Published:Updated:

கோயில்களில் சாதிப் பிரச்னை... நிறுத்தப்பட்ட திருவிழாக்கள்!

கோயில்களில் சாதிப் பிரச்னை... நிறுத்தப்பட்ட திருவிழாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கோயில்களில் சாதிப் பிரச்னை... நிறுத்தப்பட்ட திருவிழாக்கள்!

நாகப்பட்டினம்... சிவகங்கை... அரியலூர்... தீண்டாமை

கோயில்களில் சாதிப் பிரச்னை... நிறுத்தப்பட்ட திருவிழாக்கள்!

டி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டுவது வழக்கம். கூடவே, சச்சரவுகள் வருவதும் இப்போது வாடிக்கையாகிவிட்டது. இந்தப் பிரச்னைகள், சாதியை மையமாகக் கொண்டவை என்பதுதான் வேதனைக்குரியது.

மதம் மாறும் பீதியில் வேதாரண்யம்!

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கள்ளிமேடு என்ற கிராமத்தில் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலில், ஆடித் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில் பிரச்னை வெடித்தது.

“நாங்கள் பல தலைமுறைகளாக இங்கு வசிக்கி றோம். எங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் இருந்த கோயில், காலப்போக்கில் அவர்கள் வசம் ஆனது. அப்போதுமுதல், எங்களுக்கான உரிமைகள் மறுக்கப் பட்டு வருகின்றன. திருவிழாவின்போது, வழக்கமாக எங்கள் பகுதிக்கு வரும் அம்மன் உலா, சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. கோயில் நிர்வாகத்தை அணுகியபோது சரியான தீர்வு கிடைக்கவில்லை. எனவே, நீதிமன்றத்தை அணுகி, ஊருக்குள் அம்மன் உலா வருவதற்கு உரிமை பெற்றோம். ஆனால், நீதிமன்ற உத்தரவைக்கூட கோயில் நிர்வாகத்தினர் மதிக்கவில்லை. மேலும், எங்களுக்கு மண்டகப்படி வழங்கும் உரிமையும் தரப் படவில்லை. எனவே, எங்களுக்கான சுயமரியாதையும், மனித உரிமைகளும் மறுக்கப்படுவதால் இஸ்லாம் மதத்துக்கு மாறப்போகிறோம்” என்பது தலித் மக்களின் வாதம்.

“பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவின் போது, முதல் மண்டகப்படியும், கடைசி மண்டகப் படியும் கோயில் சார்பாக வழங்கப்படும். இடைப் பட்ட மூன்று நாட்களில் கள்ளிமேடு கிழக்கு, மேற்கு மற்றும் தாமரைப்புலம் ஆகிய கிராமங்கள் சார்பாக வழங்கப்படும். நீண்டகாலமாக இருந்துவரும் இந்த நடைமுறையை மாற்ற முடியாது. தலித் சமூகத்தி னருக்கு மண்டகப்படி வழங்க இயலாது” என்பது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாதம்.

தலித் மக்களின் மதமாற்ற அறிவிப்பால் அதிர்ந்து போன மாவட்ட நிர்வாகம், இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், உடன்பாடு ஏற்படவில்லை. அங்கு, ஆடித் திருவிழாவை நிறுத்திவைப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துவிட்டது.

13 வகை தீண்டாமை!

சிவகங்கை மாவட்டம் எம்.கரிசல்குளம் கிராமத் தில் உள்ள மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

கோயில்களில் சாதிப் பிரச்னை... நிறுத்தப்பட்ட திருவிழாக்கள்!

“இந்தக் கோயிலில் அனைத்து வகையான வழிபாடுகளிலும் தலித் அல்லாத பிற சமூகத்தினருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. எங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஃப்ளெக்ஸ் பேனர் வைக்கத் தடை, ஒயிலாட்டம் ஆடத் தடை, கும்மிக்கொட்டத் தடை, முளைப்பாரி எடுக்கத் தடை, திருநீறு எடுத்துப் பூசத் தடை என தலித் மக்களுக்கு எதிராக, 13 வகையான தீண்டாமைகள் உள்ளன. தலித் மக்களுக்கும் அனைத்து வகையான வழிபாட்டு உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும்” என கரிசல்குளம் தலித் மக்கள் சார்பிலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பிலும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. “நாங்கள் மட்டுமே காலம் காலமாக இந்தக் கோயிலில் வழிபாடு நடத்தி வருகிறோம். அந்த நடைமுறையை எங்களால் திடீரென மாற்ற முடியாது” என்பது பிற சாதியினரின் வாதம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து,

ஆர்.டி.ஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், இரு தரப்பினரும் தனித்தனியாக திருவிழா வைக் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

பூட்டப்பட்ட கோயில்!

அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயிலில் அய்யனார், வீரனார், முனியனார் என மூன்று சாமிகள் உள்ளன. அங்கு தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. “இந்தக் கோயிலில் கிடா வெட்ட, சாமி கும்பிட எங்கள் இனத்துக்கு மட்டுமே முழு உரிமை உண்டு. எங்கள் இடத்தில்தான் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பூசாரியாக இருந்த கணேசனின் மகளை, ஒரு தலித் இளைஞர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். தலித் மக்கள் இந்தக் கோயிலை தங்களுடையதுபோல கிடா வெட்டி சாமி கும்பிட் டனர். கணேசனை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமித்தோம். இந்த நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு வீரனார் கோயில் அமைக்கப் போவதாகச் சொன்னார்கள். அதற்கு மறுப்புத் தெரிவித்தோம். எங்கள் மீது அவர்கள் வழக்குப் போட்டார்கள். 2013-ல் தாசில்தார் தலைமையில் அமைதிப்பேச்சு நடந்தது. பிறகு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், விடுதலைச்சிறுத்தைகளும் இங்கு போராட்டம் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து, கோயிலைப் பூட்டி சீல்வைத்துவிட்டார்கள்” என்கிறார்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

கோயில்களில் சாதிப் பிரச்னை... நிறுத்தப்பட்ட திருவிழாக்கள்!

தலித் தரப்பினரிடம் பேசியபோது, “நாங்கள் பாட்டன், முப்பாட்டன் எனப் பல தலைமுறைகளாக வீரனார் சாமியைக் கும்பிட்டு வருகிறோம். வீரனாருக்குத் தனியாகச் சிலை அமைத்து வழிபடச் சென்றபோது அவர்கள் எங்களைத் தாக்க வந்தார்கள். இதை அவர்களுடைய கோயில் என்று சொல்வதே தவறு. அந்தக் கோயில் இருப்பது அரசுப் புறம்போக்கு நிலத்தில்தான். கடந்த 30-ம் தேதி கோயிலைத் திறந்தார்கள். கலவரச் சூழல் உருவானதால் கோயிலை மீண்டும் பூட்டிவிட்டார்கள். இந்தப் பிரச்னையால் எங்களுக்குக் கடைகளில் பொருட்கள் கொடுப்பதில்லை. ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இது நியாயமா?” என்கிறார்கள் தலித் மக்கள்.

சட்டரீதியான கடமை!

கோயில்களில் சாதிப் பிரச்னை... நிறுத்தப்பட்ட திருவிழாக்கள்!

இந்தப் பிரச்னை குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் அருணனிடம் பேசினோம். “கோயிலுக்குள் தலித் மக்களை அனுமதிக்கமாட்டோம், அவர்களுக்கு சம உரிமை வழங்க மாட்டோம் என்று பிற சாதியினர் சொல்லும் பிரச்னை நீண்டகாலமாக இருக்கிறது. 1939-ல் வைத்தியநாத அய்யர் தலைமையில் மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டம் நடந்து, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், அதுபோன்ற பிரச்னைகள் நீடிப்பது வேதனையானது. இந்தக் கோயில்கள் எல்லாமே இந்து அறநிலையத் துறையின் கீழ் வருபவை. எனவே, எல்லாச் சாதியினரும் அந்தக் கோயில்களுக்குள் நுழைய முழு உரிமை உண்டு. தலித் மக்களுக்கு இந்த உரிமையைத் தரமாட்டோம் என்று யாராவது சொன்னால், அந்த இடத்தில் தலித் மக்களின் உரிமைக்காக நிற்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அந்தக் கடமையை நிறைவேற்ற அரசு மறுக்கிறது. பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு சுமுகத் தீர்வுக்கு வந்தால் நல்லது. ஆனால் அரசு, கட்டப்பஞ்சாயத்து செய்கிறது. இரு தரப்பும் நாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை... எனவே, கோயிலைப் பூட்டி வைப்போம்... திருவிழாவை நிறுத்திவைப்போம் என்கிறார்கள். இது என்ன நியாயம்? சட்டப்பூர்வமான, தன் கடமையில் இருந்து அரசு நழுவலாமா? தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை ஏன் அரசு செயல்படுத்தவில்லை? அரசின் இத்தகைய போக்கு வேதனைக்குரியது. முந்தைய தி.மு.க அரசும் இப்படித்தான் நடந்துகொண்டது. சாதாரண மக்கள் மத்தியில் சாதிய வெறுப்பு உணர்வை வளர்க்கும் வேலையை சில சாதிய அமைப்புகளும், சில கட்சிகளும் செய்து வரும்போது, தீண்டாமைக்கு எதிரான பிரசாரத்தை அரசே ஏன் செய்யக் கூடாது? எல்லோரும் தமிழ் மக்கள்தான், தமிழக மக்கள்தான் என்பதை எடுத்துச் சொல்லி, சாதாரண மனிதர்களின் மனச் சாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும். அந்தக் கடமையை கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்கின்றன. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் போன்ற பாரம்பர்யம் மிக்க கட்சிகளும் தீண்டாமைக்கு எதிராகப் பிரசாரம் செய்ய வேண்டாமா? இது ஓர் உரிமைப் பிரச்னை என்பதால், அரசு, இதில் ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, சட்டரீதியாக அணுக வேண்டும்” என்றார்.

- எம்.திலீபன், அ.சையது அபுதாஹிர், த.அழகுதங்கம் படங்கள்: க.சதீஷ்குமார்