Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 13

மனச்சிறையில் சில மர்மங்கள் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
மனச்சிறையில் சில மர்மங்கள் - 13

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

கற்கை நன்றே!

வேணுவுக்கு கல்விமேல் அவ்வளவு காதல். “பி.ஹெச்டி முடிச்சிட்டா, காலேஜ் வாத்தியாரா வேலைக்குப் போயிடுவேன்ப்பா” என்று அப்பாவை தேற்றினான். அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா கொடுக்கும் பணத்தைப்பெற வெட்கப்பட்டான். அவனுக்கு அரசாங்கமே படிப்புக்கு உதவித்தொகை தரும். ஆனால், இவன் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அரசாங்க உதவிப் பணம் அவன் கையில் வந்த பாடில்லை. அடுத்த வாரம், அடுத்த மாசம் என்று இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

உதவித்தொகை கிடைத்திருந்தால் மன நிம்மதியுடன் படித்திருக்கலாம். அது கிடைக்கத் தாமதமானதால் இவன் ஒவ்வொரு விடுமுறைக்கும் வீட்டுக்குப் போகவே அஞ்சினான்.

கல்லூரியில் ஜூனியர்களுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தான். ஆனால் கறாராகக் காசு கேட்க அவனுக்கு மனம் வரவில்லை. அதனால் பலர், “அப்புறம் தர்றேன், காசா முக்கியம், நமக்குள்ள என்ன இதெல்லாம்” என்ற ரீதியில் அவனைத் தட்டிக்கழித்தனர்.

பணநெருக்கடி தலைதூக்க, மீண்டும் கல்லூரி அலுவலகத்துக்குப்போய், “ஸ்காலர்ஷிப் பணம் வந்துடுச்சா?” என்று குமாஸ்தாவை விசாரித்தான்.

அந்தப் பெண்மணி அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை, “போய் தபால்ல கேளுப்பா” என்றார்.

தபால் குமாஸ்தாவிடம் போய் நின்றான், “ரெஜிஸ்டர்ல நீயே பாருப்பா” என்றார்.

பார்த்தான், வந்திருக்கவில்லை. “ரெண்டு வருஷமாச்சு, இன்னும் வரலையே” என்று தபால் குமாஸ்தாவிடம் பெருமூச்சுவிட்டான்.

“என்ன வரலை?”

“ஸ்காலர்ஷிப் பணம்”

தபால் குமாஸ்தா குரலைத் தாழ்த்தி, “ஓ! நீ அந்தச் சாதியா?” என்றார்.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 13

இத்தனை நாள் கல்வி நிலையங்களில் பயணித்து வந்தவன் வேணு. இருந்தாலும் இந்தக் கேள்வி புதிதுபோல அவனை நோகடித்தது. எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான். அந்தத் தபால் குமாஸ்தா, “தம்பி” என்று அழைத்தார்.

ரோஷமாய் முகத்தை நிமிர்த்தி அவரைப் பார்த்தான் வேணு.

“ஸ்காலர்ஷிப் எல்லாம் அப்ளை பண்ணாத்தான் வரும். நீ கொடுத்த அப்ளிகேஷனை அந்த செக்‌ஷன்ல ஃபார்வர்ட் பண்ணலைன்னா ஸ்காலர்ஷிப் பணம் வராது.”

வேணுக்கு திக் என்றானது. 

“ஸ்காலர்ஷிப் தொகை அதிகமா இருந்தா நீங்க அவங்களைக் கொஞ்சம் கவனிக்கணும்னு எதிர்பாப்பாங்க.  உங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குறதுனால அவங்களுக்கு என்ன லாபம்னு யோசிப்பாங்க.”

அரசாங்கம் தகுதியான மாணவர்களுக்கு தரும் உதவித்தொகையில் இவர்கள் லாபம் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? அறச்சீற்றம் பொங்கி வர, வேணு மாணவர் இலாகா குமாஸ்தாவிடம் திரும்பிப் போனான், “மேடம் என் அப்ளிகேஷனை நீங்க கவர்மென்ட்டுக்கு ஃபார்வர்டு பண்ணீங்களா இல்லையா?”

“லஞ்ச் டைம்” என்று அந்தப் பெண்மணி அசட்டையாகப் பையைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து போய்விட்டார்.

வேணுவுக்கு மனம் ஆறவே இல்லை. சாதியின் அடிப்படையில் ஏற்பட்ட அவமானங்களும், அசெளகரியங்களும் அலை அலையாய் நினைவுக்கு வர, அன்றிலிருந்து தூக்கம் இழந்தான். ஆராய்ச்சியில்  கவனம் இழந்தான்.

