
தொடரும் நீதிமன்ற போராட்டம்மோதல்

ஓராண்டுக்கும் மேலாக சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகைந்து கொண்டிருந்த விவகாரம், தற்போது தீப்பிடிக்கத் தொடங்கி உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், புதிய நீதிபதிகள் நியமனத்துக்காக, 12 பேர் பட்டியல் ஒன்றை, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பெயர்ப் பட்டியல், வழக்கறிஞர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ‘சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் அனுப்பப்பட்ட அந்தப் பட்டியலில், தகுதியற்றவர்களின் பெயர்கள் உள்ளன. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிகப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்று போராட்டத்தில் வழக்கறிஞர்கள் குதித்தனர். அதுதான், நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்குமான முதல் உரசல். அதில் உருவான பொறி, ‘ஹெல்மெட்’ கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தில் தீயாகப் பற்றியது. ‘நீதிபதிகளின் ஊழல் பட்டியல்கள்’ என்று வழக்கறிஞர்கள் பேனர் வைத்தனர். தமிழை வழக்காடு மொழியாக்கவேண்டும் என்று சொல்லி, தலைமை நீதிபதி முன்பு கோஷம் போட்டனர். உயர் நீதிமன்றப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தகராறு ஏற்பட்டது. இவை அனைத்தையும் காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக 44 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு, அடுத்த பேரதிர்ச்சியாக வந்தது, வழக்கறிஞர் சட்டத் திருத்தம்.
அந்தப் புதிய சட்டத்தில், நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரிகளுக்கு எதிரான தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது; நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, மேல் நீதிமன்றங்களுக்குப் புகார் அனுப்புவது; நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அறைகளில் போராட்டம் நடத்துவது; நீதித்துறை மற்றும் நீதிபதிகளுக்கு எதிராகக் கண்டனங்கள் அடங்கிய போர்டுகளைக் காண்பிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம். இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தரமாக அல்லது நீதிமன்றம் முடிவு செய்யும் காலம் வரை தடை விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இது, நீதிபதிகளுக்குப் பிடிக்காத வழக்கறிஞர்களைப் பழிவாங்குவதற்காகவே கொண்டு வரப்பட்டு உள்ளது என்று கொந்தளித்த வழக்கறிஞர்கள், காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றமும் அகில இந்திய பார்கவுன்சிலும், 126 வழக்கறிஞர்களை ஒரே நாளில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.

இத்தகையக் கொந்தளிப்பான சூழலில்தான் கடந்த திங்கள்கிழமை, சென்னை உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தினர். அதனால் 1,200 போலீஸார் பாதுகாப்புக்காக இறக்கப் பட்டனர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் முத்து ராமலிங்கம், “சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் பழிவாங்கும் போக்குடன் நடந்துகொள்கிறது. இப்போது இவர்கள் கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத்திருத்தம் தேவையற்றது. ஒழுங்கீனமான வழக்கறிஞர்களைத் தண்டிக்க ஏற்கெனவே உள்ள சட்டங்களில் இடம் உள்ளது. ஆனால், இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர்கள், தங்களின் வாதங்களை உறுதியாக எடுத்துவைக்கும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்குப் பிடிக்காத வழக்கறிஞர்கள் என யாரை வேண்டுமானாலும் பழி வாங்கலாம் என்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
வழக்கறிஞர் முத்து அமுதநாதன், “அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் உயர் நீதிமன்றம் நடந்து கொள்ளும் முறை, ஒரு மனிதனை உயிருடன் புதைப்பதற்குச் சமம். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, புதிய சட்டத்துக்குத் தற்காலிகத் தடை விதிப்பதாகச் சொல்லவில்லை. மாறாக, ‘அதன்படி நடவடிக்கை எடுக்கமாட்டோம்’ என்கிறார். எங்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்” என்றார்.

மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், “தற்போது, போராட்டம் தொடர்ந்து கொண்டே போவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுமே காரணம். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் நீதி செலுத்துவதில் சம உரிமை பெற்றவர்கள் என்று உச்ச நீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளின்படி வழக்கறிஞர்களுக்குச் சம உரிமை இல்லை. புதிய சட்டத்திருத்தம் தேவையற்றது” என்றார்.
மக்களுக்கு தடையின்றி நீதி கிடைக்க நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் வழிவகுக்க வேண்டும்.
- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, ப.சரவணகுமார்