
பரிதவிப்பு

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கல்குவாரிகள் முறைகேடாகச் செயல்படுகின்றன என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. வெடிமருந்துகளைவைத்து மலைகளை உடைப்பதால், கல்துகள்கள் காற்றில் கலந்து மக்களின் சுகாதாரத்தைக் கடுமையாகப் பாதித்து வருகிறது. அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்துள்ளன. எனவே இந்த மாவட்டங்கள், வாழத் தகுதியில்லாதவையாக மாறிவருவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். இரூர் நடேசன், “பாடலூர் ஊராட்சி, சித்தளி, பேரளி, எளம்பலூர் ஆகிய பகுதிகள் மூன்று பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட அழகான பகுதிகள். இன்று அந்த மலைகள் எல்லாம் எங்கே போயின என்று தெரியவில்லை. பாடலூரைச் சுற்றியுள்ள ஊத்தங்கால், தொரணி, இரூர் உள்ளிட்ட கிராமங்களில் 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. வெட்டி எடுக்கப்படும் கற்களை உடைத்துத் தூளாக்கும் கிரஷர்களும் உள்ளன. இவர்கள், அரசின் எந்த விதிமுறைகளையும் மதிக்காமல் செயல்படுவதால், பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சக்திவாய்ந்த வெடிகளைவைத்துப் பாறைகளை உடைக்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக வெட்டி எடுக்கிறார்கள். இதனால், இந்தப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. பழைய வீடுகள் இடிந்து விழுகின்றன. வெடிமருந்துகளும், மலைத் துகள்களும் காற்றில் கலக்கின்றன. இதனால், நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்களால் பலர் உயிரிழந்து உள்ளனர். விளைநிலங்கள், குளங்கள், கிணறுகள் ஆகியவற்றில் வெடிமருந்துகள் மற்றும் கல்துகள்கள் கலப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. கால்நடைகள் மரணம் அடைகின்றன” என்றார்.

தொரணி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, “இங்குள்ள கிரஷரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறோம். எங்களால் இங்கு வாழ முடியவில்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழில் செய்யுங்கள் என்று குவாரி, கிரஷர் உரிமையாளர்களிடம் சொன்னதற்கு, ‘நீங்கள் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், சுரங்கத் துறை அதிகாரிகளிடம் போய் புகார் செய்யுங்கள்’ என்கிறார்கள். சுரங்கத் துறை அதிகாரிகளிடம் 10 முறை புகார் செய்தால், ஒருமுறை வந்துவிட்டுப் போவார்கள். அதிகாரிகள் சென்ற பிறகு, குவாரி உரிமையாளர்கள் எங்களைக் கூப்பிட்டு, ‘இதுபோல மீண்டும் நடந்தால் குவாரிக்குள்வைத்துப் புதைத்துவிடுவோம்’ என்று மிரட்டுகிறார்கள்” என்று அச்சத்துடன் சொன்னார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, ‘‘அரியலூரில் மண் திருடுகிறார்கள். பெரம்பலூரில் மலைகளைத் திருடுகிறார்கள். இரு மாவட்டங்களிலும், 1990-களில் இருந்து மிகப்பெரிய அளவில் கனிமவளக் கொள்ளை நடந்து வருகிறது. எல்லா வளங்களையும் அரசியல்வாதிகள் துணையோடு சுரண்டிவிட்டார்கள். இதனால், மழைவளம் குன்றி, நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. 30-40 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்து வந்தது. இப்போது, 150 அடிக்கு மேல் போய்விட்டது. குவாரி ஒப்பந்தக்காலம் முடிந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், ஒரு நிறுவனத்தினர் இன்னும் மலைகளை உடைத்து எடுத்துச் செல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகளுக்கும் குவாரி குத்தகைதாரர்களுக்கும் இடையே மறைமுகக் கூட்டு இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

சுவேதா குரூப் உரிமையாளர் தேவேந்திரனிடம் பேசினோம். “நாங்கள் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இல்லை. எங்கள் குவாரிக்கான ஒப்பந்தக்காலம் முடிந்துவிட்டது. காற்றில் தூசு பரவுவதைத் தடுப்பதற்குத் தண்ணீர் அடிக்க ஏற்பாடு செய்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறோம்” என்றார்.
தாசில்தார் சிவக்குமார், “யாருக்கும் ஆதரவாகச் செயல்படவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஜவுளிப் பூங்கா, தொழிற்சாலைகள் வர உள்ளதால் எந்தவிதக் குவாரிக்கும் அனுமதி கொடுப்பதில்லை. குவாரிகளில் எந்தவித முறைகேடும் நடப்பதில்லை” என்றார்.
கலெக்டர் நந்தகுமாரிடம் கேட்டதற்கு, “இப்போது தான் இங்கு வந்துள்ளேன். இதுதொடர்பாக, விசாரித்து விதிமுறைகளை மீறிக் குவாரிகள் செயல்பட்டால், உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
மக்களைக் காப்பாற்றுங்கள்!
- எம்.திலீபன்