
Special ஸ்டோரி!அலசல்
திரும்பும் திசை எல்லாம் ‘யோகா வகுப்பு’ போர்டுகள்... டி.வி சேனல்களில் யோகா பயிற்சி குறித்த நிகழ்ச்சிகள்... ஆன்மிக நிறுவனங்களின் யோகா மையங்கள் குறித்த விளம்பரங்கள் என எங்கு நோக்கிலும் யோகா மயம். கூடுதலாக இப்போது, பிரதமர் மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு, யோகாவுக்குப் பெரிதும் ஊக்கம் கொடுத்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. யோகா பயிற்சி மேற்கொள்வது மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தரும். எனவே, யோகா பற்றி விழிப்பு உணர்வு சமூகத்தில் அதிகரித்து வருவது நல்ல விஷயம்தான்.
ஆனால்...
புற்றீசல்களைப்போல வீதிக்கு வீதி புறப்பட்டுள்ள நர்சரிப் பள்ளிகளைப்போல, யோகா பயிற்சி மையங்களும் எங்கு பார்த்தாலும் பல்கிப் பெருகியுள்ளன. உடல், மன ஆரோக்கியம் என்பதைத் தாண்டி, பணம் பண்ணுவதற்கான பிசினஸ் ஆக யோகாவை மாற்றிவிட்டார்கள் என்பதுதான் கவலைக்குரியது. ‘10 நாட்களில் மூட்டுவலி மறைந்துவிடும்’, ‘15 நாட்களில் தொப்பை கரைந்துவிடும்’ என்றெல்லாம் கலர் கலராக ரீல்விட்டு, ஆயிரக்கணக்கில் பணம் கறக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய நிலை.

அறைகுறை மாஸ்டர்கள்!
யோகா மாஸ்டராக ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஏதாவது ஒரு யோகா பயிற்சி வகுப்பில் சேருகிறார்கள். அங்கு தரப்படும் சான்றிதழை வைத்துக்கொண்டு யோகா மாஸ்டர் ஆகிவிடுகிறார்கள். பின்னர் இவர்கள், தங்களிடம் வருபவர்களுக்கு ‘பயிற்சி’ அளித்து சான்றிதழ் வழங்குகிறார்கள். அதை வைத்துக்கொண்டு அவர்கள் மாஸ்டர் ஆகிவிடுகிறார்கள். இப்படித்தான், பெரும்பாலான யோகா பயிற்சி மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தகுதிகள் என்ன?
யோகா பயிற்சி ஆசிரியருக்கான தகுதிகள் என்ன என்பது குறித்து கோவையைச் சேர்ந்த யோகா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ஒன்றின் இயக்குநர் முனைவர் ஸ்ரீகுமார், “யோகா கற்றுக் கொண்ட எல்லோருமே யோகா பயிற்சியாளராக ஆகிவிட முடியாது. யோகா பயிற்றுநர் என்றால், அதற்குச் சில தகுதிகள் வேண்டும். பல பல்கலைக்கழகங்களில் யோகா பயிற்றுநருக்கான படிப்புகள் உள்ளன. அந்தப் படிப்புகள் மட்டுமே யோகா ஆசிரியராக ஆவதற்குப் போதுமானது அல்ல. யோகா பயிற்சியில் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது அனுபவம் இருக்க வேண்டும். மனித உடற்கூற்றியல் பற்றிய அடிப்படை விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். யோகா கற்றுக்கொள்ள வரும் நபர்களை எப்படி அணுகுவது, அவர்களின் உடல்வாகுக்கு ஏற்றவாறு எந்தெந்த ஆசனங்களைப் பயிற்றுவிப்பது, எந்தெந்த ஆசனங்களைத் தவிர்ப்பது, பயிற்சியின்போது தசைப்பிடிப்பு, சுளுக்கு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், அவற்றைச் சரிசெய்வது என்பன பற்றி எல்லாம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும், யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி மையங்களைத் தொடங்கலாம் என்ற நிலை இங்கு ஏற்பட்டுவிட்டது. பெருநகரங்களில் யோகா ஸ்டுடியோ என்ற பெயரில் ஏ.சி அறைகளில் யோகா வகுப்பு நடத்துகிறார்கள். இது, யோகாவின் அடிப்படையையே சீர்குலைக்கிறது” என்றார்.
முறையாக அல்லாமல், அரைகுறை ஆசிரியர் களால்தான் பெரும்பாலான யோகா பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?
