`சென்னையில் உண்ணாவிரதம்' என ரஜினி அறிவித்த பிறகு, `மெரினா சீரணி அரங்கம், காந்தி சிலை, வள்ளுவர் கோட்டம் என ஏதாவது ஒன்றில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி தாருங்கள்' என அன்றைக்கு சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமாரிடம் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா கடிதம் கொடுத்தார்.
ரஜினியின் உண்ணாவிரத ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், நெய்வேலி போராட்டத்தில் நடிகர் சங்கம் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. லண்டனில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், ''நடிகர் சங்கம் நடத்தும் போராட்டமாக இருந்தால் ரஜினிகாந்த் பங்கேற்பார். நெய்வேலி போராட்டத்தில் அவர் கலந்துகொள்ள மாட்டார். நடிகர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே நெய்வேலி போராட்டத்தில் கலந்துகொள்வது பற்றி முடிவு எடுப்போம்.'' என அறிவித்ததும் விஜயகாந்த் தடம் மாறுவதாக தகவல்கள் கிளம்பின.
சரத்குமார், நெப்போலியன், ராதாரவி, சந்திரசேகர் ஆகியோருடன் நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். ரஜினியின் உண்ணாவிரத அறிவிப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது. ``திட்டமிடப்பட்டு ஒரு போராட்டம் நடத்த முடிவு செய்து முதல்வரிடம் அனுமதி வாங்கிய நிலையில் தனியாக போராட்டம் தேவையா?'' என கூட்டத்தில் பேசப்பட்டது. இறுதியில், நெய்வேலி போராட்டம் திட்டமிட்டபடி, மிகவும் சிறப்பாக நடக்கும். இதை யாரும் தடுக்க முடியாது. ரஜினி தனியாக உண்ணாவிரதம் இருந்தால் இருக்கட்டும்'' என அறிவித்தார் விஜயகாந்த்.
``நெய்வேலி போராட்டம் சரியானதுதான். `இங்கே நாம் போராட்டம் நடத்தினால் 40 லட்சம் கர்நாடக தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். கொல்லப்படுவார்கள்' என ரஜினி பேசியிருக்கிறார். இது கன்னட வெறியர்களை அவரே தூண்டி விடுவதுபோல இருக்கிறது. இப்படி பேசுவதை ரஜினி நிறுத்திக்கொள்ள வேண்டும்.'' எனவும் சீறினார் விஜயகாந்த்.
விஜயகாந்தின் அறிவிப்பு தி.மு.க-வை கொதிக்க வைத்தது. ரஜினியின் உண்ணாவிரதத்துக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்திருந்தது. பாரதிராஜா நடத்தும் போராட்டத்தில் நடிகர் சங்கம் பங்கேற்கக் கூடாது என்பது தி.மு.க-வின் விருப்பம். ஆனால், அது நடக்கவில்லை. நெய்வேலி போராட்டத்துக்கு ஜெயலலிதாவின் ஆதரவு இருந்ததால் ரஜினியின் உண்ணாவிரதத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு அளிக்க வேண்டும் என தி.மு.க. நடத்திய காய் நகர்த்தல்கள் தோல்வியில் முடிந்தது. ``நெய்வேலியில் வன்முறை ஏற்படும் சூழல் இருப்பதால் தி.மு.கவைச் சேர்ந்த நடிகர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள்'' என அறிவித்தார் கருணாநிதி.
இதனால், 'நெய்வேலியில் நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன்' என சரத்குமார் அறிவித்தார். 'நெய்வேலி போராட்டம் பாரதிராஜா தலைமையில் அமைக்கப்பட்ட அமைப்பு நடத்தும் போராட்டம். இதற்கு நடிகர் சங்கம் சார்பில் ஆதரவு அளித்தோம். பாரதிராஜா முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். ஆனால், கருணாநிதியைச் சந்திக்கவில்லை. இதனால் நெய்வேலி போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிக்காமல் போனதில் தவறு கிடையாது. சென்னையில் போராட்டம் நடத்தலாம் என்கிற ரஜினியின் யோசனையை ஏன் பாரதிராஜா புறக்கணித்தார்? கிட்டத்தட்ட ரஜினியை எதிரியாகவே சித்திரித்துவிட்டார்கள்'' என கொதித்தார் சரத்குமார்.
இப்படி அரசியல் போராட்டமாக நெய்வேலி போராட்டம் மாறுவதற்கு மையப் புள்ளியாக இருந்தது பெங்களூரில் நடிகர் ராஜ்குமார் தலைமையில் நடத்தப்பட்ட பேரணி. தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என நடத்தப்பட்ட அந்தப் பேரணி பற்றி ரஜினி எந்தப் பதிலும் சொல்லவில்லை. `இதற்கு ரஜினி என்ன சொல்லப் போகிறார்?' என பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை பூதாகரமாகி நெய்வேலி போராட்டத்துக்கு விதை போட்டது.
ரஜினிக்கு எதிராக பாரதிராஜா களம் கண்டதால் அவருக்கு ராமதாஸின் ஆதரவும் அமோகமாக கிடைத்தது. `தமிழக விவசாயிகளுக்காக திரையுலகில் முதலில் குரல் கொடுத்த பாரதிராஜாவுக்கு எங்கள் ஆதரவு தொடரும். திரையுலக ஒற்றுமையைக் குலைக்க முயலும் தனிப்பட்ட மனிதர்களைக் கடுமையாக எதிர்க்கிறேன்' என அறிக்கைவிட்டார் ராமதாஸ். அவர் 'தனிப்பட்ட மனிதர்கள்' எனச் சொன்னது ரஜினியைதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ரஜினிக்கு எதிராக ராமதாஸ் அறிக்கைவிட்ட நிலையில், ரஜினிக்கு ஆதரவாக கர்நாடகாவில் இருந்து குரல்கள் கேட்டன. தமிழகத்துக்கு எதிராக அன்றைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, பாத யாத்திரையைத் தொடங்கியிருந்தார். ரஜினியின் உண்ணாவிரத அறிவிப்பை கிருஷ்ணா வரவேற்றார். 'நெய்வேலி போராட்டத்தை புறக்கணித்துவிட்டு தமிழர், கன்னடர் ஒற்றுமைக்காக முயற்சி செய்யும் ரஜினிக்கு எனது வாழ்த்துகள்' எனச் சொன்னார் கிருஷ்ணா.
(பகுதி 7 தொடரும்)
இந்தத் தொடரின் பிற பாகங்களைப் படிக்க காவிரியும் ரஜினியும் க்ளிக் செய்யவும்