யாரிடமாவது புலம்பித் தீர்ந்தால் மனம் ஆறுமே என்று தோன்ற, நண்பர்களிடம் சொல்லலாம் என்று நினைத்தான். இதனால் நண்பர்களுக்கு இவன் சாதி தெரிய வரும். அதன்பிறகு அவர்களுக்குள் இருக்கும் சமத்துவம் மாறிவிடுமோ என்ற அச்சம் அவனுக்கு.

ஆசிரியர்கள் யாரிடமாவது சொல்லலாம் என்றால், இவன் காதுபடவே அவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டைச் சாடியவர்கள் அவர்கள்.

எதற்கும் சம்பந்தமே இல்லாத வெளி மனிதரிடம் போய் பேசுவது என்று நினைத்து மனநல மருத்துவரைச் சந்தித்தான்.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 13

இவன் தனது கஷ்டங்களை எல்லாம் கொட்டித் தீர்த்தான், “எனக்கு என்ன பண்றதுனே தெரியல டாக்டர்?” என்று புலம்பி முடித்ததும் டாக்டர் கேட்டார், “உங்களோட கட்டமைப்புல இருக்குற யாராலயும் உங்களுக்கு உதவி செய்ய முடியலன்னா வெளியில வேற யாராவது அதிக செல்வாக்கு இருக்குற மனிதரால உங்களுக்கு உதவிசெய்ய முடியலாம் இல்லையா? உங்க ஊர் எம்.எல்.ஏ., உங்க சாதித் தலைவர்…”

“அதுபத்தி நான் யோசிச்சதில்லை.”

“திங்க் அபவுட் இட். உங்களுக்கு உதவிசெய்ற பவர் யாருக்கு இருக்குனு யோசியுங்க. பிரச்னையை மையமா வெச்சி யோசிக்காதீங்க, என்னென்ன தீர்வுகள் இருக்கும்னு விதம்விதமா திருப்பிப் போட்டு யோசியுங்க. Solution focusedஆ யோசிங்க.”

என்ன தீர்வு, யாரிடம் கிடைக்கும், என்றெல்லாம் யோசித்து, கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான் வேணு. பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த கம்ப்யூட்டரின் இணையதளத்தில் அந்த மனிதரின் இணையதள முகவரியைக் கண்டுபிடித்து, அவருக்கு இ-மெயில் அனுப்பினான்.

தன் பிரச்னைகளைச் சுருக்கமாக விவரித்து, ‘‘எனக்கு அருள்கூர்ந்து உதவுமாறு” மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.

சில நாட்கள் கழிந்த பின்னர் கல்லூரிக்கு வந்த போது, அவன் விடுதி நண்பர்கள் எல்லாம் கலவரத்தோடு இருந்தார்கள்.

“டேய் எங்கடா போய் தொலஞ்ச, வி.சி. ஆபீஸ்லேர்ந்து உன்னைத்தேடி ஆள் வந்தது. ஏதாவது பிரச்னையில மாட்டியிருக்கியா?”

துணைவேந்தர் அலுவலகத்துக்கு உடனே கிளம்பினான் வேணு. இவனைப் பார்த்ததும்  பியூன் உடனே உள்ளே ஓடிவிட்டு, திரும்ப வந்து, “போப்பா, சார் உன்னை உடனே வரச் சொன்னார்.”

துணைவேந்தர் கோபமாய் எழுந்து நின்றார், “இங்க நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன். உனக்கு ஏதாவது பிரச்னைனா என்கிட்டதானே வந்து சொல்லணும்.  அதை விட்டுட்டு ஜனாதிபதிக்கு இ-மெயில் அனுப்பியிருக்க!”

அதைக் கேட்டதும் வேணுவுக்கு ஒரே சந்தோஷம். ஜனாதிபதி தன் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறாரோ இல்லையோ, குறைந்தபட்சம் ஒரு கடைக்கோடி இந்தியனின் கண்ணீருக்குச் செவி சாய்த்திருக்கிறாரே!!

“உனக்கு என்ன பிரச்னை? எனக்கு விவரமா ஒரு லெட்டர்ல எழுதிக் கொடு” என்றார் துணைவேந்தர்.

வேணு தன் உதவித்தொகைப் பிரச்னையை எழுதித்தந்தான்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் துணைவேந்தர் அலுவலகக் குமாஸ்தாவைப் போய் பார்த்தான்.

