Published:Updated:

தொடரும் விமான விபரீதங்கள்

தொடரும் விமான விபரீதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தொடரும் விமான விபரீதங்கள்

மாயமாய் மறைந்த அந்தமான் விமானம்!

தொடரும் விமான விபரீதங்கள்

லேசிய விமானம் எம்.ஹெச்-370, 2014-ம் ஆண்டு காணாமல்போய் இரண்டு வருடங்களாகப் பல நாடுகளின் உதவியோடு தேடிப்பார்த்து தற்போது அந்தத் தேடுதலை கைவிட மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் செய்தி வந்த நேரத்திலேயே சென்னையில் இருந்து அந்தமான் கிளம்பிய இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏ.என்-32 ரக விமானம் 29 பேருடன் மாயமாகி இருக்கிறது.

சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தி லிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுக்கு ஜூன் 22-ல் சென்ற ஏ.என்-32 ரக விமானப் படை விமானம் நடுவானில் திடீரென மாயமானது. 6 ஊழியர்கள், 23 ராணுவ வீரர்களின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. தேடுதல் வேட்டையில் 2 டோர்னியர் விமானங்கள், 12 கப்பல்கள், 112 படகுகள் ஈடுபடுத்தப்பட்டும் உருப்படியான தகவல்கள் இல்லை. விமானம் மாயம் தொடர்பாக சேலையூர் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் ‘அன்டனோவ்’ என்ற நிறுவனத்தின் பெயர் சுருக்கமே ஏ.என். இந்த விமானம் ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்துக்குப் பொருட்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தக்கூடியது. சுனாமி ஏற்பட்ட சமயத்தில் இந்த விமானம் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப் பட்டது. வாரத்தில் மூன்று நாட்கள் சூலூரில் இருந்து கிளம்பி, தாம்பரம் வந்து, அதன்பிறகு பொருட்களை ஏற்றிக்கொண்டு அந்தமான் நிக்கோபார் செல்லும். மாயமான நாளன்றும் அதுபோல தாம்பரத்தில் இருந்து பயணித்து இருக்கிறது.

முன்னாள் விமானப் படை அதிகாரி ஒருவர் நம்மிடம், ‘‘காற்றின் வேகத்தை எப்போதும் முன்கூட்டியே கணிக்க முடியாது. 23,000 அடி உயரத்தில் பறக்கும்போது காற்றின் வேகம் காரணமாக விமானம் திசை மாறி இருக்கலாம். காற்றுச் சுழலில் சிக்கி விபத்தைச் சந்தித்திருக்கலாம். இருந்தும், விமானத்தின் கறுப்புப் பெட்டி கிடைக்காமல் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. நிலப்பரப்புகளில் பறக்கும்போது, விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதை அருகில் இருக்கும் விமானத்தளங்களில் தரையிறக்க முடியும். ஆனால், கடல்பரப்பில் பறக்கும்போது கோளாறு ஏற்பட்டால், உடனே தரையிறக்க முடியாது. அதன் காரணமாகவே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் பறக்கும்போது அழுத்தம் காரணமாக விமானத்தின் திசையைக் கணிக்க முடியாது. இதை spatial disorientation என்று சொல்வார்கள்’’ என்றார்.

விமானம் மாயமானது குறித்து ஓய்வுபெற்ற கடலோரக் காவல் படை அதிகாரி சர்மாவிடம் பேசினோம். ‘‘சென்னையில் டோர்னியர் விமானம் காணாமல் போனபோதும் இதுபோன்ற சிக்கல்தான் ஏற்பட்டது. இதனால் எந்த இடத்தில் கடைசியாக ரேடாரில் விமானம் பதிவானது என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருக்கும். தேடுதல் பணியில் ஏதாவது பாகங்கள் சிக்கினால் மட்டுமே மேற்கொண்டு சொல்ல முடியும்’’ என்றார்.

- எஸ்.மகேஷ், மா.அ.மோகன் பிரபாகரன்

காணாமல் போன விமானங்கள்!

*
1937 ஜூலை 2-ம் தேதி உலகைச் சுற்றிவர அமீலியா இயர்ஹார்ட் என்பவர், அட்லான்டிக் கடலின் மீது பறந்து சென்றபோது விமானத்துடன் மாயமானார்.

1945 டிசம்பர் 5-ல், பயிற்சி விமானிகள் ஓட்டிச்சென்ற ஐந்து விமானங்களில் விமானப் படைக் குழுவினர் எட்டுப் பேரும் மாயமானார்கள். அவர்களைப் பார்த்து வர அனுப்பப்பட்ட மற்றொரு போர் விமானமும் காணாமல் போனது.

அர்ஜென்டினாவில் இருந்து சிலியின் சான்டியாகோ விமான நிலையத்துக்கு 1947 ஆகஸ்ட் 2-ல் ரெஜினால்ட் குக் ஒரு விமானத்தை ஓட்டிச்சென்றார். அந்த விமானம், சான்டியாகோ போய்ச் சேரவே இல்லை.

பெர்முடாவிலிருந்து ஜமைக்காவுக்கு 1949 ஜனவரி 17-ல் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே  விமான நிலையங்களுடன் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.

இதுவரை 134 விமானங்கள் மாயமாகி இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.