தசைநார் கிழிந்தது!
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சரவணன், “நான் ஐ.டி-ல வேலை செய்றேன். கொஞ்ச நாளா எனக்கு வலது கையை சரியாகத் தூக்கமுடியலை. யோகா செஞ்சா சரியாப்போயிடும்னு என் ஃப்ரெண்ட் ஒருத்தர் சொன்னார். எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு கிளாஸ் இருந்துச்சு. அங்கே போய் சேர்ந்தேன். ரெண்டு மூணு யோகாசனம் சொல்லிக் கொடுத்தாங்க. ஒவ்வொரு நாளும் கை வலி அதிகமாயிட்டுத்தான் இருந்துச்சே ஒழிய குறையலை. ஒரு நாள் பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சிருச்சு. நான் ரொம்ப பயந்துபோய் டாக்டர்கிட்ட போனேன். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துட்டு, என் கையில தசைநார் கிழிஞ்சிருச்சுனு சொன்னாங்க. அதுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து அப்புறம்தான் சரியாச்சு. ரொம்ப சிரமப்பட்டுட்டேன்” என்றார்.
பயிற்சியாளர் மீது விழுந்து...
சென்னையைச் சேர்ந்த நகைக்கடை அதிபா் ஒருவரின் மனைவி மாமல்லபுரம் அருகே உள்ள யோகா பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து, இரண்டு வாரங்களாக யோகா வகுப்புக்குச் சென்றார். அவருக்கு, ஒரு நாள் புதிதாக ஓர் ஆசனத்தைப் பயிற்சியாளர் கற்றுக்கொடுத்துள்ளார். நேராகப் படுத்தவாறு கால்கள் இரண்டையும் தலைக்குப் பின்புறமாகத் தூக்கி வளைக்க வேண்டும். அந்தப் பெண்மணி 120 கிலோ எடை கொண்டவர். அதனால், அவர் மிகவும் தடுமாறியிருக்கிறார். பயிற்சியாளரோ, விடாப்பிடியாக அந்த ஆசனத்தைச் செய்யவைக்க முயன்றுள்ளார். நிலை தடுமாறி பயிற்சியாளரின் மீதே அந்தப் பெண்மணி விழுந்து, அந்தப் பயிற்சியாளருக்குக் கை எலும்பு முறிந்ததுவிட்டதாம்.
மகான் லேபிள்!
போதிய அனுபவம் இல்லாமல் யோகா சொல்லித் தருவதால் இவ்வாறு பலர் பாதிக்கப்படுகிறார்கள். உணவு அருந்திய மூன்று மணி நேரத்துக்குப் பிறகுதான் ஆசனங்கள் பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால், பல பள்ளிக்கூடங்களில் மதிய உணவு இடைவேளை முடிந்த உடனே யோகா வகுப்புகள் நடைபெறுவதாகப் புகார்கள் உள்ளன. குறிப்பிட்ட சில ஆசனங்களைப் பெண்கள் சில நேரங்களில் செய்யக் கூடாது என்பது போன்ற நுணுக்கங்கள் யோகாவை நன்கு கற்று அறிந்த அனுபவசாலிகளுக்கே தெரியும். ஆனால் சிலர், யோகா புத்தகங்களை மட்டும் வைத்துக்கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு யோகா சொல்லித்தரும் கொடுமையும் நடக்கிறது. அதுபோல, எந்த ஒரு ஆசனத்துக்கும் மாற்று ஆசனமும் இருக்கிறது. குறிப்பிட்ட ஓர் ஆசனத்தைச் செய்யும்போது அதற்கான மாற்று ஆசனத்தையும் செய்ய வேண்டும். இல்லையேல், பாதிப்புகள் ஏற்படும். ஒரு சில வாரங்களில் யோகா கற்றுக்கொண்டு, ‘மாஸ்டர்’ ஆகவேண்டும் என்று துடிப்பது அவருக்கும் நல்லதல்ல, அவரிடம் கற்க வருபவர்களுக்கும் நல்லதல்ல. யோகா ஆசிரியர் என்பதைத் தாண்டி ‘யோகா குரு’ ஆக வேண்டும் என்கிற ஆவலும் பலருக்கு இருக்கிறது. இமயமலையில் உள்ள ஒரு மகானிடம் யோகா கற்றுக்கொண்டவர் என்ற லேபிளுடன் உலாவும் ஒருவர் தன் சீடர்களை அனுப்பி, தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களைக் கவர்ந்து பெரும் புகழும், பணமும் குவித்த நபர்களும் இங்கு உண்டு.
