
மிட்டாய் கடை
லந்து மிட்டாய்
“அடுத்தடுத்து தி.மு.க-வில் இணைய, பிற கட்சியினர் தேதி கேட்கிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தேதி தர முடியாதபடி திணற வேண்டி இருக்கிறது’’னு ஸ்டாலின் வருத்தப்பட்டிருக்கார். அவருக்காகச் சில யோசனைகள்...
* எல்லோரையும் கட்சியில் திணறத்திணற இணைக்க வேண்டும்னு ஒண்ணும் அவசியமில்லை எனக் கருதினால், இணைய விரும்புவோரில் தகுதியானவர்களை வடிகட்ட என்ன செய்யலாம்னா...அந்த 570 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்பதற்கான விடையைத்தான் தி.மு.க-வினர் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, 570 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது எனச் சரியாகக் கூறுபவர்களை மட்டும் கட்சியில் இணைக்கலாம்.

* இல்லைனா, ஸ்டாலினுக்குத் தெரியாமலேயே அவருடன் செல்ஃபி எடுக்கும் சேலஞ்ச் நடத்தி, அதில் வெற்றிகரமாக ஸ்டாலினுடன் செல்ஃபி எடுப்பவர்களை மட்டும் இணைக்கலாம்.
* இணைய விரும்புபவர்களை மொத்தமாக கடலில் குதிக்கவிட்டு அதில் யாரெல்லாம் கட்டுமரமாக மிதக்கிறார்களோ, அவர்களை மட்டும் கட்சியில் இணைக்கலாம்.
* வருபவர்களிடம் பாட்டுப் போட்டி நடத்தலாம். குறிப்பாக, ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...’ பாடலை சுருதி, தாளம் தப்பாமல் பாடுபவர்களை உடனே கட்சியில் இணைத்துக் கொள்ளலாம்.
* இதுவே, விரும்புபவர்கள் அனைவரையும் கட்சியில் இணைத்தே ஆக வேண்டும் என முடிவு எடுத்தால்...
* மறுபடியும், ‘நமக்கு நாமே 0.2’ என்ற வெர்ஷனில் பயணம் செல்லலாம். பயணத்தின்போதே இணைத்துக்கொள்ளலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...
* இணைவதற்கு வசதியாக ஆட்டோமேட்டிக் பூத்களை ஆரம்பிக்கலாம். அங்கு சென்று அங்குள்ள மெஷினில் கைரேகையைப் பதித்தால், ரெக்கார்டு செய்யப்பட்ட காணொளியின் மூலமாக ஸ்டாலின் திரையில் தோன்றுவார். சொல்லவேண்டியதைச் சொல்லி முடித்துவிட்டு இறுதியாக, ‘டீலா... நோ டீலா?’ எனக் கேட்பார். இணைய விரும்பினால் டீல் என்ற பொத்தானை அழுத்தினால் மட்டும் போதும். உறுப்பினர் அட்டை அப்போதே மெஷினில் பிரின்ட் செய்யப்பட்டு, உங்கள் கைகளில் சேர்ந்துவிடும். சூப்பர்ல... எனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ் கொடுங்கப்பா!
* இல்லையெனில், பி.ஜே.பிபோல மிஸ்டு கால் முறையில் சேர்க்கலாம். இப்படிச் செய்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், தஜகிஸ்தான் நாடுவரை உறுப்பினர்கள் சேருவார்கள். நான் சொன்னவைகளைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்திப்பீர்... செயல்படுவீர்!


- ப.சூரியராஜ்