“ஏம்பா அப்ளிகேஷனையே தப்பும் தவறுமா எழுதிட்டு, இதை எப்படி கவர்மென்ட்டுக்கு அனுப்புறதாம்? இந்தாப் பிடி, புது அப்ளிகேஷன், ஒழுங்க நிரப்பிக்கொடு.”

என் அப்ளிகேஷனையே தொலைத்து விட்டார்களா? இவனுடைய புதிய மனு அரசுக்குப் போய் சேர்ந்து இனிமேல் அவர்கள் இவனுக்கு உதவித்தொகையைக் கணக்கில் இட்டு, நிலுவையில் இருக்கும் தொகையையும் சேர்த்துத் தருவதற்குள் என் படிப்பே முடிந்துவிடுமே!

மனச்சிறையில் சில மர்மங்கள் - 13

மனசு சுமையில் துவள ஆரம்பிக்கும்போதே வேணுவுக்குக் கவலையைமீறி ஒரு புன்சிரிப்பும் மலர்ந்தது. இல்லைன்னா இருக்கவே இருக்கார் ஜனாதிபதி. அன்று டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது, “மனிதன் ஒரு சமூக விலங்கு. அதனால், நான்தான் டாமினென்ட் என்று உயர் அந்தஸ்துக்குப் போட்டிபோடும் தன்மை, மனிதர்களுக்கு உண்டு. ஆண், பெண் என்கிற பாலினப் போராட்டங்கள், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வர்க்கப் போராட்டங்கள், வல்லரசு... சாதா அரசு என்கிற உலக அரசியல், என்று எதுவாக இருந்தாலும், தன் ஆதிக்கத்தை நிலைநாட்டத்தான் மனிதர்கள் முயல்கிறார்கள்.  இதற்காக ஏதாவது பிரசார உத்தியைக் கையாளுகிறார்கள். ஆனால் அறிவியல் இதை எல்லாம் ஏற்பதில்லை.  All life has equal value. எல்லா சிங்கங்களும் சமம், எல்லா முயல்களும் சமம், அதேபோலதான் எல்லா மனிதர்களும், அடிப்படையில் சமம்.  யாரும் உயர்ந்தவரும் இல்லை, யாரும் தாழ்ந்தவரும் இல்லை. எல்லாமே அவரவர் பிழைப்பைச் சுலபமாக்கிக்கொள்ள பிறரைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் கடைசியில் இயற்கையில் இருக்கும் ஒரே விதி, survival of the fittest என்பதுதான்.  சூழலோடு பொருந்திப்போகத் தெரிந்தவர் மட்டுமே பிழைத்துக்கொள்ள முடியும். அநாவசிய வெட்கம், மானம், ரோஷம்கூடச் சில சமயம் பிழைக்க விடாது. அநாவசிய சென்டிமென்ட்டை விட்டுட்டு, எந்தச் சூழ்நிலையிலும் பொருந்திப்போய் பிழைக்கும் வழியைப் பார்.”

ஒன்றுமே நடக்காததுபோல புது அப்ளிகேஷனை துணைவேந்தரிடம் கொடுத்தான். “எல்லாம் சரியா எழுதி இருக்கேன், இந்தத் தடவை எப்படியாவது உதவித்தொகை கிடைச்சா நல்லா இருக்கும். அப்பா, ஆட்டோ ஓட்டி என்னைப் படிக்க வைக்கிறார். ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்களேன்” வெட்கத்தைவிட்டுத் தன் கண்ணீரைத் தடுக்காமல் அப்படியே வெளியேறிவிட்டான்.

துணைவேந்தருக்கு அவன் கண்ணீர் சங்கடமாக இருந்தது. “சரி, நீ போய் படிக்கிற வேலைய பாருப்பா. ஸ்காலர்ஷிப் பணம் வரும் வரைக்கும் இந்தப் பணத்தை செலவுக்கு வெச்சிக்கோ”, என்று தன் பாக்கெட்டில் இருந்து சில ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்துக் கொடுத்தார்.

முன்புபோல இருந்தால் வெட்கப்பட்டு, ரோஷப்பட்டு, ‘வேண்டாம்’ என்று வந்திருப்பான். ஆனால் இப்போது, “தாங்க் யூ வெரி மச். ஸ்காலர்ஷிப் வந்ததும் திருப்பித் தந்துடுறேன் சார்” என்று வாங்கிக்கொண்டான்.

“எனக்குத் திருப்பித் தர வேண்டாம், உன்னை மாதிரி கஷ்டப்படுற வேற யாருக்காவது நீ உதவி செய்தாபோதும்” என்று அவனை அனுப்பிவைத்தார் வி.சி.

(மர்மம் அறிவோம்)