பிரமாண்டமான முகாம்கள்!
ஒவ்வொருவருக்கும் உடலமைப்பு மாறுபடும். உடல் வளைகிற தன்மை, மனநிலை, உடல் பிரச்னைகள் என ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால், இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், ‘பிரமாண்ட யோகா முகாம்’ என்ற பெயரில் மிகப் பெரிய அரங்கம் அல்லது மைதானத்தில் அனைவரையும் அமரவைத்து, அனைவருக்கும் ஒரே மாதிரியான யோகா பயிற்சியை சிலர் அளிக்கிறார்கள். ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில், அவர்களின் உடல்நிலைமையைக் கேட்டறிந்து, பயிற்றுனரின் நேரடி மேற்பார்வையில் யோகா பயிற்சியைச் சொல்லித் தராமல் அனைவரையும் கூட்டமாக உட்காரவைத்துச் சொல்லித்தரும் முறை சரியானதா என்று யோகா மீது அக்கறை கொண்டவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

யோகாவும் சர்ச்சைகளும்!
யோகாசனம் என்பது உடல், மனம் ஆகியவற்றுக்கான மிகச் சிறந்த ஒரு பயிற்சி. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் யோகா பயிற்சியை ஒரு கலையாகவும், மருத்துவச் சிகிச்சையாகவும் செய்து வருகிறார்கள். ஆனாலும், யோகாசனத்தை ஒரு குறிப்பிட்ட மதத்துக்குச் சொந்தமானது என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதன் பின்னணியில், ஆன்மிக ரீதியாகச் செயல்படும் அமைப்புகள் உள்ளன. தங்களை பரிசுத்தமான வர்களாகக் காட்டிக் கொள்வதற்காகவே யோகாவைச் சிலர் கையிலெடுத்துக் கொள்கின்றனர். அவர்கள், ஆங்காங்கே யோகா பயிற்சி முகாம்களை நடத்துவதன் மூலம் நல்ல இமேஜை தேடிக்கொள்கிறார்கள். யோகா என்ற கலைக்கும், அதன் பல்லாண்டுகால பாரம்பரியத்துக்கும் உள்ள நற்பெயரை தங்களின் அமைப்புகளுக்கான மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதன்மூலம் தங்களின் ஆன்மிக அமைப்புகளுக்குள் ஆட்களைச் சேர்க்கிறார்கள். யோகாவை ஒரு ‘பேக்கேஜ் சிஸ்டம்’ ஆக மாற்றி பல லட்சங்களில் பிசினஸ் செய்யும் கார்ப்பரேட் சாமியார்களை, மகான்களைப்போல சிலர் போற்றுகிறார்கள். மக்களின் இந்த அங்கீகாரத்தை அறுவடை செய்வதற்கான ஆரம்பக்கட்டமாகத்தான் எஃப்.எம்.சி.ஜி மார்க்கெட்டில் இந்த ஆன்மிக அமைப்புகள் நுழைந்துள்ளன. யோக சூத்திரங்களை உருவாக்கிய முனிவரின் பெயரை தன்னுடைய ‘பிராண்டு நேம்’ ஆகச் சூட்டிக்கொண்டு, நுகர்வோர் சந்தையில் மற்ற பிராண்டுகளைச் சிலர் மிரட்டி வருகிறார்கள். யோகா கலையைக் காப்பாற்றுபவர்கள் போல சொல்லிக்கொள்ளும் சிலர்தான், வனங்கள் மற்றும் மலைகளை சட்டவிரோதமாக வளைத்து நாசப்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு.
‘அபரிமிதமான’ வளர்ச்சி!
உலக அளவிலும் யோகா பெரிய அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் யோகாவுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து செல்லும் யோகா ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளில் பெரும் கிராக்கி உள்ளது. உடல், மனம் ஆகியவற்றுக்கான பயிற்சி என்பதையும் தாண்டி நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை என்ற அளவுக்கு யோகா மாறியிருக்கிறது. ஆகவே, யோகாவை ஒரு கலையாகக் கற்க வேண்டும் என்று விரும்புபவர்களை விட, தங்களின் உடல் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இதை நோக்கி வருபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இந்த நிலையில், யோகா உட்பட மாற்று மருத்துவத்தை வளர்ப்பதற்காக மத்திய அரசு உருவாக்கிய ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான நிதியையும், யோகா என்ற பெயரால் இந்த ஆன்மிக அமைப்புகளே பெரும்பாலும் வாரிக்கொள்கின்றன. யோகாவைப் பயன்படுத்தி இப்படியும் சிலர் அபரிமிதமான வளர்ச்சியை அடைகிறார்கள்.
