளை இஸ்லாத்தின் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு விவாதம் செய்வதும்  ஜாகிரின் பிரதானப் பிரசாரம். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரும் இந்து மதத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்ரீரவிசங்கரும் ஒரே மேடையில் குர்ஆனையும் பகவத்கீதையையும் பற்றி விவாதித்து இருக்கிறார்கள். ‘இஸ்லாமியம் இன்டர்நேஷனல் ஸ்கூல்’ என்ற பள்ளிக்கூடத்தை மும்பையிலும் சென்னையிலும் நடத்தி வருகிறார். ‘அமைதி’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை பங்களாதேஷில்  நடத்தி வருகிறார். ‘இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்’ என்ற நிறுவனத்தை வைத்துள்ளார். இப்போது அவர் சவுதி அரேபியாவில் இருக்கிறார். அங்கிருந்து தென்னாப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்துத்தான் இந்தியாவுக்கு வர இருக்கிறாராம்.

மதப் பிரசாரம் என்பதைத் தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துக்களை விதைப்பதில் ஜாகிர் நாயக் முக்கியமானவராக இருக்கிறார். ‘‘தீவிரவாதம், போர் ஆகியவற்றை இஸ்லாம் ஆதரிக்கிறதா?” என்ற கேள்விக்கு, “ஒரு நாட்டுக்காகப் போர் நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் அதை இஸ்லாம் ஆதரிக்கிறது. தனிப்பட்ட விஷயத்துக்காக நடந்தால் அதை ஆதரிக்கவில்லை” எனப் பதில் அளித்தார். தான் எந்த தீவிரவாதிகளையும், தீவிரவாத நடவடிக்கைகளையும் இதுவரை ஆதரித்தது இல்லை என்கிறார் ஜாகிர் நாயக்.

ஜாகிர் நாயக்கின் பாணிதான் இளைஞர்களை ஈர்க்கிறது.  ‘‘ஒரு குற்றவாளி போலீஸைப் பார்த்தால் பயப்படுகிறான். அப்படியென்றால், அந்தக் குற்றவாளியின் பார்வைக்கு அந்த போலீஸ் என்பவர் தீவிரவாதிதானே?” என்று கேட்கிறார் ஜாகிர். ‘‘பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் ‘தீவிரவாதிகள்’ என்றுதான் குறிப்பிட்டது. அதை நாம் ஏற்றுக் கொண்டோமா..?! இல்லையே! அவர்களை தேச விடுதலைக்காகப் போராடிய வீரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்றுதானே கொண்டாடுகிறோம். அதனால், யாரையும் முழுக்கத் தெரிந்துகொள்ளாமல், அவர்கள் எதற்காகப் போராடு கிறார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் அவர்களைத் ‘தீவிரவாதிகள்’ என்று சொல்லாதீர்கள்!’’ என்றும் சொல்லும் இவர்,  ‘‘வேறு வழியே இல்லையென்றால், கடைசி ஆயுதமாக ‘மனித வெடிகுண்டு தாக்குதலை’ மேற்கொள்ளலாம்!’’ என்றும் சொல்லி பீதியைக் கிளப்பி வருகிறார்.

இவர் அதிதீவிரமாகச் சொல்லி வரும் விஷயங்களை இஸ்லாமிய மக்களே ஏற்கிறார்களா என்பது சந்தேகமே. இவரது உடையே மதபோதகருக்கானது அல்ல என்றும் சிலர் சொல்கிறார்கள். இவர் மீது முஸ்லிம் அமைப்புகள் சில தடைகளை விதித்து உள்ளதாக இணையத்தில் செய்தி உலாவுகிறது.

எல்லா மதங்களும் அமைதியைத்தான் போதிக்கின்றன. அந்த அமைதியை மரணத்தின் மூலம் உருவாக்க நினைக்கிறார்கள் சிலர். மரக்கிளையின் நுனியில் அமர்ந்து கிளையை வெட்ட சிலர் நினைக்கிறார்கள். இத்தகைய பேச்சுக்கள் தீவிரவாதத்துக்கு எண்ணெய் ஊற்றுபவை.

- கார்க்கிபவா