ஹைதரபாத்: தனித் தெலங்கானா பிரச்னை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் தங்கள் ராஜினாமா கடிதங்களை நாளை சோனியா காந்தியிடம் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, ஜனவரி 28 ஆம் தேதிக்குள் தெலுங்கானா தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அந்தக் காலக்கெடு முடிந்த நிலையில், தெலுங்கானா ஆதரவு காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் நாளை டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து எம்.பி பதவியையும் கட்சி உறுப்பபினர் பதவியும் ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாதவ் யாஸ்கி கொளடா கூறுகையில், "எங்களுக்கு இங்கே பாதுகாப்பே இல்லை. வீட்டைத் தாக்குகிறார்கள். குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையில்தான் இருக்கிறோம். எம்.பி., எம்.எல்.ஏ.க்களைக்கூட கிராமங்களுக்குள் அனுமதிக்கப் மறுக்கிறார்கள். மத்திய அமைச்சர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள்." என்றார்.
தற்போது ஆந்திராவில் 42 காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளனர். இதில் 17 பேர் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள். அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நிலையில் தெலுங்கானா பிரச்னை ஆளும் காங்கிரஸுக்கு தலை வலியாகி உள்ளது.
இதனிடையே, உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தெலங்கானா போராட்டக்காரர்களின் தீவிரப் போராட்டத்தால் பதற்றம் நீடித்தவண்ணம் உள்ளது.