இந்தச் சூழலில், யோகா பயிற்சி மையங்கள் மற்றும் நிறுவனங்களைக் கண்காணித்து முறைப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஆண்டுக்கு ஒருமுறை யோகா தினம் கொண்டாடுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது மத்திய அரசு. ஆண்டுக்கு ஒரு முறை யோகா தினம் கொண்டாடுவதால் மட்டுமே யோகா கலை வளர்ந்துவிடும் என்று மத்திய அரசு நினைக்கிறதோ?
- தி.ஜெயப்பிரகாஷ்
கார்ப்பரேட் கட்டணம்!
சில யோகா பயிற்சி நிலையங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை டிரஸ்டாகப் பதிவு செய்துகொள்கிறார்கள். அவர்களிடம் பயிற்சி பெரும் நபர்களுக்குச் சில மாதங்களிலேயே யோகா பயிற்றுநர் அங்கீகாரத்தைக் கொடுத்து அவர்கள் சார்பில் பள்ளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு யோகா பயிற்சிகளை அளிக்க அனுப்பிவிடுகிறார்கள். அதற்காகப் பள்ளிகளிலிருந்தும், கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்தும் கட்டணத்தை வசூலித்துவிட்டு, அவர்களுக்கு கமிஷன் அடிப்படையில் சம்பளத்தையும் வழங்கிவிடுகிறார்கள். முறையான அனுபவமில்லாத நபர்கள் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வசீகரிக்கும் வசனங்கள்!
முறையான பயிற்சியும் அனுபவமும் இல்லாமல், மக்களை ஏமாற்றிப் பணம் கறக்கும் நோக்கத்துடன் யோகா பயிற்சி மையங்களைத் தொடங்கி இருப்பவர்கள், தங்களை அனுபவம் மிக்க யோகா ஆசிரியர்களாகக் காட்டிக்கொள்வதற்காகவே சில வழிமுறைகளைக் கையாளுகிறார்கள். அவை, தெள்ளத்தெளிவான ஆங்கிலம், கொஞ்சம் சமஸ்கிருதம், பகவத்கீதையில் இருந்து சில ஸ்லோகங்கள், அகத்தூய்மை, புறத்தூய்மை, ஆத்மா, கர்மா என்று சில பல வசனங்கள் என அள்ளிவிட்டு ஈர்த்துவிடுகிறார்கள். இதை நம்பி, அவர்கள் நடத்தும் வகுப்புகளுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் பணத்தைப் பறிகொடுக்கிறார்கள் பலர்.
யோகா மார்க்கெட்!
மியூசிக் ஹீலிங், ஹோலிஸ்டிக் ஹீலிங், மைண்ட்பாடி ஹீலிங் எனப் பல வகை ஹீலிங் உண்டு. வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கான யோகா என்ற பெயரில் நாய், பூனைகளுக்கு யோகா கற்றுத் தருகிறார்கள். உடலுறவுச் சிக்கலுக்கான தீர்வு எனச் சில ஆசனங்களை வெளிநாடுகளில் உருவாக்கி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதிலும், தாங்கள் கண்டுபிடிக்கும் ஆசனங்களுக்கு காப்புரிமையும் (Patent rights) கோருகிறார்களாம். யோகா படுக்கைகள், யோகா உடுப்புகள், யோகா தொடர்பான புத்தகங்கள், பொருட்கள் எனப் பெரிய சந்தையாகவே மாறிவிட்டது.
செக்ஸும் யோகாவும்!
டென்மார்க், ருமேனியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிலர், ‘Tantric Love’ என்ற பெயரில் ‘புதுமை’யான ஒரு யோகா பயிற்சியை சென்னையில் கற்றுக்கொடுத்தனர். ஆணும், பெண்ணும் இணைந்து நிர்வாணமாக யோகா பயிற்சி செய்வது குறித்து வீடியோவுடன் சொல்லித் தரப்பட்டது. அதை அவர்கள், ஆன்மிகத்தை அடைவதற்கான வழி என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். தேனாம்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் 100 இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி வெளியானவுடன் போலீஸார் அவர்களை கைதுசெய்தனர். 2011-ல் இது நடந்தது.